Wednesday, June 29, 2016

இருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டிய கிளாசிக் எழுத்தாளன்!

நண்பர் கிராபியன் ப்ளாக்கின் வெளிவந்திருக்கும் சிறுகதை தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை


தமிழ் இலக்கிய உலகில் சிறுகதையாளனாக நுழைவது எளிதானது. ஆனால் வெற்றிப்பெற்று தனக்கான இடத்தை தக்கவைப்பது மிக கடினமான காரியம். வலுவான முன்னோடிகள் சிலம்பம் வீசிச்சென்ற இடம் இது. நாவல், கவிதை ,சுயபுராணப் பத்திகள் இவற்றையெல்லாம் வெளியிட எளிதாக பதிப்பாளர்கள் கிடைக்கலாம். சிறுகதை தொகுப்பு வீச்சுடன் வரவில்லையெனில் படைப்பாளி சொந்தச்செலவில் தான் வெளியிடவேண்டும். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளை பெரும்பாலான பதிப்பகங்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. அதே நேரத்தில் மறைந்த எழுத்தாளர்களின் கதைகளை கிளாசிக் என மொத்தத் தொகுப்பாக்கி கெட்டி அட்டைப்பதிப்பில் 800, 1000 என விலை வைத்து நம் மீது வீசுகிறார்கள்.

சமீபத்தில் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் ஒருவரின் மொத்த தொகுப்பைப் பார்த்தேன். இப்போது அவர் உயிருடன் இருந்தால் இந்த விலை கொடுத்து அவரே வாங்க மாட்டார். காலமெல்லாம் வறுமையில் கழித்து, புறக்கணிப்பில் வாழ்ந்தவர் அவர். தன்னுடைய கதைகள் முழுத்தொகுப்பாகி ஆங்கில புத்தகங்களின் தரத்தில் வந்துள்ளதை அவரால் பார்க்க இயலவில்லையே என வருத்தப்பட்டேன். ஒரு படைப்பாளி உயிருடன் இருக்கும் போது புறக்கணிக்கப்பட்டு இறந்த பின் எழுதப்படும் அஞ்சலிக்குறிப்புகள் மூலம் மட்டுமே குவியும் கவனம் கவலைக்குரியது.
மறைந்த பின் ஒருவரின் படைப்புக்களை திறனாய்வு செய்து கட்டுரைகள் எழுதுகிறவர்கள் அவர் உயிருடன் இருக்கும் போது ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போதே கவனப்படுத்தி கொண்டாடியிருந்தால் இன்னும் கொஞ்சநாட்கள் கூட அவர் உயிரோடு இருந்திருப்பாரோ எனக்கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

கிராபியன் ப்ளாக் தனது பூமியின் மரணம்...! இன்னும் 5 நிமிடங்களில்... தொகுப்போடு சிறுகதை உலகில் களமிறங்கியிருக்கிறார். இலக்கியம்,சினிமா தொடர்பான கூட்டங்களில் ப்ளாக் எனக்கு பரிச்சயம். சமூகம், இலக்கியம், சினிமா, ஊடகம் என பன்முகத்தளத்தில் இயங்கிவருபவர். நண்பர்களிடம் உண்மையாக அன்பு பாராட்டுபவர். நடிக்கத்தெரியாதவர். அவருடைய கதைகளில் முதல் கதையாக வாசித்தது 'கள்ள மௌனம்'. புஷ்கின் என்ற இயக்குனரின் சமரசமற்ற வாழ்க்கையை கூறுவதாக அமைத்துள்ளது. வணிக சமரசம் எதுவுமின்றி படம் எடுக்கும் புஷ்கின் சமூகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார் என்பதை துல்லியமாக கூறுகிறது.குறைவான பக்கங்கள் உடைய இக்கதை பலமுறை என்னை படிக்கத்தூண்டியது. 'போஸ்டர்' என்ற கதை உதவி இயக்குநராகவே இருந்து எந்த அடையாளமும் கிடைக்காமல் இறக்கும் நபரின் கதை.சினிமா உலகம் பற்றிய வர்ணனைகள் மிகுந்த அர்த்த செறிவுடன் ப்ளாக்கிற்கு எழுத வருகிறது.அவர் விளையாடிய மைதானமல்லவா அது!

