Friday, June 25, 2021

கைவிடப்பட்டவர்களின் கூடாரம்


 

Wednesday, June 16, 2021

குற்றங்களின் தோற்றுவாய் – வா.கீராவின் ‘பாரி ஆட்டம்’

 


குற்றங்களின் தோற்றுவாய் – வா.கீராவின் ‘பாரி ஆட்டம்’

எழுத்தாளரும் இயக்குனருமான கீரா எனது பல வருட நண்பர். அவரும் நானும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து படைப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உரையாடியே நெருங்கிய நண்பர்கள் ஆனோம். என்னிடம் அவர் சொன்ன கதைகள், சம்பவங்களை வைத்தே குறைந்தது மூன்று செறிவான  புதிய கதைக்களன் கொண்ட பெரிய நாவல்களை அவர் இந்நேரம் எழுதியிருக்க முடியும். சினிமாவும், சினிமா எடுப்பதற்கான கடுமையான பிரயத்தனமும் மட்டும் அவரது படைப்புகள் முற்றிய நாட்களில் பெரும்பகுதி எடுத்துக்கொண்டது உண்மை. ஆனாலும் அவருக்குள் இருக்கும் தீவிர படைப்பாளியை  அவ்வப்போது சிறுகதைகளாக வெளிபடுத்தினார்.தமிழு, நிறமற்றவளின் கண்கள், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஒரு சைக்கிளின் கதை போன்ற அவரது கதைகள் யதார்த்த தளத்தில் அமைந்த துள்ளிய காட்சி சித்திரிப்பை அளித்து தெரிந்த விளம்புநிலை மக்களின் தெரியாத வாழ்க்கையை கூறின. கதைகளை தொகுத்து புத்தகமாக்கவும் அவர் மெனக்கெடவில்லை. பின்னர் நண்பர்களின் தொடர்ந்து நச்சரிப்பும், யாவரும் பதிப்பக ஜீவகரிகாலன்,வேல்கண்ணன் போன்ற நண்பர்களின் தொடர் முயற்சியால் மோகினி என்ற பெயரில் தொகுப்பு 2017 ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி வெளிவந்து பரவலான கவனத்துக்கு உள்ளானது. அதன் பின்னர் அவரது படப்பிடிப்புகள், கதை விவாதம், லொகேஷன் பார்க்க போதல் என்று சினிமா அவரின் பெரும்நேரத்தை எடுத்துக் கொண்டது. அவருடன் இரவு நேரங்களில் எழுதிக்கொண்டிருக்கும் பெரிய நாவலான ‘’குமரி’’ குறித்து  என்னிடம் விவாதிப்பார். அதன் காட்சிகளை கேட்கும் போது, ‘’ விரைவில் எழுதி முடியுங்க தோழர், நீங்க சொல்லும் போதே விரைவில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது’’ என்பேன். ஒரு சிறிய புன்னகையை பதிலாக கொடுப்பார். யாவரும் சிறுகதைப் போட்டியில்  கொரோனா காலக்கட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட சிறந்த சிறுகதையாக அவரது ‘’ சதுரங்க வட்டம்’’ தேர்வு பெற்றது. பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட சிறந்த கதை இது. விரைவில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து யாவரும் பதிப்பகம் புத்தகமாக கொண்டு வர இருக்கிறது. அந்த தொகுப்பி‌ல்‘’ சதுரங்க வட்டம்’’ இடம் பெறுகிறது. போன வருட(2020) கொரனோ லாக் டவுனில் குறுநாவல் ஒன்றை எழுத ஆரம்பித்து இருப்பதாக கூறினார். அதுதான் ‘’பாரி ஆட்டம்’’ குறுநாவல். இந்த ஆண்டு பிப்ரவரி 2021 இல் நடத்தப்பட்ட சென்னை புத்தக கண்காட்சியில் புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பரவலான வாசகர்களால் விரும்பியும் வாங்கப்பட்டது. முக்கியமாக திரைப்படத் துறையை சேர்ந்த பல நண்பர்கள் வாங்கிப் போனார்கள். கதைப்போக்கில்  அமைந்திருந்த ஒருவகையான திரில்லர் தொனி அவர்களை மிகவும் கவர்ந்தது. ஆனாலும் வெகுஜன நாவல் வகைமைக்குள் பாரி ஆட்டத்தை சேர்க்க இயலாது. தீவிரமான மன உணர்வுகளை அளிக்கும் வாழ்க்கை முறையையும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார். பின்நவீனத்துவம் கொடுத்திருக்கும் கதை சொல்லலின் சுதந்திரம், கதையின்றி கதை மொழிதல், சில வரிகளில் ஒரு கதாபாத்திரங்களை வரையறுத்தல், தேவையற்ற விளக்க உரைகளை தவிர்த்தல் ஆகிய நுட்பங்கள் அனைத்தும் பாரி ஆட்டத்தில் துணிந்து செயல்படுத்தி பார்த்திருக்கிறார் வ,கீரா. இந்த நுட்பங்கள் எதுவும் வாசகனை உறுத்தாமல் சீரான கதை சொல்லலால் தடையின்றி வாசிக்க வைத்திருக்கிறார்.

