Tuesday, September 28, 2010

ஊடுருவல் நாவலின் ஆரம்ப பகுதி

மனோவுக்கு வீடு திரும்ப இன்று வழக்கத்தை விட வெகு நேரமாகிறது. சனிக்கிழமை இப்படி நடக்க வாய்ப்புண்டுதான். இப்பொது 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு நாளில் இரண்டு மருத்துவமனைகளில் வேலைப்பார்க்கும் பொருளாதார சுழலில் இது சத்தியம்தான். இன்று பாலா மருத்துவமனைக்கே வந்து கொத்திக் கொண்டு போவான் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்துதான் ஒரு காரியமும் அவன் வாழ்க்கையில் நடக்கவில்லையே. எல்லாமே எதிர்பார்க்காதவை தான்.


கோடம்பாக்கத்தில் இருந்து விஜயராகவபுரம் நோக்கி அவனது டி.வீ.எஸ் சேம்ப் சென்று கொண்டிருந்தது. சோடியம் விளக்குகளின் சுடரொலியில் சாலை கழுவி விட்டாற் போல பளபளத்தது. தேர்தல் நேரம் நெருங்குவதால் சாலையை புதிதாக போட்டிருந்தார்கள். போன வருடம் பெய்த தொடர் மழையால் இந்த சாலை அரிப்பு கண்டு ஆங்காங்கே பெயர்ந்து, குண்டு, குழியாகி, குழிகளில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அவனது டி.வீ.எஸ் சேம்ப் பள்ளத்தில் எல்லாம் எகிறிக் குதித்து எழுப்பும் சத்தத்தை பார்த்தால் முன் சக்கரம் கழண்டு உருண்டோடி விடுமோ! என்றெல்லாம் பயந்து ஒட்டிஎருக்கிறான் . பொழுதுக்கும் மெக்கானிக் ஷாப்புக்கு வண்டியை கொண்டு செல்ல வேண்டியிருந்தது உதிரியாக வந்த வருமானமெல்லாம் வண்டியே முழுங்கிவிட்டது.


மெக்கானிக்தான் எதாவது இரக்கப்படுகிறனா? அடிக்கடி கொண்டு வருகிறானே! கொஞ்சமாக பில் போடுவோம் என்று இருநூறு ஆகும் செலவிற்கு நானூறு பில் தீட்டுகிறான். சனியன் பிடித்த வண்டியை, விற்றுவிடலாமென்றால் ஓசியாய் கொடுத்தால்தான் உண்டு. கொள்முதல் செய்வார் இல்லை. அவனது மனைவிக்கும், இவனுக்கும் முதல் பிரச்சனை இந்த வண்டியால்தான் வந்தது. இருந்தாலும் பல சொந்தங்கள் அவனை விட்டு பிரிந்தாலும் இது மட்டும் உற்ற நண்பனாக ஒட்டிக்கொண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் தனக்கு உண்மையாக இருக்கும் ஒரே உடமை இந்த வண்டி மட்டும் தான் என்று நம்ப ஆரம்பித்துவிட்டான். வீடு சமீபத்து விட்டது. ஏரியா முழுவதும் "கப்சிப்" என்றிருந்தது பத்து மணிக்கே சென்னை பாதி செத்துவிடுகிறது.

இரும்பு கோட்டை திறந்து, மாடிப்படியின் ஓரத்தில் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி பூட்டினான் மூன்றாவது மாடியில் பாதி மொட்டையகவும், மீதமுள்ள இடம் வீடாகவும் இருந்தது. இரண்டு படுக்கையறைகள், ஒரு முன் ஹால், சமையலறை உள்ள வீடு அது. அப்பா மொட்டைமாடியிலேயே விரித்துப் படுத்து இருந்தார். பலகாலமாக அப்படிதான் செய்து வருகிறார். கதவு பேருக்கு பூட்டியிருந்தது லேசாக திறந்தான். அம்மாவும், தங்கையும் சமையலறை ஒட்டியுள்ள படுக்கை அறையில் தூங்கினர். எப்படியும் வரத்தாமதமாகும் என வெளி குமிழ் விளக்கை மட்டும் போட்டுவிட்டு கதவை, பூட்டாமல் படுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். அவன் அறைக்குச் சென்றான் இருவர் படுக்கும் கட்டில். புதிதான மெத்தை விரிப்புடன் இருந்தது. கதவை சாத்தி தாழிட்டான். உடைகளை கழற்றி, கைகால் கழுவி கயிலிக்கு மாறியவன், மெத்தையை மீண்டும் ஒரு முறைப்பார்தான். அவனது மனைவி ஒருக்களித்து படுத்திருப்பது போல பிரமை ஏற்பட்டது.

சற்று அளவிற்கு அதிகமாக தண்ணி அடிதிருந்ததால் ஏற்படுவதுதான் எல்லாம் விஸ்கியின் வேலை.

