Saturday, January 10, 2015

சாமானிய மனிதனின் எதிர்குரல்- இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள்

எனது நண்பரும், தமிழின் தற்கால கவிஞர்களில் முக்கியமானவருமான இளங்கோ கிருஷ்ணனுக்கு சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின்சார்பில் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் எழுத்தாளர் விருது கிடைத்துள்ளது. நடுவர்களாக இருந்து ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் மிகச்சரியாக தேர்வு செய்துள்ளனர்.

எனக்கு தெரிந்து 2005 ஆம் ஆண்டு முதல் இளங்கோவின் கவிதைகளை சிற்றிதழ்களில் படிக்க ஆரம்பித்தேன். இன்று பெரிய இதழ்கள், இணைய இதழ்கள் என்று பரவலாக இயங்கிவருகிறார் இளங்கோ. கவிதைகள் தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் சென்று இலக்கிய கூட்டங்களில் விமர்சன உரைகளும் ஆற்றியுள்ளார். அந்த விமர்சனக் கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது அவசியம். நாவல், சிறுகதை, கவிதை, பத்திகள் என்று பல்வகைப்பட்ட புத்தகங்கள் பற்றி இளங்கோ எழுதியுள்ளவை இலக்கிய ரசனையையும், புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாசகர்களுக்கு உதவும். இளங்கோ கிருஷ்ணனின் கவிதை குறுங்கதைகள் அடிப்படையில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளன் என்ற முறையில் அதிகம் கவர்பவை. அவர் கவிதை தவிர்த்து சிறுகதைகளும் வருங்காலத்தில் எழுதவேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளங்கோவின் கவிதைகள் உரைநடைக்கு அருகில் இயங்குபவை. அடர்த்தியான கவித்துவ மொழியில் எழுதப்பட்டிருக்கும். அதிகாரத்தை எண்ணி பகடி செய்யும் கவிதைகளும் அவரிடம் அதிகமுண்டு. அவரது காயச்சண்டிகை தொகுப்பில் உள்ள ஹிட்லர் கவிதை இதற்கு சிறந்த உதாரணம். ஜெர்மனியில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஹிட்லரின் முகம் ஒருநாள் கண்ணாடியில் பார்க்கும் போது பார்த்தவுடன் சிரிக்கத்தூண்டும் சாப்ளினின் முகமாக மாறிப்போகிறது. நான் தான் ஹிட்லர் என்று சொல்லியும் கேளாமல் மக்களும், குழந்தைகளும் அவரைப்பார்த்து சிரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கேலியும்,கிண்டலும் தாங்க முடியாமல் ஹிட்லர் ஓட ஆரம்பிக்கிறார். அப்போது அவரது நடை சாப்ளினைப் போலவே மாறிப்போயிருந்தது என கவிதையை முடிக்கிறார் இளங்கோ. ஒரு அதி நவீனக் கதை போல தோன்றும் விஷயத்தை அற்புதமான கவிதையாகவே எழுதியிருக்கிறார். பட்சியன் சரிதம் தொகுப்பில் உள்ள முதல் கவிதையான 'ஆர்க்கிமிடிஸ் பூமியை படித்துக்கொண்டிருக்கிறான்' சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான கவிதை. நாடு முழுவதும் நடக்கும் பாலியல் பலாத்காரங்களையும், அரசியல் வன்முறைகளையும் நினைவுப்படுத்தி படிப்பவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது. இளங்கோவின் கவிதைகளில் தத்துவங்களும் அதிகமாக தென்படும். சமகால கவிஞர்களில் பலவேறு தத்துவ சிக்கல்கள், பின்நவீனத்துவ பகடி, கவிதையை வழக்கமான தொனியில் இருந்து கலைத்துப்போட்டு  புதிய மொழியில் கவிதையை எழுப்ப முனைவது போன்ற சிறந்த நவீனக் கவிஞனுக்கு இருக்க வேண்டிய எல்லா திறமைகளும் இவருக்கு இருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பனுபவமும், வாழ்க்கை பாடங்களும் அதற்கு துணை நிற்கிறது.' ஒரு சாமானியன் என்ன செய்ய முடியும்? கரப்பானையோ, சிறு செடியையோ இம்சிப்பதன்றி' என்ற அவரது வரிகளை அவரது கவிதை உலகிற்கு எளிதாக பொருத்தலாம். சாமானியன் கேட்கமுடியாத கேள்விகளை, செய்யமுடியாத விஷயங்களை தன்  கவிதைகளின் மூலம் எதிர்குரலாக ஒலிக்கவிடுகிறார் இளங்கோ. அதனால் தான் அவரால் உன் கவிதையால் எதை தடுக்க முடியும்? உன் இனம் நசுக்கப்படுவதை, உன் கடவுள்கள் கொல்லப்படுவதை , உன் நிலம் சிதைக்கபடுவதை ,போ போய் வேலையைப் பார், பொருளீட்டு, புணர், சிரி,மரி கவிதையாம் மயிராம்...என்று எழுத முடிகிறது.

இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ள இளங்கோ விரைவில் தனது நாவலையும் முடித்து வெளியிடுவார் என்று நினைக்கிறேன். பொருளாதார நிர்பந்தங்கள் அற்ற வாழ்வு அவருக்கு அமைந்தால் அவரது எழுத்துக்களின் அளவையும் கூட்டும். தற்போது சென்னையில் பத்திரிக்கை பணியை துவங்கியுள்ள இளங்கோ கிருஷ்ணனுக்கு இது மிகவும் உகந்த நேரம். ஆட்டத்தின் விதிமுறைகள் அவருக்கு தெரியும். ஆடுகளமும் தயாராக உள்ளது. அவர் சிறப்புடன் ஆடி இதில் ஜெயிக்க வேண்டும். இந்த உரைக்கு தார்மீக பலமாக இருந்த நண்பர்கள் கவின் மலர், சாம்ராஜ் இருவருக்கும் என் நன்றிகள். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment