Monday, June 7, 2010

லீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''


லீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''

நான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதைகளை அறிமுகம் செய்து அது தந்த உணர்வுகளை எழுத வேண்டும் என்ற ஆசையின் முதல் படியே இந்த பதிவு.இது நிச்சயமாக விமர்சனமோ மதிப்புரையோ இல்லை.
ஒரு பகிர்தலே,

சமீபமாக பல இளம்கவிஞர்கள் என் கவனத்தை கவருகிறார்கள்.இசை,இளங்கோ கிருஷ்ணன்,வெய்யில்,நரன்,அனிதா,முகுந்த் நாகராஜன்,நேசமித்திரன், ஆகியவர்களை சொல்லலாம் .இவர்களின் கவிதைமொழி உரைநடைக்கு வெகு அருகில் அமைந்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

இரண்டாயிரத்திற்கு பிறகு எழுத வந்த பெண் கவிகளில் தனது தீர்க்கமான மொழியால் தனித்து தெரிபவர்,லீனா மணிமேகலை.
உரைநடையில் முழ்கி படித்து கொண்டுயிருந்த சமயத்தில்,'''ஒற்றையிலையென ''என்ற தலைப்பால் உந்தப்பட்டு அவரின் அந்த முதல் கவிதை தொகுதியை வாங்கி படித்தேன்.

இலகுவான மொழியில் சரளமான சொற்களை கொண்டு மன உணர்வுகளை பேசும் கவிதைகள் அதில் அதிகம் இருந்தன .

காதலின் நுட்பமான அவதானிப்புகளை சில கவிதைகளில் அவர் எழுதியுள்ள விதம் என்னை மிகவும் கவர்தது.

ஒரு கவிதையில்

மௌனங்கள்
எப்பொழுதும்
செயலற்றவையாகவே
தோன்றினாலும்
கூர்கத்தியின் பதத்தை
தடவிப் பார்க்கும்
நடுக்கத்தை
ஏற்படுத்தவே செய்கின்றன.

காதலின் சலனத்தை இந்த வரி நுட்பமாக கொண்டு வருகிறது.காதலர்களின் போலி பாவனைகளை கலைக்க விழைகிறது.

இன்னொரு கவிதையில்

விடைப்பெற்று கொள்ள வேண்டிய
நேரம்
அறிந்திருக்க வில்லை
அப்பொழுதும்
நாம் பேச ஆரம்பித்து இருந்தோம்
என்பதை.

தனது சுயத்தை தொலைக்காத பெண்ணின் காதல் வரிகளாகவே இவற்றை நான் எடுத்துகொள்ள வேண்டும்.


தீர்ந்து போயிருந்தது காதல் என்னும் கவிதையின் பேசு பொருள் காதலனின் வருகைக்காக காத்து இருக்கும் இளம்பெண்ணின் அக உணர்வுகள்.
பெருநகரத்தின் புற நெருக்கடிகள் தரும் மன அவசங்களும் அதில் ஒன்றிணைந்து வேறு ஒரு தளத்திற்கு கவிதையை கொண்டு சென்று இருப்பது இதன் சிறப்பு.

தீடிரென்று உன் நினைப்பு
பற்றிக் கொண்ட நெருப்பாய்
ஈரமாய்
உலர்வாய்
இன்னும்
என்னென்னவெல்லாமோ

அலுவலகம் உமிழ்ந்த
மாலை மிச்சங்களை
அவசரமாய் அள்ளியபடி

டிராபிக் கின் காத்திருப்புகளில்
உன்னை ஒத்திகை பார்த்துக்கொண்டே

இரைச்சலில் ஏனோ இன்று
எதற்கோ கட்டுப்பட்டது போல்
விரல்கள் தாளமிட்டியிருந்தன

வியர்வைக் காசுகள்
பிசுபிசுத்த காய்கறி பழங்கள்
பேரம் தோற்ற பெருமூச்சுகள்
பார்க்கிங் சண்டைகள்

தினமும் திரும்பும்
அறைகளில் அடர்ந்த மௌனம்

'இதோ வந்து கொண்டே இருக்கிறேன் '
உன் தொலைபேசிக்குரல்
திரும்ப திரும்ப ஒலித்ததில்
இன்னும் எஞ்சியிருக்கிறது
என் தாபம்.

