Wednesday, May 6, 2020

நகரத்திற்கு வெளியே - விமர்சனம் - வே.மு.ஜெயந்தன்

நகரத்தின் உள்ளே இருந்து எழுத்தாளர் விஜய் மகேந்திரன் அவர்களின் நகரத்திற்கு வெளியே சிறுகதைகளை உற்றுப் பார்க்கிறேன்.

♪ கதை படித்து முடிக்கும் வரை புறச்சூழலுக்கு வாசகர் மனம் சிக்காமல் கதாசிரியர் ஆதிக்கத்தில் இருப்பதை சிறுகதை இலக்கணமாக எட்கர் ஆலன்போ குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட விஜய் மகேந்திரன் அவர்களின் சிறுகதைகள் காலத்தின் கண்ணாடியாகவே பார்க்கப்படுகிறது.
இவரின் எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி படிப்பவரின் மனதில் காட்சியமைப்பை உருவாக்கி விடுகிறது.குதிரைப் பந்தயம் போல தொடக்கம் முதல் இறுதி வரை கதை சொல்லும் உத்தி இவரை சிறந்த கதை சொல்லியாக உயர்த்தி வைக்கிறது.

சனிப்பெயர்ச்சி கதையின் தொடக்கத்தில் தினசரிகளில் வரும் ராசிபலன்கள்,கிசுகிசுக்கள் என்று கதையின் போக்கு பயணப்பட்டு கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளரின் பணி அனுபவங்களை கண்முன் காட்சிகளாக விவரிக்கும் எழுத்து நடையாகட்டும்,வலது கையின் கடைசி மூன்று விரல்களை கட்டை விரலால் மீண்டும் மீண்டும் ஜோசியர் எண்ணினார் என்பதை சொல்லும் விதமும்,நண்பர் நோவாவின் மனைவி அரசியல்வாதியின் முழு தகுதிகளையும் பெற்றிருந்தாள் என்று நக்கல் தொனியில் எழுதுவதாகட்டும் கதை முழுவதும் மட்டுமல்ல..இறுதியிலும் தினசரியை புருவம் உயர்த்தி பார்க்க வைத்து விடுகிறார்.

இருத்தலின் விதிகள் கதை வாசிப்பு பழக்கம் உள்ள இருவரை பற்றியது என்றாலும் கதை முடிவில் ஒரு அழுத்தமான பாதிப்பை கொடுத்து விடுகிறது.பழைய புத்தகங்களுக்கு இருக்கும் மதிப்புதான் மனிதனுக்கும் என்ற பேருண்மை.வீட்டை மறுக்கப்பட்ட உரிமைகளின் கழகம் என்கிறார்.

சிரிப்பு சிறுகதையில் பூங்காவில் சந்திக்கும் ஒருவனின் சிரிப்பு அமானுஸ்யமாக இருந்தாலும் இவரின் எழுத்துக்களால் மனக்கசப்புகள் அழுகையாக வழிகின்றன.வசைமொழிகளுக்கும் வண்ணங்கள் உண்டு என்று போகிற போக்கில் கருப்பு,சிவப்பு மற்றும் பச்சை என்று வானவில் கூட்டுகிறார்.

ராமநேசன் சிறுகதையில் வரும் கதாபாத்திரத்தை படிக்கும் வாசகர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்து இருப்பார்கள்.கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டுகளாக வாழ்க்கையோடு விளையாடியவன் சாமியாராக போக நினைத்து போலிச்சாமியாரிடம் சேர்ந்து திரும்பி வருகிறான்.மனநிகழ்வுகளையும் எழுத்தின் மூலம் வாசகனுக்கு கடத்தி விடுகிறார்.

மழை புயல் சின்னம் - சென்னை வானிலை அறிக்கை பற்றி மக்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலித்து கதையின் சம்பவங்கள் மூலம் வாசகர் மனதில் புயலை கிளப்பி விடுகிறார்.காதலியை நினைவுபடுத்தும் சம்பவங்கள் மின்விசிறிக்கு சமமாக சுற்றுகின்றன என எழுத்தின் மூலம் காதல் புயலை மனதில் மையம் கொள்கிறது.

நகரத்திற்கு வெளியே இன்னும் நந்தினி நர்சிங் ஹோம்கள் உள்ளன.இளம்பெண்களின் மனதில் காதல் ஏற்படுத்தும் அதிர்வலைகள்,அதன் பின்விளைவுகள் பற்றி விவரித்தாலும் நகர நாகரிகம் பதை பதைப்பை உண்டாக்குகிறது.நீல நிற ஆடை காதலுக்கு மட்டுமா?