அவன் கடந்து வந்த பெண்கள் அனைவரும் ஒருகணம் நினைவுக்கு வந்தனர். மெத்தையில் ஏறிப்படுத்தான். பால இரண்டு நீல பட சீ.டிக்களை கொடுத்து சென்றிருந்தான். அதைப்பார்கலாம என நினைத்தான். இப்போதிருக்கும் வேட்கையை இன்னும் அதிகப்படுத்தும் "வேண்டாம்" என நினைத்தான்.


தொலைக்காட்சியை போட்டவன் ஒவ்வொரு சேனலாக மாற்றினான். அவனது மனம் போலவே அது மாற்றிக்கொண்டே இருந்தது. கடைசியில் எஸ்.எஸ்.மியுசிக்குள் வந்து நின்றது. ஒலியை முற்றிலுமாக குறைத்தான். நாடு இரவில் வெறும் காட்சியாகத்தான் தொலைக்காட்சியைப் பார்ப்பது அவனது வழக்கம். பிரிட்டினி ஸ்பியர்ஸ், வேற்று உடம்பை காட்டிக் கொண்டிருந்த ஆனழகனுடன் கட்டிப் புரண்டு கொண்டிருந்தாள்.

ஆனால் அது ஆபாசமாக தெரியவில்லை. பிரிட்டினியின் உடம்புக்கு எவ்வளவு ஆடைகளைக் குறைத்தாலும் அழகாகத்தான் தெரிகிறது. ஸ்கூல் வயதிலேயே பாப் உலகில் அடியெடுத்துப் பெயர் வாங்கியவள் என கேள்விப்பட்டிருக்கிறான். இப்போது அவருக்கும் பிள்ளை குட்டியகிவிட்டது என தினத்தந்தி ஞாயிறு மலரைப் பார்த்து தெரிந்ததும் கொஞ்சம் கவலைப்பட்டான். யாரைத்தான் திருமணம் விட்டு வைக்கிறது? ஆனால் கணவன் கூட இல்லையாம், விவாகரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறதாம். இது தெரிந்ததும் அவளைப் பழைய பிரிட்டிநியாகவே நினைத்து ரசிக்க முடிந்தது. அடுத்த பாடலில் ஜெனிபார் லோபஸ் வந்தால். "வெயிட்டிங் போர் த நைட்" என்ற புத்தாண்டை வரவேற்கும் பாடல் அது. அவளை முதன் முதலாக அந்தப்பாடலில் பார்த்தபோது அவன் சென்னைக்கும் புதிது. அவள் இடையை வெட்டி ஆடிய அழகை பார்த்து, யாரு இது செம கட்டையா இருக்கே? என நண்பர்களிடம் விசாரித்தான். அவர்கள் இவனைப் பார்த்து சிரித்த கிண்டல் சிரிப்பும் இப்போது அவனுக்கு நினைவு வந்தது.

சென்னைக்கு வழ வந்தது மில்லினியம் ஆண்டை ஒட்டித்தான். 1999 நவம்பர் முதல் வாரத்தில் இனி மாநகரில்தான் வாழ்கை என எக்ஸ்ரே டிப்ளோமா படிக்க இங்கு வந்தான். அதற்க்கு முன் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருப்பவனாக இருந்தான். அவனது குடும்பம் சென்னையில் ஆறுமாதம் மதுரையில் ஆறுமாதம் என ஊஞ்சலாடிகொண்டிருந்தது. தம்பியையும், தங்கையையும் மதுரையில் சித்தியின் வீட்டின் படிக்க போயிருந்தார்கள்.

மனோவும் மதுரையில் ஒரு வருடம் தியாகராஜா கல்லூரியில் பி.காம் படித்தான். கல்லூரியில் சில பெண்கள் நட்புடன் அவனுடன் பழகிய காலம் அது. சக மாணவர்களிடம் இருந்து தனது வசதியின்மையால் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு இருந்தான். இரண்டு வகுப்புகள் முடிந்தவுடன் மதியக்காட்சிக்கு மாப்பிள்ளை விநாயகருக்கோ அல்லது பிரியா காம்ப்ளெக்ஸ் தியேட்டருக்கே பைக்கில் பறப்பார்கள். கோனார் மெஸ் சென்று, பிரியாணி சாப்பிடுவார்கள். இவனை எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். மதியம் உணவு இடைவெளிக்குப் பிறகு வகுப்பில் உட்காரும் சில மாணவர்களில் மனோவும் ஒருவன். அதுவும், மனோவின் அமைதியும் சில பெண்களுக்கு அவன் மெது ஒரு பரிவை ஏற்படுத்தியது. நெருங்கி வந்து பேசினார். தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக கீதாவுக்கு இவனைப் பிடித்துப் போனது. அவர்கள் படம் போகும் பொது இவனையும் கூட்டிச் சென்றனர். மூன்று பெண்களுடன் சேர்ந்து படம் பார்த்ததே தியேட்டரில் உட்கார்ந்த போதும் மனோவுக்கு நம்ப முடியாமல் இருந்தது.

2 comments:

  1. நல்லாருக்கு பாஸ்.. சீக்கிரம் எழுதி முடிங்க

    ReplyDelete
  2. Ungaloda Ooduruval Naavalin muthal aththiyaayam padithen swarasyamaaka irukkirathu

    ReplyDelete