சமைத்ததில் எல்லாம்
நேரம் எரித்த நெடி

தொலைக்காட்சி பிம்பங்கள்
உதிர்த்துப் படர்ந்த தூசி

வீட்டின் சுவரெங்கும்
களைப்பின் கேவல்கள்

இறுதியில் வந்தாய்
நீ அணைத்துக்கொண்டது
கசகசப்பாய் இருந்தது
தீர்ந்து போயிருந்தது காதல்.


காத்திருத்தல் பெண்களுக்கு வெகு காலமாகவே விதிக்கப்பட்டு வரும் ஒரு நிகழ்வு .திருமணம் ஆனவுடன் இதே பெண் கணவனுக்காக காத்திருக்க வேண்டும்.
காதலனின் நினைவு வந்தவுடன் அவனைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது.அவள் அன்றாடம் சந்திக்கும் காட்சிகள் அவளது வெறுமை மனநிலையை அதிகரிக்கிறது.அலுவலகம் சலிக்கிறது.டிராப்பிக் கின் காத்திருத்தல், பார்கிங் சண்டைகள்,இதுக்கு நடுவே கூட இதோ வந்து விடுகிறேன் என்ற காதலனின் குரல் அவளை ஆசுவாசம் அடையச் செய்கிறது.அறைக்கு திரும்பியவுடன் கூட சமைக்கப் பிடிக்கவில்லை,தொலை காட்சி பார்க்கப் பிடிக்கவில்லை.

வீட்டின் சுவர்களில் கூட தனிமையை உணர்கிறாள்.வெகுநேரம் கழித்து காதலன் வருகிறான் இவளை அணைத்துக் கொள்கிறான்.அவள் முன்பிருந்த மனநிலையில் இல்லை.தீர்ந்து போயிருந்தது காதல் என முடிக்கிறாள்.
இறுதியில் காதலனின் மீது கவிதை கசப்பாய் முடிகிறது.ஊடலும்,கூடலும் காதலின் பகடையாட்டமே.
காதலியின் மென் உணர்வுகளை பெரு நகரங்களின் சந்தடிகளுக்கிடையே காட்சிபூர்வ்மான சித்தரிப்பில் லீனாவின் இந்த கவிதை வெற்றி பெறுகிறது.

முதன் முதலில் இந்த கவிதையை படித்த போது அடைந்த அதே உணர்வை இப்போது படிக்கும் போதும் அடைகிறேன்.
வெறுமை நிறைந்த சுழலில் இந்த கவிதையை படிக்கும் போது கூட நல்ல மன நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இதுவே நல்ல கவிதையின் அடையாளமாக நான் கருதுகிறேன்.

பெருநகரப் பெண்ணின் காதலின் வலியை செறிவான மொழியில் சொல்லும் இந்த கவிதை பிறகு ,லீனாவே இயக்கி குறும் படமாக LOVE LOST என்ற பெயரில் தயாரித்துள்ளார்.அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

8 comments:

  1. நல்ல கவிதை.
    நல்ல விளக்கமுடன்.
    நன்றி மகேந்திரன்.
    தொடருங்கள் மேலும்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன் அவர்களே,

    ReplyDelete
  3. காதல் வயப்பட்ட பெண் மற்ற எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதே ஆணானால் அவனது பல காரியங்களில் ஒன்று காதல். அது தான் அந்த உணர்வு வேறுபாட்டின் காரணம்

    ReplyDelete
  4. தற்கால கவிதை மொழி.
    “சமைத்ததில் எல்லாம்
    நேரம் எரித்த நெடி”
    அற்புதம்.

    “விடைப்பெற்று கொள்ள வேண்டிய
    நேரம்
    அறிந்திருக்க வில்லை
    அப்பொழுதும்
    நாம் பேச ஆரம்பித்து இருந்தோம்
    என்பதை.”
    நேர்மயான, அதிகம் அலட்டிக்கொள்ளாத கவிதை நடை.

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  5. படித்ததை பகிர்தல் என்பது பாராட்டத்தக்க செயல்..உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. superb ., thank s for sharing a good , one , to be bookmarked kavithais

    ReplyDelete
  7. நன்றி கொற்றவை
    நன்றி ரோகிணி சிவா

    உங்களது வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  8. நன்றி விஜய் தெளிவான பார்வையும் பகிர்வும்

    ReplyDelete