'கன்னியாட்டம் கதை' நகரத்தில் காதல் என்ற சொல் எவ்வாறு தீட்டுக்கழிந்து போயிருக்கிறது என்பதை அப்பட்டமாக சொல்கிறது. நகர ஓட்டத்தில் நல்ல வேலை, பதவி உயர்வு, குறைவில்லாத வருமானம் என எல்லாவற்றிலும் உயரும் சிபி சக்கன்,காதலில் மிக அற்பமாக தோற்றுப்போகிறான். தோற்கடிக்கும் அங்கயர்கன்னி பாத்திரத்தை நுட்பமாக படைத்துள்ளார் ப்ளாக். சம்பவங்களை கோர்த்துள்ள விதமும் பாராட்டுக்குரியது.
'மெய்யாலுமா' கதை செய்தித்தாளில் வேலைசெய்யும் எழுத்தாளனின் வாழ்க்கை சாகசங்களை விவரிக்கிறது. ஒரு எழுத்தாளனாக பெரும் வரவேற்பை அவன் சார்ந்து இருக்கும் செய்தித்தாளின் ஆசிரியரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரவுநேரம் இருந்தால் தானே எழுதுவாய் என்று இரவுப்பணியாக கொடுத்து வறுக்கிறார். வேறுவழியின்றி பதவி விலகல் கொடுத்து விலகுகிறான். ஒரு எழுத்தாளன் பத்திரிக்கையில் வேலை செய்யும் போது வரும் பிரச்னைகளை மெல்லிய அங்கதத்துடன் எடுத்துரைக்கிறார் ப்ளாக்.

ப்ளாக்கின் கதைகளில் என்னை கவர்ந்த முக்கிய அம்சம் மெல்லிய நகைச்சுவை. அதுவும் பிளாக் காமெடி எனப்படும் அவல நகைச்சுவை கதைகளை ப்ளாக்கால் நன்கு எழுதமுடிகிறது.முதல் தொகுப்பில் இத்தனை கதைகள் நன்றாக வந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். சொற்களிலும், உரையாடல்களிலும் இன்னும் கூர்மை வரப்பெற்றால் ப்ளாக் நல்ல சிறுகதையாளர்கள் வரிசையில் உரிய இடத்தைப்பிடிப்பார்.சிறுகதைத தொகுப்புக்கள் குறைந்து வரும் வேளையில் கிராபியன் ப்ளாக்கின் வருகை வரவேற்கத்தக்கது.
என்று அன்புடன்
விஜய் மகேந்திரன்

Saturday, June 18, 2016

''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”

''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்பர் குமரகுருபரனுக்கு வழங்கப்படுகிறது.


அவரது கவிதைகள் மிக அந்தரங்கமான வாசிப்பு அனுபவத்தை கொடுப்பவை. தனக்கே உரிய பிரத்யேக மொழியையும் , தனிமையின் நிழல்களை கொண்டாட்டமாக மாற்றும் தன்மையும் கொண்டவை. இருண்மையான காட்சிபடிமங்களை இவ்வளவு எளிதாக கவிதையாக மாற்றும் தன்மை குமரகுருபரனுக்கே உரித்தானது .இவரது ஆதர்ச கவிஞர்கள் ஆத்மாநாமும், பிரமிளும் என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். நவீன தமிழ் கவிதைகளுக்கு தனது"ஞானம் நுரைக்கும் போத்தல்" '' மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' என்ற இரு தொகுப்புகளின் மூலம் புதிய திசையை காட்டியவர் என்ற முறையில் இந்த விருதுக்கு முழுமையான தகுதி உடையவர் . அவருக்கு என் வாழ்த்துக்கள்!

தனிப்பட்ட முறையில் பெரும் கொண்டாட்ட குணத்தை உடையவர் குமரகுருபரன் . அவருடன் நானும், நண்பன் விநாயக முருகனும் சென்னையில் இருந்து காரில் விமர்சகர் ந.முருகேசபாண்டியன் அவர்களின் மகள் திருமணத்திற்காக மதுரை சென்றோம், கிடத்தட்ட ''தில் சாத்தா கே'' படத்தில் மூன்று நண்பர்கள் கோவா போவார்களே அதுக்கு இணையான உற்சாகமான அனுபவமாக இருந்தது. அந்த படத்தில் வரும் அமீர்கானின் ஆளுமைக்கு இணையான உற்சாகம் கொண்டவர் குமார்! விருதுக்குரிய கொண்டாட்டத்தை விரைவில் தொடங்கட்டும் ! வாழ்த்துக்கள்!
விருது பெற்ற தொகுப்பில் எனக்கு பிடித்த குமரகுருபரனின் கவிதை

குற்றம் தவிர்

தண்டனைகள்
நியாயமொன்றை நிறைவேற்றுகின்றன.
சில சமயங்களில் நினைவுறுத்துகின்றன.
அச்சுறுத்துகிற நியாயத் தீர்ப்பொன்றில்
கடைசிக்கணம் அறிந்தவர் யாருமில்லை
இறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.
நெஞ்சமுடைந்து இறப்போர் குறித்து
ஒரு உரை நிகழ்த்துகையில்
நிகழ்த்துபவரின் இதயத்திலிருந்து
சில துளிகள் வாயோரம் கசிகின்றன.
மெல்லத் துடைத்து விட்டு
புகைப்படம் ஒன்றிற்கு முகமளித்து
மேலும் பேச ஆரம்பிக்கையில்
நம்பிக்கையின் கடைசி தீர்ப்பைத்
தவறாக எழுதுகிறார்கள் அறியாமலேயே
இதயமிருக்கிறவர்கள் அத்துடன்
பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.