தமிழ் இலக்கியத்தில் குறுநாவல் வடிவத்தில் தான் அதிகமும் சாதனைகள் நிகழ்த்திருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, தி.ஜானகிராமனின் அடி, அசோகமித்திரனின் இன்று, கி.ராஜாநாராயணனின் கிடை, ஆர்.சண்முகசுந்தரத்தின் அறுவடை , லா சாராவின் புத்ர, வண்ணநிலவனின் கம்பாநதி, ஜெயமோகனின் டார்த்தீனியம், சு. வேணுகோபாலின் கூந்தப்பனை போன்ற இன்னும் பல  வரிசையில் உள்ளது. வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள்( நீல. பத்மநாபனின் தமிழ் மொழிபெயர்ப்பு) மலையாள மொழிபெயர்ப்பு என்றாலும் குறுநாவலின் உச்சபட்ச சாதனைக்கும் வடிவத்துக்கும் துல்லியமான எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

போன வருடம் குற்றப் பின்னணியில் அமைந்த இரண்டு குறுநாவல்களை படித்தேன். ஒன்று சீரியல் கில்லர்( தொடர் கொலைகாரன்) யாரென்று கண்டுபிடிக்கும் வகையில் அமைந்த நந்தன் ஸ்ரீதரனின் படுகளக் காதை, அவரின் திரைக்கதை ஒன்றை குறுநாவல் வடிவில் மாற்றி எழுதியிருந்தார். ஒரு மனிதனின் வாழும் சூழல் எவ்விதம் குற்றப் பின்னணியில் சிக்க வைக்கிறது என்பதை மெல்லிய நீரோட்டமாக எழுதியிருந்த என்.ஸ்ரீராமின் அத்திமரச்சாலை. இந்த இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது பாரி ஆட்டம்.

 முப்பது வருடங்களுக்கு முன் நடக்கும் யாரும் சொன்னாலும் நம்ப முடியாத கிராமிய கதை, இன்னொருபுறம் சமகாலத்தில் கொடைக்கானலில் வயதுப்பெண்கள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் பற்றி எந்த துப்பும் கவலர்களுக்கு கிடைக்காமல் அலைகிறார்கள். இவ்வாறு இரண்டு கால கட்டங்களில் கதை சொல்லப்பட்டு  ரயில் பாதையின் இரு வேறு தண்டவாளங்கள் இணைவது கதையின் முடிவை நோக்கி கோர்த்திருக்கிறார் கீரா. கடந்த காலத்தின் கதைக்கு வாய்மொழி கதைமொழியின் கூறல் முறையையும், நிகழ்காலத்தின் கதைக்கு விறுவிறுப்பான மர்ம நாவலின் கூறல் முறையையும் பயன்படுத்தி எழுதியிருக்கிறார் கீரா. ஆனால் கதாபாத்திரங்களின் மன ஒட்டத்தை மிக துல்லியமாக சித்தரித்து எழுதியிருப்பது நாவலை மிகுந்த நம்பகத் தன்மைக்குள் கொண்டு வந்துவிடுகிறது.