அடைபடும் காற்று-சிறுகதை வடிவம் எழுதுபவரின் மனோதர்மம் என்று கூறுவார் புதுமைப்பித்தன் குறிப்பிடுவார்.பேரடைஸ்ஸா டிரைவ் இன்னில் சந்தித்து நட்பாகும் இரண்டு முதிய தம்பதிகளின் கதை என்றாலும் கடிதங்கள் வழியாக கதையை நகர்த்தும் போக்கு இரசிக்கும் விதமாக இருக்கிறது..கடிதம் ஒன்று...சுபம்..கடிதம் இரண்டு...எல்லாம் சுபமயம்.

ஊர்நலன் - அரசமரத்தடிக்கு வரும் ஊர் விஷயங்கள்,கிராமத்து திருவிழாவின் வழுக்கு மர நிகழ்வு,சாராயம் காய்ச்சுபவனின் கட்டப் பஞ்சாயத்து என நீளும் கதையில் செல்வேந்திரன் வளர்ச்சி வீழ்ச்சி இறந்த பின்னும் செய்தி தாளில் வாழ்கிறது.

காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன்- குழந்தைகளுக்கு கருப்பு தாத்தா,இளைஞர்களுக்கு கருப்பசாமி பெரியவர்களுக்கு கருப்பையா என்பவருக்கு 80 வயதிற்கு பின் கண்பார்வை ஔி இழந்து போனாலும் காதுகளால் தன்னை சுற்றி நடப்பதை கிரகித்து கொள்கிறார்.இளம் வயதில் கன்னுக்குட்டி முதல் திருமணப் பெண் வரை மீட்டு வந்தவரின் பேத்தியை மீட்க முடியாமல் போவது பெரும் சோகம்.கட்டிலை கடக்கும் குருவிகளை அடையாளம் காண்பவர்..தன்னை மற்றவர் திட்டுவதை காதால் கேட்பவர் முதல் முறையாக கண்ணில்லை என்று உணரும் இடம் சிறப்பு.

ஆசியா மேன்சன் - சினிமா மோகம் கொண்டு கோடம்பாக்கம் வரும் ராசுவை பற்றியது.வானின் நட்சத்திரம் போல சினிமா நட்சத்திரமாகி விடலாம் என்ற கனவின் மீது எழுதப்பட்ட கதை.ராசுவை சுற்றி நடக்கும் சம்பவங்கள் பய உணர்வை தூண்டி..நகரத்தின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.நுரைக்கும் பீரின் உத்வேகத்தோடு பயணிக்கும் கதையில் ஆசியா மேன்சனை கிழட்டு யானை என வர்ணிப்பது சிறுகதைக்குள் யானை சவாரி.

சிறுகதை என்பது சிறிய கதை என்ற பொருளில் இல்லாமல் புதிய இலக்கிய வடிவத்தை குறிக்கும் தனிச்சொல் என்று கூறுகிறார் பிராண்டர் மாத்யூ.
நகரத்திற்கு வெளியே சிறுகதைகளில் புதிய கதைக்களம்,நம் மனதிற்கு நெருக்கமான இடங்கள்,உரையாடல்களில் தனி கவனம் என நூல் முழுவதும் இலக்கிய இரசனை இதயம் கவர்கிறது.சிறுகதை விரும்பிகள் இவரின் எழுத்தை பிடித்து சென்று வரலாம் நகரத்திற்கு வெளியே..!
பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.

  - வே.மு.ஜெயந்தன்

Saturday, May 2, 2020

ஏ. ஆர் .ரஹ்மான் நவீன இந்திய திரை இசையின் அடையாளம்


வணக்கம் ...
இயக்குனர் விஜய் மகேந்திரன் அவர்கள் எழுதிய ஏ. ஆர் .ரஹ்மான் நவீன இந்திய திரை இசையின் அடையாளம் என்ற நூல் குறித்து ...
இந்த நூலின் முதல் மூன்று பதிப்புகள் மின்னம்பலம் பதிப்பகம் மூலமும் நான்காவது பதிப்பு புலம் பதிப்பகம் மூலமும் வெளிவந்துள்ளது