திறமையுடைய ஒரு எழுத்தாளரை விமர்சன நோக்கின்றி மேலோட்டமாகக் கிண்டல் செய்வது சரியா?

விஜய் மகேந்திரன்


vijay mahein
விஜய் மகேந்திரன்

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் இன்றைய எழுத்து எழுச்சி சாதாரணமான ஒன்றல்ல. அவர் அளவுக்கு இலக்கிய உலகின் புறக்கணிப்பின் அரசியலை ஒருவர் சந்தித்து இருந்ததால் என்றோ இலக்கியமும் வேண்டாம் ! எழுத்தும் வேண்டாம் ! என்று ஓடியிருப்பார்கள். பன்முக அரசியல் தொடங்கி ஊடக அரசியல் வரை விரிவாக விவரிப்பது அவரது எழுத்து. அவருடைய புனைவு திறமைக்கு சமீபத்தில் வெளிவந்துள்ள ” நீல ஊமத்தம்பூ ” தொகுப்பை படித்து பாருங்கள்! குறைந்தது மூன்று கதைகள் உலகத் தரத்தில் உள்ளன. இத்தனை திறமையுடைய எழுத்தாளரை மேலோட்டமாக கிண்டல் செய்யும் போக்கு கவலைக்குரியது. அவரது ”ஆயுத வியாபாரத்தின் அரசியல் ” போன வருடம் வந்த மிகச் சிறந்த அ – புனைவு புத்தகம். நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

ஒரு காலகட்டத்தில் அவரது புத்தகங்களை பதிப்பிக்க சரியான பதிப்பாளர் கிடைக்காமல் அவரே பதிப்பித்து விநியோகம் செய்ய மிகவும் திணறினார். இவரது திறமையை அறிந்த எதிர் வெளியீடு அனுஷ் அந்த குறையை அற்புதமாக போக்கினார். நீங்கள் எழுத மட்டும் செய்யுங்கள்! மற்ற கவலைகள் உங்களுக்கு வேண்டாம் என்றார் . அதன் பிறகு அவரது புத்தகங்கள் அழகான வடிவமைப்பில் வர ஆரம்பித்தன. பரவலாக அனைவருக்கும் கிடைத்தன. சித்தார்த்தனின் எழுத்துக்களை கொண்டாடும் அன்பர்கள் உருவாக ஆரம்பித்தனர். .

அவரது புத்தகங்களை யாரை வைத்தும் அவர் வெளியிட்டுக் கொள்ளட்டடும். அது அவரது உரிமை. அதற்கு ஏன் இத்தனை நபர்கள் பதட்டமடைகிறார்கள் தெரியவில்லை. கிண்டல் செய்து போஸ்ட் போடுகிறார்கள் என தெரியவில்லை.

நான் பேசிய முதல் இலக்கிய கூட்டம் தேவேந்திர பூபதி நடத்திய கடவு அமைப்பின் கூட்டம். கௌதம சித்தார்த்தனின் மூன்று சிறுகதை தொகுப்புகளை மையமாக கொண்டு பேசினேன். அந்த உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சித்தார்த்தன் உங்களுக்கு நன்றாக விமர்சன கட்டுரைகள் எழுத வருகிறது . தொடர்ந்து விமர்சன பகுப்பாய்விலும் ஈடுபடுங்கள் என்றார். அதன் பிறகுதான் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்தேன்.

இப்படி என்னை மட்டுமல்ல சிற்றிதழ் சூழலில் பல இளைஞர்களை வளர்த்துவிட்ட பெருமை அவரையே சாரும். நான் சொல்கிறேன். அவர்கள் சொல்ல மாட்டார்கள். கௌதம சித்தார்த்தன் என்னும் எழுத்தாளர் ஆல மரத்தின் விழுது மாதிரி எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பார். அவரை விட்டு விட்டு தமிழ் தீவிர இலக்கியத்தின் வரலாறை வருங்காலத்தில் பேச முடியாது.

விஜய் மகேந்திரன், பத்திரிகையாளர்; இலக்கிய விமர்சகர்.
முகப்புப்படம்: புதூர் சரவணன்.