மாச்சாப்பு, வெள்ளையன், மாரியாயி என்ற மூவரை மையமாக வைத்து கடந்த கால கதை நகர்கிறது. சிறிய அளவிலான நிலத்தை வைத்திருக்கும் மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் அண்ணன், தம்பிகள். மழை வந்தால் விவசாயம், இல்லையென்றால் ஆடுகளை மேய்த்து  அதனை விற்பதன் மூலம் வரும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள். அண்ணனுக்கு எந்த இடத்திலும் பெண் அமையவில்லை. அதனால் தம்பி வெள்ளையனுக்கு திருமணம் செய்துவிட முடிவெடுக்கிறான். ஆனால் தம்பி வெள்ளையன் ஒத்துக்கொள்ள மறுக்கிறான், சில சம்பவங்களுக்கு பிறகு அண்ணன் தம்பி இருவரும் மாரியாயியை மணந்து கொள்ளும் சூழல் வருகிறது. ஊரார் கேலி பேசினாலும் மாரியாயி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருவரையும் தீர்க்கமான முடிவுடன் திருமணம் செய்து கொள்கிறாள். குடிசை வீட்டின் கூரையை மாற்றி, அவர்கள் நிலத்தில் கடன் வாங்கி கிணறு தோண்டி, அறுவடை செய்து புகுந்த வீட்டை கரை ஏற்றிவிடுகிறாள். அவளுக்கு ஒரு மகன் பிறக்கிறான். மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் மகிழ்கிறார்கள். தங்கள் பட்ட கஷ்டம் தனது மகன் படக்கூடாது என தங்களின் வசதிக்கு மேல் செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். செட்டிக்குளம் என்ற கிராமத்தில் இந்தக்கதை நடக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த கிராமிய வாழ்வை அப்படியே அசலாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு பெண் எவ்வாறு இரு ஆண்களை திருமணம் செய்யமுடியும் என்கிற இடத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலை மிகுந்த துல்லியத்துடன் எழுதியிருக்கிறார். மாரியாயி அவளின் அம்மா எடுக்கும் முடிவுகளும் அதை இயற்கையாக நகர்த்திச் சென்ற விதமும் எழுத்தாளனின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இப்படி நிகழுமா? என்கிற போது நிகழும், நிகழ்த்திருக்கிறது என்று ஒரு கதையை நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் நிலத்தில் கிணறு வெட்ட நீர்ப்பிடிப்பு பார்க்க வரும் சன்னாசி, துண்டில் தேங்காயை போட்டு முறுக்கிக் கொண்டு பார்க்கிறார். அந்த நிலத்தில் இருக்கிற  கரையான் புற்று தான் நீரை கண்டுபிடித்து தருகிற வித்வான் என்கிறார். கிணறு தோண்டி நீர் கசிய ஆரம்பித்ததும் மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து  வழிபட்டு முதல் நீரை அருந்தக் கொடுப்பது போன்ற மறைந்து போன அல்லது மறந்து போன நாட்டுப்புற சடங்குகள் அனைத்தையும் நுட்பமான விவரணைகள் மூலம் நினைவு படுத்தியிருக்கிறார் கீரா.

நிகழ்காலத்தில் நடைபெறும் கதையில் கொடைக்கானலில் தொடர்ந்து இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அந்த வழக்குகளை விசாரிக்கும் இளம் ஆய்வாளன் கார்த்திக் எந்த துப்பும் சரியான முறையில் கிடைக்காமல் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மேலதிகாரிகளிடம் பதில் சொல்லவும் முடியாமல் தவிக்கிறான். சினிமாவுக்கு முயற்சி செய்து தோற்று வேறு வழியில்லாமல் கொலையுண்டவர்களை காவலர் தரப்பின் சாட்சிகளுக்குக்காக படம் பிடிக்கும் முருகனின் கதையும் சொல்லப்படுகிறது. இப்படி நிகழ் காலத்தையும், கடந்த காலத்தையும் இணைத்து விளையாடும் ஆட்டத்தை பாரி ஆட்டம்(கிராமங்களில் சிறுவர்கள் ஆடும் விளையாட்டு)  குறுநாவலில் அந்த விளையாட்டைப் போலவே குற்றங்களின் தோற்றுவாயை துல்லியமாக சொல்லியிருக்கிறார் கீரா.

பொதுவாக குறுநாவல் எழுத்தாளருக்கு மிகுந்த சவால் அளிக்கக் கூடிய வடிவம்! சிறுகதைக்குரிய வேகமும், நாவலுக்குரிய களமும், சிக்கலும் இருந்தாக வேண்டும். ஆனால் நாவலுக்குரிய இடம், பக்கங்கள் இங்கு இருக்காது. 70, 80 பக்கங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வேண்டும். இதை எந்த நுட்பமும் குறையாமல் எண்பது பக்கங்களில் அனாசயமாக சாதித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் வ.கீரா. மிக புதிய களம், நுட்பமான விவரணைகள், இரு விதமான கதை சொல்லல் என ஒரே அமர்வில் படிக்க வைத்து புதிய அனுபவத்தை தருகிறது பாரி ஆட்டம் குறுநாவல். இந்தப் பிரதி இன்னும் இவரிடம் இருந்து வீரியமான படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கிறது.