விலை 150/-

கரிமாவின் கருணையில் விளைந்த நவீன இசை
********************************************
ஒரு கணவனை இழந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் மனைவியை இழந்த ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

உலகமே கொண்டாடக்கூடிய இசைத்துறையில் ஆஸ்கர் நாயகனாக வளம் வரும் திலீப் என்ற ஏ. ஆர். ரகுமான் அவர்களை குறித்த இந்த நூலை வாசிக்கும்போது தன் கணவனை இழந்து தனது ஒன்பது வயது மகனுடன் வாழ்க்கையை மீட்க போராடிய ஒரு அன்னையின் வலிகளும் அந்த வலிகளுக்கு கிடைத்த மருந்தாகவே ஏ .ஆர் ரகுமான் அவர்களின் சாதனைகளையும் பார்க்கிறேன்.

இயக்குனர் விஜய் மகேந்திரன் மின்னம்பலம் டாட் காமில் தொடராக எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து அளித்திருக்கும் இந்த நூல்
ஏ .ஆர் ரகுமானின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடிய ,நம்பிக்கையை அளிக்கக் கூடிய ஒரு நூலாக இடம்பிடிக்கும்.

தனது பதினோரு வயதில்குடும்பத்தின் தலைமை ஏற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் ஒரு சிறுவன் தன் தாயின் வழிநடத்துதலோடு தன் தந்தை விட்டுச் சென்ற இசைக்கருவிகளின் துணையோடு இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பது சாதனை படைக்க எதுவுமே தடையில்லை என்பதை ஆழமாக புரிய வைக்கிறது
இந்த நூலில் பதினாறு பகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரைத் தொகுப்பில் சில துளிகளை மட்டும் நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

ஏ.ஆர் . ரகுமான் தன் தந்தை இறந்த பிறகு அவர் விட்டுச்சென்ற இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு குடும்ப சூழல்களை எதிர்கொண்டு வந்த நேரத்தில்தான் ரகுமானுக்கு அவரது அன்னை இசைக்கருவிகளைக் கற்றுக் கொள்ளும்படி ஊக்கம் அளிக்கிறார் . அவ்வாறு கற்றுக்கொண்ட இசையை வைத்து ரகுமான் தனது இளம் வயதிலேயே பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றுகிறார் .அந்தவகையில் அவர் இளையராஜாவிடம் பணியாற்றிய முதல் பாடலின் போது ரகுமான் சில நோட்டுகளை தவறாக வாசிக்க அதை பார்த்த இளையராஜா தன் கரங்களால் ரகுமானின் விரல்களைப் பற்றி சரியாக இசைக்க உதவியதாகக் குறிப்பிட்டிருப்பது இளையராஜாவின் பெருந்தன்மையையும் ஏ ஆர் ரகுமனின் திறமையையும் எடுத்துரைக்கிறது .

