Tuesday, September 7, 2010

பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!

எனது பாராட்டுவிழாவில் லெனின், இ.பா
பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!

பாரதி மணி

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி எனக்கு மகிழ்வான நாள். தமிழ்ஸ்டுடியோ.காம் அமைப்பினர், அருண்-குணா முயற்சியில் நண்பர் எடிட்டர் லெனினுக்கு வாழ்நாள் சாதனை விழாவும், அதையொட்டி வருடம்தோறும் அவர் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கான விருதுவிழாவும் விழாநாயகன் எடிட்டர் லெனின் வராமலே இனிது நடந்தேறியது! அவர் வராமலேயே அவருக்காக கேக் வெட்டி, ‘Happy Birthday to you….Lenin!’ என்று பாடி நாங்கள் கொண்டாடினோம்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் நள்ளிரவில் தில்லி பாராளுமன்றத்தில் பிரதமர் நேருஜி ‘Long years ago……’ என்று முழக்கமிட்ட நாளில் பீம்சிங்கின் மனைவி சோனாபாய்க்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் இவர். தன் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கு ஒரு விருது கொடுக்கப்போகிறார்களென்பதை அறிந்த லெனின், அருணைக்கூப்பிட்டு, ‘இத்துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கே இருக்கும்போது, என் பெயர் தான் உங்களுக்குக்கிடைத்ததா? எனக்குமுன்னால், எம்.எஸ். மணி – (இவர் தன் பெயரை Money என்று எழுதுவார்) – போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். சத்யஜித் ரே பெயர் உங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையா? என்னாலானதை நான் செய்துகொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்’ என்று சொல்லி விரட்டிவிட்டார். அருண் எனக்கு போன் பண்ணி, ‘சார்ட்டெ நீங்க சொல்லணும்!’ என்று கேட்டுக்கொண்டார். லெனினை ஓரளவு தெரிந்த நான் என் பேச்சு எடுபடாது என்று தெரிந்தும், ‘லெனின் சார், உங்களுடைய Sense of Values –ஐ நான் மதிக்கிறேன். ஆராதிக்கிறேன். ஆனாலும் ஒரு வயதுக்குமேல் நமக்கு ஓரளவு Sense of Proportion-ம் தேவையாக இருக்கிறது. அறுபது வயதானபின் நம் குழந்தைகள் ஆசைப்படுகிறார்களென்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு விருப்பமில்லாவிட்டாலும், திருக்கடையூர் கோவிலில் உட்கார்த்தி வைக்கப்பட்டு, குடம் குடமாக தண்ணீர் அபிஷேகம் செய்துகொள்வதில்லையா? அதிலும் ஒரு சந்தோஷமிருக்கிறது. அரசியலில் உங்கள் வயதே ஆன சுதந்திர இந்தியா எத்தனை சமரசங்களுக்கு உட்பட்டிருக்கிறது? நமக்கெல்லாம் விழாவெடுக்க யாரும் க்யூவில் காத்துக்கொண்டிருப்பதில்லை. இந்த விழா நீங்கள் சொல்லி ஏற்பாடு செய்ததல்ல. மற்றவர்கள் மகிழ்வுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!’ என்று கேட்டுக்கொண்டேன். இந்த விழாவுக்கு இருதினங்கள் முன்பு தமிழ்ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருந்த லெனின் குறும்படங்களின் திரையிடலின்போதும், அருணிடம், ‘ஞாயிற்றுக்கிழமை விழாவுக்கு லெனின் வராவிட்டால், நான் ஆச்சரியப்படமாட்டேன்’ என்று சொன்னேன்.

ஞாயிற்றுக்கிழமை விழா அரங்கில் ‘வரலாறு காணாத’ 150 பேர் கூடியிருந்தார்கள். அதில் பல ‘நாளைய இயக்குநர்’களும் அடக்கம். ஆறுமணியாகியும் ‘விழா நாயகன்’ வரவில்லை. மரியாதைக்காக தன் நண்பர் பொள்ளாச்சி சசியை அனுப்பிவைத்திருந்தார். விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு அரங்கிற்குள் வராமல் தன் ஏ.சி. காரிலேயே காத்திருந்துவிட்டு, இனி லெனின் வரமாட்டாரென்று தெரிந்ததும் போய்விட்டார். அவர் வராததில் கொஞ்சமும் ஏமாற்றமடையாத அந்த ‘நல்ல மானுடனின்’ நண்பர்கள், வந்திருந்த சசியை ‘உத்சவ மூர்த்தி’யாக ஆவாகனம் செய்து, பாராட்டுப்பத்திரம் வாசித்து, கேக் வெட்டி விழாவை கோலாகலமாகக்கொண்டாடினோம்.

இந்த விழாவில் திரு. லெனினுக்கு ஒரு பாராட்டுப்பத்திரம் வாசித்து அளிக்கவேண்டுமென்று அருண் சொன்னார். உடனே எனக்குத்தெரிந்த ஒரே கவிஞர் கோவையிலிருந்த என் நண்பர் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவிடம் ஒரு கவிதை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து, ஒரு மசால்தோசை ஆர்டர் பண்ணி அது நம் மேசைக்கு வரும் நேரத்துக்குள் மரபின் மைந்தன் கீழ்வரும் அருமையான கவிதையை மின்னஞ்சலில் சூடாக எனக்கு அனுப்பி வைத்தார்:

நிரந்தர மனிதன் லெனின்!

சிற்பியின் உளியாய் கத்திரிக்கோலில்
அற்புதம் செய்கிற வித்தகக் கலைஞன்!
சித்தம் போக்கு சிவன் போக்கெனவே
நித்தம் வாழ்கிற நிரந்தர மனிதன்!
இயக்குநர் பீம்சிங்கின் இணையிலா வார்ப்பு!
தனக்கென வாழாத் தனித்துவத் தீர்ப்பு!
உச்சம் தொட்டும் உலகியல் மகிழ்வுகள்
துச்சம் என்றே தள்ளிடும் துறவி!
தனியொரு மனிதனாய் தரைவலிக்காமல்
தனிவழி நடந்து தன்தடம் கடந்து
இனி இவர்போல எவரென வாழும் லெனின்
எனும் மனிதர் லயம்மிகு கலைஞர்
வாழ்கிற விதமே வாழ்வியல் அதிசயம்
தானெனும் முனைப்பைத் துறந்ததே ரகசியம்!
முன்முடிவென்னும் மூட்டை தூக்காமல்
தன்வழி போகும் தனித்துவப் பயணி!
வாழைப்பழங்கள் தேங்காய் மூடியில்
வாழ்வைக் கழிக்கும் கோயில் யானை!
இன்ன விதமென எழுதிட முடியா
மின்னல் ஜாதகம்! மகத்துவ ஒவியம்!

சுதந்திரத் தேதியில் ஜனித்ததாலோ
சுதந்திரப் பறவையாய் சுற்றும் மேதை!
கறைகள் தொடாத காவிய வானம்
முறைதிறம்பாத முத்திரை ஞானம்
நிறைவாழ்நாளும் நீளும் களிப்புமாய்
சிறப்புடன் வாழந்திட சிலிர்ப்புடன் வாழ்த்தினோம்!
கணக்கில்லாத மகிழ்வுகள் உம்மிடம்
தணிக்கையில்லாமல் தினம்வந்து சேர்க!
வாழ்வெனில் யாதென விளங்கிய நீங்கள்
வாழ்வின் பொருளாய் வாழ்வாங்கு வாழ்க!

****** **** **** ******

விழாவில் ’எடிட்டர் லெனின்’ எனும் பெரிய கான்வாஸில் நான் என்னைப்பற்றியும் பெரிதாக வரைந்துகொண்டேன். அந்தக்கூட்டத்தில் நான் பேசியதன் விவரம் கீழே:

எனக்கு எடிட்டர்/இயக்குநர் பீம்சிங் லெனின் அவர்களை பத்துவருடங்களாகத்தான் தெரியும். 2000-ம் ஆண்டில், பாரதி படத்தில் சாயாஜி ஷிண்டேக்கு தமிழ் வசனங்கள் சொல்லிக்கொடுக்கும் உதவி இயக்குநராகவும், பாரதியின் தந்தையாகவும் பணியாற்றிவிட்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் தில்லி திரும்பிவிட்டேன். டப்பிங்கின் போது, படத்தில் பாரதியின் தந்தை பாத்திரத்தின் வசனங்களைப்பேசுவதற்கு, என்னை தில்லியிலிருந்து வரவழைத்தால், செலவு அதிகமாகுமென்று கருதி, சென்னை டப்பிங் கலைஞரைக்கொண்டே பேசச்செய்துவிடலாம் என்று இயக்குநர் விரும்பினார். பத்துக்கும் மேலான கலைஞர்களை பேசச்சொல்லியும் திருப்தியடையாத எடிட்டர் லெனின், ‘இவருக்கு மற்றவர்கள் டப்பிங் பேசுவது சிரமம். சங்கீத பாஷையில் சொன்னால், இவர் ஆரம்பிக்கும்போது, ஒரு இடம் தள்ளி எடுத்துவிட்டு, முடிக்கும்போது, சரியாக சமத்தில் முடிக்கிறார். தேர்ந்த கலைஞர்களுக்குத்தான் இது சாத்தியம். அதனால் அவரையே தில்லியிலிருந்து வரச்சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார். இதைக்கேள்விப்பட்ட எனக்கு ஆச்சரியம். இந்த நுணுக்கமான விஷயத்தை தில்லியில் தேசிய நாடகப்பள்ளி இயக்குநரான திரு. இப்ராஹிம் அல்காஸியும், எங்கள் தில்லி DBNS குழு டைரக்டர் ராமநாதனும் தான் கவனித்திருக்கிறார்கள். படத்தில் சின்னசாமி அய்யராக எட்டயபுரம் அரண்மனையில் ராஜாவைப்பார்த்தவுடன் ஒரு சின்ன வணக்கம் சொல்வேன். அதைப்பார்த்துவிட்டு, ‘எந்த தமிழ் நடிகனுக்கும் இது வராது. திலகன் போன்ற மலையாள நடிகர்களுக்கே உரிய நடிப்பு இது. அவர்களுக்கான Body Language’ என்று பாராட்டியிருக்கிறார். சினிமா பற்றிய இவரது கூரிய, சூட்சுமப்பார்வை என்னை ஆச்சரியப்படுத்தும்.

பாரதி படத்தில் முக்கியமில்லாத செல்லம்மா பாத்திரத்தை எடிட்டிங் மேசையில் பூரணமாக செதுக்கியவர் லெனின். படத்தின் பிரிவ்யூவுக்கு வந்திருந்த நடிகை தேவயானி பிறகு என்னிடம், ‘அங்க்கிள், என் பாத்திரம் நடிக்கும்போது இருந்ததை விட இப்போ நல்லாவே வந்திருக்கு’ என்றார். நான் சொன்னேன்: ‘அம்மா, அதற்கு நீங்கள் இரண்டு நபர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். முதலில் எடிட்டர் லெனினுக்கு. உங்கள் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர் அவர். இரண்டாவது நன்றி நடிகை சுவலட்சுமிக்கு. ஆரம்பத்தில் செல்லம்மாவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் நடிக்கமுடியாததால் தான் உங்களுக்கு இந்த சான்ஸ்!’

என்னைப்பொறுத்தவரையில் பாரதி படத்தின் மூலம் எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள் இரண்டு. முதலில் நண்பர் லெனினின் நட்பு. இரண்டாவது என் நண்பன் நாமக்கல் கண்ணன். ’இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்?’ ஆம், இவ்விருவராலும், என் சென்னை வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நான் சென்னை வந்ததும், நல்ல நண்பர்களுக்கான தேடலைத்தொடங்கினேன். அதில் சிக்கியவர் தான் திரு. லெனின். எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போனது. அவருக்கு என்னையும்! ஓரிரு வருடங்களில் நான் லெனின் குடும்பத்தில் ஓர் அங்கமாகிவிட்டேன். அவர் தாய் சோனா பாய் இருந்ததுவரை என் தயிர் சாதத்துக்கு நார்த்தங்காய் கொடுத்தனுப்பியது அவர் தான். ‘உப்பிட்ட’ நார்த்தங்காய் அளித்தவரை நான் உள்ளளவும் மறக்கமாட்டேன். இவரது மனைவி தன் பெயருக்கேற்ற மாதிரி அன்னபூரணி மட்டுமல்ல…. பூமாதேவியும் தான்.

நான் ஓர் ஊறுகாய்ப்பிரியன் என்பது என் நண்பர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஒரு தடவை லெனின் திருப்புணித்துறையிலிருந்து இரண்டு பெரிய பாட்டில்கள் நிறைய வடுமாங்காய் – இவர் மாமியார் போட்டது – இரு கைகளில் சுமந்துகொண்டு, இரவில் ரிஸர்வேஷனில்லாமல் ரயிலேறியிருக்கிறார். இவரை அடையாளம் கண்டுகொண்ட T,T.E. , ‘ஸாறே! நிங்ஙளாராணெந்நு எனிக்கறியாம். ஸாறுடெ கொறே சித்ரங்ஙள் ஞான் கண்டிற்றொண்டு. பக்ஷெ இந்நு ஒரு ரக்ஷயுமில்லா. வண்டி ஃபுள் டைற்றாணு’ என்று சொல்லி இவரை பாத்ரூம் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டார். இரவு முழுவதும் தூங்காமல், விடியற்காலம் சென்னை வந்திறங்கிய திரு. லெனின் வீட்டுக்குக்கூட போகாமல், நேராக என் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதிகாலையில் கதவைத்திறந்த சமையல்கார அம்மாவிடம் இரு ஊறுகாய் பாட்டில்களையும் கொடுத்துவிட்டு போய்விட்டார். தூங்கியெழுந்த நான் டைனிங் டேபிள் மேல் இருந்த பாட்டில்களைப்பார்த்ததும், ’யாரும்மா கொண்டுவந்தாங்க?’ என்று கேட்டேன். அதற்கு ’விடியக்காலம் ஒரு ஊறுகாய்க்காரர் குடுத்துட்டுப்போனார்’ என்றாள். சந்தேகப்பட்ட நான் ‘எப்படி இருந்தார்?’ என்று கேட்டதற்கு, ‘தாடியோடெ மடிச்சுக்கட்டின வேட்டி’ என்று பதில் வந்தது. விஷயமறிந்ததும், அந்த அம்மா ‘ஐயோ! அவரா? மலையாள படங்கள்ளே Editing: B. லெனின் V.T. விஜயன்னு வருமே….அவரா?.......ஓ…பீம்சிங் பையன்!……உள்ளே கூப்பிட்டு ஒரு வாய் காப்பி குடுக்காமெப்போனேனே!’ என்று பதறினார். ஐந்தாறு முறை தில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர்களிடம் எடிட்டிங், டைரக்‌ஷனுக்கு விருதுகள் வாங்கிய இவரது கைகள் என் ஊறுகாய் ஜாடிகளையும் சுமந்திருக்கின்றன! இந்த மாமனிதனால் மட்டுமே தன்னை வருத்திக்கொண்டு, எதிர்பார்ப்பில்லாமல் பிறருக்கு உதவி செய்யமுடியும்! பல சமயங்களில் He goes out of the way to help others! போனமாதம் நடந்த திரு. கக்கன் நூற்றாண்டுவிழாவையொட்டி, அவரது வாழ்க்கையில் சில சம்பவங்களைக்கொண்ட ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டது. அதில் நான் கக்கனாக நடித்தேன். ஏனென்றால் திரு. கக்கனைப்போல் வாழமுடியாது…….நடிக்கத்தான் முடியும்! இதைக்கேள்விப்பட்ட திரு.லெனின், ‘மணிசார்! அதை நான் எடிட் பண்ணித்தரேன்!’ என்று அவராகவே சொன்னார். பணம் வாங்கமாட்டார் என்பதனால், நான் மறுத்துவிட்டேன். சில சமயங்களில் நான் நினைத்ததுண்டு: ‘அவருக்கிருக்கும் பரந்த ஆளுமைக்கு, இந்தக்காலத்தில் இப்படி வாழத்தெரியாத மனிதராக இருக்கிறாரே! ஒரு மனிதனுக்கு இத்தனை நேர்மை தேவை தானா?’ என்று. இந்த வியாபார உலகில் -- பணப்புழக்கம் நிறைந்த சினிம உலகில் -- எப்படி தன்னை விற்பனை செய்துகொள்வதென்பது அவருக்குத்தெரியாத கலை. But he leads his contented life very happily on his own terms! அவருக்கு இது தான் பிடித்திருக்கிறது! எனக்கும் அவரிடம் இது தான் பிடித்திருக்கிறது!

இன்னொரு உதாரணம்: இந்தியாவிலேயே இரண்டாவது முறையாக ஒரு தமிழனுக்கு சிறந்த இயக்குநருக்கான தங்கத்தாமரை விருது 2003-ல் என் நண்பர் லெனினுக்கு கிடைத்தது, ஊருக்கு நூறுபேர் படத்துக்காக. அந்தச்செய்தி அன்று நம் தமிழ்ச்சானல்களுக்கு முக்கியமாகப்படவேயில்லை. ’மானாட மயிலாடுவதில்’ தான் அவர்களுக்கு அக்கறை. மலையாள ஏஷியாநெட் மூலம் தான் நான் செய்தியறிந்தேன். (படத்தில் நானும் தலையைக்காட்டியிருக்கிறேன்!) அதற்கான ரொக்கப்பரிசு ரூ. 25,000-த்தை, படவிழாவுக்காக நாங்கள் கோவை போயிருந்தபோது, தொண்டாமுத்தூர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு தானமாகக்கொடுத்துவிட்டார். சரி, போனால் போகட்டும் என்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்த விஷயம் அவர் தனக்கு ஜனாதிபதி கழுத்தில் போட்ட தங்கப்பதக்கத்தையும் கழட்டி அந்த மாணவன் கழுத்தில் போட்டது தான்! அந்தப்பதக்கம் இப்போது சேட் கடைக்குப்போகாமல், அந்தப்பையன் வீட்டில் தான் இருக்குமென்று நம்புவோம். விழா முடிந்து சென்னை வந்ததும், கைச்செலவுக்காக, தன் நெருங்கிய நண்பரிடம் கைமாற்றாக ரூ. 10,000 வாங்கியதும் எனக்குத்தெரியும். இவருக்கென்ன தமிழ்த்திரையுலகம் கோடிக்கோடியாக கொட்டிக் கொடுத்திருக்கிறதா? இல்லை…. அப்படி கிடைத்தவர் தான் கொடுக்கிறாரா? இதற்கும் ஒரு கனிந்த நிறைவான மனது வேண்டும்! அது இவரிடமிருக்கிறது!

பார்வைக்கு பசுவாக இருக்கும் இவர் சினிமாத்துறைக்கு ஏதேனும் பிரச்னைகள் வந்தால் புலியாக போர்க்கொடி உயர்த்துவார். He is always anti-Establishment and politically incorrect. அரசுக்கெதிராக இவர் விமர்சனங்கள் நியாயமானவை…….கூரானவை. மற்றவர்களைப்போல தன் சொந்த நலனுக்காக யாரிடமும் எந்த சமரசமும் செய்துகொள்ளத் தெரியாதவர். அதனால் தான் அவரால் இத்தனை எளிமையாக வாழமுடிகிறது! தன்னை ‘சினிமாவால் கவரப்பட்டு, உருப்பட்டு, அதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஒரு தொழிலாளி’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மாமனிதர் கனவுத்தொழிற்சாலையின் பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கி, சினிமா….நிஜமா? என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். ’நக்கீரனில்’ வெளியான 32 கட்டுரைகளின் தொகுப்பு. சினிமாத்துறையிலிருக்கும், அதில் ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகமது. டெலிபோனில் பேசும்போது இவருக்கு ‘ஹலோ’ என்ற வார்த்தை வராது. பதிலாக ‘வாழ்க வளமுடன்” என்ற கம்பீரமான குரலில் தான் பேச்சை தொடங்குவார். அதனால் தான் இவரும் வளமுடனே வாழ்கிறார்!

