Wednesday, September 22, 2010

மாமல்லன் கார்த்தி கவிதைகள்


அவளது தொலைப்பேசி அழைப்பின் போது
ஜன்னலைத் திறந்தேன்
மழை பெய்து கொண்டிருந்தது

*

புகை சூழ்ந்திருக்கும்
இந்த இரவில்
தனிமை
ஒற்றைத் திரியில் எரிகிறது

*

எப்போதும்
என் வீட்டு ஜன்னலின் வழியே
உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீயோ
இன்னொரு பிரதேசத்தில்
இருப்பதாய் கனவு காண்கிறாய்

*

பசுமை செழித்த
நம் சம்பாஷனைகளுக்கு அப்பால்
கனவுகளின்
ஓங்கி நிற்கும் மரங்கள்
அதன் தூரத்து கிளைகளின் இடையே தெரியும்
நிலவின் ஒளியில் துயில்வோம்

*

நரகம்
கேள்விகளோடும்
சொர்க்கம்
பதில்களோடும்
துயில்கின்றன
இடையில்
நாம்
இருக்கிறோம்
பெரும் ரணம் கொண்ட மனிதர்களாய்

*

அவன் கண்களில் விரியும் வானம்
நெஞ்சினுள் பாயும் நதி
குருதியுள் பரவும் மண்
நாவினுள் வீசும் காற்று
ஆன்மாவினுள் தகிக்கும் தணல்
இன்று அவன் ஆனான்
ஒரு மனிதப் பிறவியாக

*

என் நகர்புறத்து மஞ்சள் இரவில்
ஒரு கோவில் திருவிழாவின் தெய்வீக ஓலம்
மிரண்டோடி வந்த நாய்கள்
என்னை விநோதமாய் பார்த்தன

*

அதிக பட்ச ஒளி
என்பது
பளீர் என்ற இருள்

*


தீயின் ஒளியில் நிழலின் நடனம் -
வளைந்து , நெளிந்து ,குறைந்து ,நீண்டு ,படுத்து ,மிதந்து ,சுருண்டு -
தீயுள் உறையும் என் நிழல்

*

என் காலி அறையை
ஒரு குழந்தை நிரப்பிக் கொண்டிருகிறது
மிதக்கிறேன் மோன வெளியில்
வாழ்வை மீட்க்கும் பொருட்டு

*

கவிதை எழுதுவது
சினிமா எடுப்பது
இவர்களுக்கு வெட்டி வேலை
சோறு போடும் தொழில்
தெய்வம்
நான் கேட்கிறேன்
தெய்வமே! உனக்கு வேறு வேலை இல்லையா ?

*


மரங்கள் நிழலை தருவதில்லை
மாறாக
அவை வெயிலை வேண்டி நிற்கின்றன
நாம் குளிர் காய்கிறோம்

*

பாதி நிலா ராத்திரி
பாதிச் சொருகி விழும் விழிகள்
பாதி முடிந்த மதுக்கோப்பை
என்னைச் சுற்றி எங்கும் நிரம்பி வழிகிறது மௌனம்

*

தீராத ரணங்களையும் சற்றே ஆற்றும் ஒரு முத்தம்
கொடுக்க அவளுக்கும்
வாங்கிக் கொள்ள எனக்கும்
சம்மதம் தான்
இடையில்
கண்மூடித்தனங்கள்

*

எல்லோரும் ஓடும் அந்த நகரத்தில்
அவனும் ஓடினான் பிழைப்புக்காக
சுட்டுக் கொன்றார்கள்
கொன்ற பின்னும் சுட்டார்கள்
ஐந்து முறை!
ஏதும் இல்லாத
அவனை

*

நீயுமில்லை
நானுமில்லை
ஏதுமில்லாத வெற்று வெளியொன்றில்
கட்டிக்கிடக்க மனம் ஆவல் கொள்ளும்
சக்தி வெளிப்படும்
உயிர் கலக்கும்
அந்த நொடியில்
பிரபஞ்சத்தில் ஒரு பூ மலரும்

*

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது போல்
நடு நிசி ஊளைக் காற்றின் படபடப்பில்
எங்கோ சப்தமிடுகின்றன
ஜன்னல் கதவுகள்
சாத்திவிட யாருமில்லை வெகு நேரமாய்
மரணத்தின் பெருத்த அதிர்வுகள் பின் தொடர
முடிவற்ற இருண்ட பள்ளத்தில்
விழுந்து கொண்டிருக்கிறேன்

*

ஓசை படாமல்
சாரலாய் வந்தவன்
ஏதேதோ செய்துவிட்டிருந்தான்
உலர்ந்த பின் பார்த்தேன்
நிறைவு தரும் படி இருந்தது
உருக்குலைந்த என் கவிதைகள்
ஓவியங்களாய் மாறி இருப்பது


*

அவள் பொம்மைகளை
நேசிக்கத் துவங்கிய நாள்
எதுவென்று அறிந்திருக்கவில்லை

நினைவில் தங்காத ஏதோ ஒரு
நீண்ட தனிமையைத் தாழிட்டுக்கொள்ள
பொம்மைகளை நாடியிருந்தாள்

முதிர் கன்னியின் உடல் வாகும்
முதிராத உள் மனமும் கொண்டிருந்தாள்

பொம்மைகளோடு பேச முடிந்ததும்
முத்தமிட்டு விளையாட முடிந்ததும்
புரண்டு படுத்து அனைத்துக் கொள்ள முடிந்ததும்
இறுகிச் சிதறும் மௌனங்களில் கட்டி அழ முடிந்ததும்
அவளுக்கு பெரும் ஆசுவாசம் தந்தது

மூப்படையாத,
எதிர்த்துப் பேசாத பொம்மைகள்
மனித உறவுகளை விட மேலானதாக எண்ணினாள்

மயங்கிக் கிடந்த மாலைப் பொழுதொன்றில்
என்னையும் பொம்மைகளோடு சேர்த்துக் கொண்டாள்

சிரிக்கும் பொம்மைகளை
பார்த்துப் பழகி இருந்தவள்
கண்ணீர் விடும் பொம்மைகளை கண்டதில்லை
பரவசம் கொண்டு குதித்துக் கை தட்டினாள்

பொம்மைகளின் உலகத்தில்
நான் தான் தலைவன் என்று சொல்லி
கருணை முத்தமொன்றை அளித்தாள்


*


என் மாடி அறையின் குளிர் சாதனப் பெட்டிக்குப் பின்
புறாக்கள் கூடு கட்டியாயிற்று
சீக்கிரம் குஞ்சுகள் பொறித்துவிடும்

இரவில் தினம் சாந்து நிறப் பூனையொன்று
அறையை சுற்றி வந்து
குட்டிகளை ஈன்றிட
தோதான இடம் பார்த்த வண்ணம் திரிகிறது

வயிறு பெருத்த பல்லி ஒன்று
சுவற்றின் மீதிருந்து
அவ்வபோது பரணை நோட்டம் விடுகிறது
தன் முட்டைகளைப் பற்றிய பாதுகாப்புடன்

என் முற்றத்து மண்தொட்டிகளில்
காற்று வழங்கிச் செல்லும் விதைகளும்
முளைவிடும் காலம் தான்

வெண் இருள் படிந்த தனிமைக்குள்
உயிர் பாய்ச்சும் இத்தருணங்களில்

மனைவி முழுகாமல் இருக்கிறாள்
அவளது தாய் வீட்டில்

*
3 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. அனைத்தையும் உய்த்துணர்ந்தேன் , பதிவுக்கு நன்றி.

    ReplyDelete