மேலும் இயக்குனர் விஜய் மகேந்திரன் இந்த கட்டுரையில் ஏ ஆர் ரகுமான் பற்றி அறியாத பல தகவல்களை தொகுத்து கொடுத்திருப்பது ஒரு இசையமைப்பாளர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த ஒட்டுமொத்த வலிகளையும் ,இனிமையான தருணங்களையும், தேடல்களையும் கண் முன்னே நிறுத்துகிறது. முதல் படமான ரோஜாவில் ஏ ஆர் ரகுமானின் இசையை நான் அறிந்து கொண்ட தருணத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். ரோஜா படம் 1992 ல் வெளிவந்தபோது எனக்கு ஒன்பது வயது
எனது அப்பா ரேடியோ, டேப் ரெக்கார்டர் ஆகியவற்றைப் பழுதுபார்க்கும் பணியை ஓய்வு நேரத்தில் செய்து வந்ததால் எங்கள் வீட்டில் எந்த நேரமும் பாடல்கள் ஒலித்த வண்ணமே இருக்கும் . பெரும்பாலும் எம்எஸ்வி பாடல்களும் இளையராஜாவின் பாடல்களும் அப்பாவின் விருப்பமாக இருக்கும் .இந்த சூழல்தான் எனக்கு பாடல்களை கேட்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நான் எப்போதும் விடுமுறைக்குப் பெரியப்பா வீட்டிற்கு செல்வது வழக்கம். அங்கு எனது அண்ணன் புதிதாக வரும் அனைத்து இசைகளையும் விரும்பிக் கேட்கும் பழக்கம் உடையவனாக இருந்தான். அவன்தான் எனக்கு விடுமுறை நாட்களில் கர்நாடக சங்கீதத்தை
அறிமுகப்படுத்தியிருந்தான். மேலும் பழைய பாடல்களை அவன் விருப்பமாகக் கேட்கும்போது நானும் ரசித்துக் கொண்டிருப்பேன் இப்படித்தான் நித்யஸ்ரீ மகாதேவன் உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் குரல்களை நான் கேட்டுப் பழகியிருந்தேன். அந்த முறை விடுமுறைக்கு சென்றிருந்தபோது ரோஜா படத்தில் வெளிவந்த "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது "என்ற பாடல் தொடர்ந்து வீட்டுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது .எம்எஸ்வி இளையராஜா இசையைக் கேட்டுப் பழகியிருந்த காதுகள் ஒரு புது இசையை உணர்ந்தன . ஆனால் அந்த வயதில் அதை பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த பாடலின் மேல் இருந்து கொண்டே இருந்தது .
பிறகு பள்ளியின் ஆண்டுவிழாவில் நடனமாடத் தேர்வு செய்யப்பட்ட பாடலான "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே " பாடல் நடன விரும்பியாக இருந்த என் கால்களுக்குத் தீனியாக இருந்தது. அதைத்தொடர்ந்து வந்த இந்தி படமான ரங்கீலா படத்தில் வரும் பாடல்களைக் கேட்கும்போது எனக்குள் ஏதோ பிடித்து என்னை ஆட்டுவிப்பது போல ஆடிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். பிறகு வந்த நாட்களில் நடனமாடத் தேர்வு செய்த பாடல்கள் அனைத்துமே ஏ.ஆர் ரகுமானுடையதாகவே இருக்கும். அந்தப் பாடல்களில் இடம்பெற்றிருந்த துள்ளல் இசை ஒரு போதையைப்போல் எங்களுக்குள் இறங்கியிருக்க வேண்டும் சில சமயங்களில் கேசட் டேப்ரெக்கார்டரில் சிக்கித் தேய்ந்தே போகுமளவு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியிருந்தது. அதன் பிறகான தேடல்களில் தான் ஏ ஆர் ரகுமான் அவர்களின் இசையை முழுமையாக அடையாளம் கண்டேன் .பம்பாய் படத்தில் வெளியாகியிருந்த "அந்த அரபிக்கடலோரம்'' பாடலுக்கான நடனத்தில் முதல் பரிசு பெற்றது இன்னும் நினைவில் இருக்கிறது.

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஏ ஆர் ரகுமானின் பாடல்களை கேட்டு வியந்திருக்கிறேன். விஜய் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளதைப் போல "வந்தே மாதரம்" ஆல்பம் வெளியானபோது ஒரு இனம்புரியாத உணர்வு தூண்டப்பட்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாட்டுப்பற்று மேலோங்கியதை மறுக்கவே முடியாது . இசை என்பது ஒருவருக்குள்ள உணர்வுகளை மகிழ்ச்சியாகவும்,சோகமாகவும் ,வீரமாகவும், வெளிப்படுத்திவிடும் அல்லது தூண்டிவிடும் என்பதற்கு ஏ ஆர் ரகுமானின் இசை ஒரு மிகப்பெரிய உதாரணம் .
இந்த நூல் ஆர் ரகுமான் பணியாற்றிய அனைத்து மொழிகளிலான திரைப்படங்களைப் பற்றியும் ,இயக்குனர்களை பற்றியும் ,பாடல் ஆசிரியர்களைப் பற்றியும் ,பாடகர்களை பற்றியும் என அவரோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் தொட்டுச் சென்றிருப்பதை எழுத்தாளரின் ஆர்வத்தையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. இதனால் ரகுமானைப் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் கூட இந்தத் தொகுப்பை படிப்பதன் மூலம் அவருக்கு நெருக்கமானவர்களாக தங்களை உணர முடியும். இந்த நூலில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள சில பாடல்கள் நம் அனைவர் மனதிலும் தேசியகீதங்களைப் போலவே இன்னும் இருக்கின்றன. " சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை " என்ற பாடல் இசையைக் கேட்டவர்கள் சிறகை விரிக்காமல் இருந்திருக்கவே முடியாது . "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலைக் கேட்ட யாரும் அழுகாமல் இருந்திருக்க முடியாது .