இவர் தன்னைப்பற்றி என்ன சொல்லிக்கொள்கிறார்? “என் மொழி சினிமா. இது மொழியை மீறிய கலை. என் தாத்தா அகர்சிங் ராஜஸ்தானைச்சேர்ந்த ரஜபுத்திரர். அவர் மனைவி ஆந்திராவைச்சேர்ந்த ஆதியம்மா. அவர் மகன் பீம்சிங். தாத்தாவின் வழியிலே, மகனுக்கும் ‘சிங்’ ஒட்டிக்கொண்டது. என் தாய், அதாவது பீம்சிங்கின் மனைவி சோனாபாய் காவிரி வளம் கொழித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சோனாபாயின் தந்தையோ ராகவாச்சாரி என்கிற தமிழ் ஐயங்கார். தாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். எனது மனைவி கேரளத்தைச்சார்ந்தவர். மொழிகளும், இனங்களும், எல்லைகளும், நிறங்களும், கலாச்சாரங்களும் சங்கமித்ததின் ‘கரு’ நான். இப்போதைக்கு நான் தமிழன்……ஒரு இந்தியன்…….எல்லாவற்றுக்கும் மேலாக நான் மானுடன்” இந்திய ஒருமைப்பாட்டுக்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்கமுடியுமா? இத்தனை விசாலமான விசிட்டிங் கார்டு கொண்டவர் கையில், விசிட்டிங் கார்டே வைத்துக்கொள்ளாதவர்! எங்கள் தொந்தரவு பொறுக்கமுடியாமல் தான் அவரிடம் இப்போது செல்போன் இருக்கிறது!

சமீபகாலம் வரை, தேசிய விருதுகள் பெற்ற எல்லா மலையாளபடங்களுக்கும், தமிழ்ப்படங்களுக்கும் எடிட்டிங் திரு லெனினாகத்தானிருக்கும். படத்தில் வரும் கிரெடிட் கார்டுகளைப்பார்க்கவேண்டிய அவசியமேயிருந்ததில்லை. எத்தனை படங்களில் எடிட்டிங்: B . லெனின் - V.T. விஜயன் என்று இந்த கத்தரிக்கோல் இரட்டையர்கள் பெயரைப்பார்த்திருப்போம்! தன் கத்தரிக்கோலால் பல சிறந்த படங்களை மெருகிட்டு நமக்களித்தவர். அகில இந்திய அளவில், ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில், ஐந்துமுறை இந்திய ஜனாதிபதிகளிடம் எடிட்டிங் கலைக்காக விருது வாங்கியவர். இருந்தும் எப்படி இத்தனை எளிமையாக இருக்கிறாரென்ற ரகசியத்தை இவர் யாருக்கும் கற்றுக்கொடுக்கவில்லை……. ஏனென்றால் எளிமை கற்றுக்கொடுத்து வருவதில்லை!

தன் தந்தையார் பீம்சிங் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், மரியாதையுடன், ‘டைரக்டர்’ என்றே குறிப்பிடுவார். அந்த ‘டைரக்டர்’ தனக்குத்தெரிந்ததையெல்லாம் தனயனுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு, இந்த இளைஞரை சில வருடங்கள் பம்பாய்க்கு அனுப்பினார். அங்கே ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற மேதைகளுடன் பணிபுரியும் வாய்ப்புக்கிட்டியது. இவரது பம்பாய் அனுபவங்கள் மிக சுவாரசியமானவை. சாம்பிளுக்கு ஒன்று: பழம்பெரும் ஹிந்தி நடிகர் ப்ரேம்நாத் டப்பிங் பேசவந்தால், படத்தில் என்ன உடையுடன் பேசியிருந்தாரோ அதே உடையை டப்பிங் போதும் போட்டுக்கொண்டு தான் பேசுவேன் என்று அடம் பிடிப்பாராம்! படத்தில் ஹீரோவால் தரையில் தள்ளப்பட்டு பேசும் வசனங்களை, டப்பிங் ஸ்டுடியோவில் தரையில் படுத்துக்கொண்டேதான் பேசுவாராம்.