பாரி ஆட்டம் (குறுநாவல்)

ஆசிரியர்: வ.கீரா

பக்கங்கள் 88

விலை ரூ120

பதிப்பகம் புலம் வெளியீடு

முதல் பதிப்பு பிப்ரவரி 2021

 

 



 

 

 

சாமானிய மனிதனின் எதிர்க்குரல்

 விஜய் மகேந்திரனின் இத்தொகுப்பு விதவிதமான கதைகளை சுமந்து அலையும் மனிதர்களை நமக்கு பரிச்சயப்படுத்துகிறது. ஐந்து நிமிட வாசிப்பினில் அவர் வெவ்வேறு ஆளுமைகளையும் அவர்களுடனான நினைவுகளையும் வாசகருக்கு சொல்லிவிடுகிறார். திரைத்துறை சார்ந்தவை, வாழ்வியல் சார்ந்தவை, இலக்கியம் சார்ந்தவை என இந்த நூலின் உள்ளடக்கத்தை மூன்றாக வகுக்கலாம். ஸ்ரீதேவி, ரேகா, ரஹ்மான், பிரசன்னா, எடிட்டர் லெனின், களஞ்சியம், ராம்பால், கேபிள் சங்கர், கீரா, சாம்ஸ், மீரா கதிரவன் என பல திரைத்துறையினரை பற்றிய தன் அவதானிப்புகளையும் அவர்களுடனான உறவையும் பற்றி சுவாரசியமாக எழுதியிருக்கிறார். இவைத் தவிர்த்து ‘மூன்று முடிச்சில்’ வெளிப்பட்ட ரஜினியின் நடிப்பு, முருகேசபாண்டியனின் சினிமா நூல் குறித்த அறிமுகம், யுவ கிருஷ்ணாவின் நடிகைகள் பற்றிய நூல் அறிமுகம் என சினிமாவின் வெவ்வேறு தளங்களை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

விஜய் மகேந்திரனின் வாசிப்பு வேட்கையை பறைசாற்றுவதாகவும் இத்தொகுப்பு உள்ளது. இளங்கோ கிருஷ்ணன், நரன், குமரகுருபரன், ஷோபா சக்தி, நிலா ரசிகன், லீனா மணிமேகலை, கிராபியன் ப்ளாக், பிரியா தம்பி, விஜயபத்மா, அனிதா, சுதேசமித்திரன் என பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். கவிதைகள் தேர்வும் அது குறித்து அவர் எழுதும் குறிப்புகளும் சிறப்பாக உள்ளன.

இவையிரண்டும் தவிர்த்து வாழ்வியல் பற்றிய கட்டுரைகள், குறிப்பாக சென்னை நகரத்தின் சூழ்ச்சி மிகுந்த வாழ்வு வசப்படாமல் போகும் புதிர்களை விவரிக்கும் கட்டுரை அபாரமானவை. மொழி ரீதியாகவும் தனித்து விளங்குபவை. ஆட்டுக்கால் சூப்பு பற்றிய கட்டுரை ஒரு சிறுகதைக்கு உரியது. உப்புக்கண்டம், முருங்கைக்கீரை, ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவை அவருடைய மருத்துவ பின்புலத்துடன் சேர்ந்து துலங்குகிறது. மொத்தத்தில் இவை ஒரு அமர்வில் தொடர்ச்சியாக வாசிக்கத்தக்கதாக வடிவம் கொண்டுள்ளது.
- சுனில் கிருஷ்ணன்


நூல்:


சாமானிய மனிதனின் எதிர்க்குரல்
பிரிவு : கட்டுரைகள்
ஆசிரியர்: விஜய் மகேந்திரன்
வெளியீடு: புலம் வெளியீடு
வெளியான ஆண்டு : 2021 ( மூன்றாம் பதிப்பு)
பக்கங்கள் : 120
விலை : 130
தொடர்புக்கு: 98406 03499