கவிப்பேரசு வைரமுத்து , வாலிபக் கவிஞர் வாலி ஆகியோர் வரிசையில்
ஏ .ஆர் ரகுமானுக்காக வரிகளைச் சமைத்தளித்த பழனிபாரதி அவர்கள் எழுதிய சில பாடல்களில் "நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்" பாடல் இன்றும் நம் விருப்ப பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியர்கள் தேன்மொழி தாஸ் ,கபிலன் ஆகியோரின் அனுபவப் பகிர்தலும் ரகுமானிடம் இருந்த தேடல் மனப்பான்மையையும் புதியவர்களை அங்கீகரிக்கும் பண்பையும் நமக்குச் சொல்லிச் செல்கின்றன.
ஏர்ஆர்.ரகுமானின் இசைப்பயணத்தில் அவர் அறிமுகப்படுத்திய மற்றும் அவருடன் பணியாற்றிய அவரது ஆர்கெஸ்ட்ராவில் அனைத்து இசைக்கலைஞர்களும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை
ஏ.ஆர்.ரகுமான் வேலைகளுக்கு நடுவிலும் பாலசந்தர் அவர்களின் "பார்த்தாலே பரவசம்" படத்திற்கு இசை அமைத்த நினைவுகளை பாலச்சந்தரே பாராட்டி நினைவு கூர்ந்திருப்பது ஏ ஆர் ரகுமானின் நன்றி உணர்வை
ஆளுமைகளிடம் அவர் கொண்டிருந்த மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.

அடுத்தடுத்து பல படங்களில் அமைந்த பிரபுதேவா ஏ .ஆர். ரகுமான் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைவரையும் ஆட்டம் போட வைத்திருந்தன. மின்சார கனவு படத்தில் ரகுமான் இசையில் வெளிவந்த "தங்கத் தாமரை மகளே" என்ற பாடல் இசைக்காகவும், எஸ்பிபி அவர்களின் குரலுக்காகவும், காட்சிகளுக்காகவும், பெரிதும் ரசிக்கப்பட்டது.
இசைத்துறையில் ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிய மின்மினி, உண்ணி மேனன் ,சுரேஷ் பீட்டர்ஸ் ,ஷாகுல் ஹமீத் மால்குடி சுபா ,ஸ்ரீநிவாஸ், ஹரிஹரன் நரேஷ் ஐயர், நித்யஸ்ரீ மகாதேவன் அனுபமா ,வசுந்தரா, சங்கீதா சஜித் சுக்விந்தர் சிங், சங்கர் மகாதேவன் ஆகிய பாடகர்களின் குரல்கள் ரகுமானின் இசையோடு சேர்ந்து நம்மை மயக்கி வைத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

ரகுமான் எப்படி தமிழ் ரசிகர்களைத் தனது இசையால் மயக்கினாரோ அதேபோல இந்தியிலும் இவரது இசைக்கு மயங்காதவர்கள் இல்லை சொல்லப்போனால் இந்தியில் இளையராஜா அவர்கள் தவறவிட்ட இடத்தை ரகுமான் சரியான தனது திட்டமிடலாலும் உழைப்பாலும் சாத்தியப்படுத்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்றே சொல்லவேண்டும் .

ரகுமான் இந்தியில் அறிமுகமான ரங்கீலா படத்தின் பாடல்களை கேட்டு நடனமாடாதவர்கள் இருந்தால் அதிசயமே. சக கலைஞர்களை பாராட்டுவது, கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்ப்பதும் ,நன்றியை மறக்காமல் இருப்பது, பாராட்டுகளையும் வெற்றிகளையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்து வருவது,புதிய திறமைகளைத் தேடி வாய்ப்பளிப்பது போன்ற செயல்களே ரகுமானின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணிகள். ஆம் அதுதான் இந்தியாவை உலகமே திரும்பிப்பார்க்க வைத்த ஒரு தருணம் ஸ்லம்டாக் மில்லினருக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய ரகுமான் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று மேடையில் தமிழை உயர்த்திப் பிடித்தார். இத்தனை புகழ்பெற்ற ரகுமான் பொதுவாக இசை அமைப்பதற்கு இரவையே தேர்ந்தெடுத்தார் என்று விஜய் மகேந்திரன் குறிப்பிடுவது ஒரு படைப்பாளி ஒரு படைப்பை ஆக்குவதற்கான சரியான தருணமாக தேர்ந்தெடுப்பது இரவைத்தான் என்பது புலப்படுகிறது.

மேலும் தனது பல வெற்றிகளுக்குப் பிறகு தான் தனது அப்பாவுடன் வாழ்ந்த பழைய வீட்டிற்கு சென்ற ஏ ஆர் ரகுமான் அங்கிருந்த தனது நண்பரின் தாயாரிடம் நடந்த உரையாடலுக்குப் பிறகு இசையை தேர்ந்தெடுப்பவர்களுக்கான ஒரு தனிஅங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் தொடங்கப்பட்ட சொல்லப்படும் கே எம் மியூசிக் கன்சர்வெட்டரி மூலம் பல மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பது ரகுமானின் தொலைநோக்கு மனதிற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது .
இப்படியாக தனது இளம் வயது கடினங்களை, வலிகளை தனது தாயான கரிமாவின் துணையுடன் வெற்றிப்பாதையாக மாற்றிக்காட்டிய
ஏ .ஆர். ரகுமான் இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடியாக இருப்பார் என்பதிலும் மேலும் உலகெங்கிலும் இந்தியாவின் புகழை எதிரொலிக்கச் செய்வார் என்பதிலும் எந்த விதமான ஐயமுமில்லை.

இப்படியாக ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டி ஒரு தொகுப்பாக இந்த சமூகத்திற்கு அளித்திருக்கும் இயக்குனர் விஜய் மகேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

- அம்பிகா குமரன்.

நகரத்திற்கு வெளியே - விமர்சனம்

எதார்த்தங்களை பதிவு செய்யவும்,
தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒரு படைப்பு வாசிக்கப்படும் போது அது வாசிப்பர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், அந்த தாக்கம் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வில் நடந்து ஏதோ ஒரு நிகழ்வின் நினைவுகளுக்கு நிச்சயம் அழைத்து செல்லப்படுவார்கள்....

ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதே உண்மையான சிறந்த படைப்பாகும்... நகரத்தின்உள்ளே இருந்து கொண்டு
நகரத்தின் வெளியே சமகால மனிதர்களின் இத்தியாதிகளை மிக கச்சிதமாக சொல்லி இருக்கிறார் அண்ணன்...

ஒரு புத்தகம் படிக்க நேரும்போது
அவை நம்மை எந்த வகையில் பாதிக்கிறது என்பதிலேயே படைப்பின் வெற்றி இருக்கிறது...
அவ்வகையில் அண்ணன் விஜய் மகேந்திரன்
படைப்பு ஏக நிகழ்வுகள் என்னை மட்டுமல்ல மிகுதியான மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்தவையாக தான் இருக்கும்...

பெரும்பான்மை மனிதர்கள் தனது வாழ்வின்
இளமைக்காலங்களை
(குறிப்பாக 1990, 2000, 2010களில் ) நகரவாழ்க்கை அனுபவித்தவர்களாக தான் இருப்பார்கள்...
நகர வாழ்வு பெரும்பாலும் எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோருக்கு
நரக வாழ்வாகவே இருந்திருக்கிறது
தனியாக இந்த படைப்பு வாசிக்கும் போது தனிமையில் உங்கள் உதடுகள் மவுனமாக புன்னகைக்க நேரும் அனேகமான இடங்களில் படைப்பாளியின் அனுபவம் அவரது வெற்றியை அநேக வாசிப்பாளர்களிடம் கொண்டு சேர்த்து விடும்....

ஒரு படைப்பாளியின் வெற்றி,
தனது அனுபவத்தை வாசிப்பவரின் அனுபவத்தோடு ஒருங்கினைக்கவும் அந்த ஒரு வினாடியில் வாசகரின் முகத்தில் ஒளிரும் புன்னகை தான்.... அந்த வகையில் அநேக இடங்களில்
புன்முறுவல், வாய்விட்ட சிரிப்பு, சோகம் என பல்வேறு உணர்வுகளை என்னால் தன்னிச்சையாக(அனிச்சையாக ) வெளிப்படுத்த முடிந்தது....

#நகரத்திற்கு_வெளியே....
#விஜய்_மகேந்திரன்
 
வாசிக்க வாய்ப்பளித்த
அண்ணன்
விஜய் மகேந்திரன்
அவர்களுக்கு என நன்றி.... வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐 #லெனின்பழனியாண்டி