பாரதி படத்துக்குப்பிறகு வந்த எல்லா ’புத்தா பிக்சர்ஸ்’ தயாரிப்புகளிலும் நான் ஆஸ்தான நடிகனாகிவிட்டேன். லெனின் இயக்கிய மொட்டுக்கா, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறுபேர், றெக்கை போன்ற படங்களிலும் இனி இவர் இயக்கப்போகும் எல்லாப்படங்களிலும் தவறாமல் நான் வருவேன்,…….. நான் இருக்கும் வரை! படத்தில் எனக்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்குவார். படப்பிடிப்பின்போது, நடிகர்களிடமிருந்து தனக்குத்தேவையானதை பிடுங்கி எடுத்துக்கொள்ளும் பக்குவம் இவருக்குண்டு. இரண்டே மானிட்டர்……ஒரே டேக். அதனால் தான் ஒரு இயக்குநராக, 2002-ல் வெறும் பதிமூன்று லட்சம் ரூபாயில், ஊருக்கு நூறுபேர் என்ற தரம் வாய்ந்த படத்தை எடுக்கத் தெரிந்திருந்தது. இவரால் தான் நான் ‘One Take Actor’ என்ற பட்டத்தை உதவி இயக்குநர்களிடமிருந்து பெற்றேன். இந்த நல்ல மனிதர் சொன்னார்: ‘மணிசார் ஒரு ஃப்ரேமில் வந்தாலும், அந்தப்படத்துக்கு அவார்டு நிச்சயம்!’ என்று. நினைத்துப்பார்த்தால், அதில் கொஞ்சம் உண்மையிருப்பதுபோல் தோன்றுகிறது. என் முதல் படம் ஆங்கிலத்தில் BBC Channel-4, London தயாரித்து அருந்ததி ராய் கதைவசனமெழுதிய ‘The Electric Moon’. இதற்கு 1992-ல் இந்தியாவில் தயாரித்த சிறந்த ஆங்கிலப்படத்துக்கான விருது கிடைத்தது. என் முதல் தமிழ்ப்படமான பாரதி, லெனின் இயக்கிய ஊருக்கு நூறுபேர், மொட்டுக்கா, ஜெயபாரதியின் நண்பா….நண்பா, அம்ஷன்குமாரின் ஒருத்தி, ஷங்கரின் அன்னியன் சேரனின் ஆட்டோகிராப் – இந்தப்படத்தில்இதில் ஒரே ஒரு ப்ரேமில் தான் தலைகாட்டியிருக்கிறேன் – இப்படி நான் தலையைக்காட்டிய பல படங்கள் தேசிய விருது பெற்றிருக்கின்றன. ஆனாலும் மற்ற நல்ல டைரக்டர்கள் என்னை கண்டுகொள்வதேயில்லை!

நமது பிறந்தநாளை நாம் வீட்டில் கொண்டாடுவோம். இவர் பிறந்தநாளை நாடே கொண்டாடுகிறது! ஆம், எல்லோரும் கொடியேற்றிக் கொண்டாடுகிறோம். ஆகஸ்ட் 15-ம் தேதி பிறந்தவர். நண்பர்களுக்கு அவர் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொள்ளும் சிரமத்தைக்கூட அவர் கொடுக்கவில்லை.

நடைக்கு அஞ்சாத மனிதர். அதில் எனக்கு நேர் எதிர். ஆழ்வார்பேட்டையிலிருந்து விருகம்பாக்கம் வரை நடந்தே வந்து, ‘மணிசார், காலையிலே உங்களோடு சேர்ந்து ஒரு பில்டர் காபி சாப்பிட வந்துட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே நுழைவார். அவர் வீட்டிலிருந்து குன்றத்தூருக்கு நடந்தே போய்விடுவார். இவருடன் சுற்றுப்பயணம் போவது ஒரு சுகமான அனுபவம். ஆனால் ஒன்று…….. என்னையும் நடக்கச்சொல்லி பிராணனை வாங்குவார்! றெக்கை படப்பிடிப்பின்போது, முப்பது நாட்கள் மதியம் ஒரே நேரம் அரைமூடித்தேங்காயும் ஐந்து வாழைப்பழங்களும் மட்டும் சாப்பிட்டுவிட்டு, நாளெல்லாம் புத்துணர்ச்சியோடிருப்பார். இதைத்தான் மரபின் மைந்தன் ‘கோவில் யானை’ என்று பொருத்தமாக வர்ணித்திருந்தார்! ஒருவேளைப்பசி கூடப்பொறுக்கமுடியாத இடும்பை கூர் வயிற்றைக்கொண்டிருக்கும் நான், புரொடக்‌ஷன் முத்தையாவிடம், இவர் வேறு ஏதாவது சாப்பிடுகிறாரா என்று ரகசியமாக விசாரிப்பேன்.

சூட்டிகையான இரு பெண்கள். திருப்புணித்துறையில் நடந்த இருவர் திருமணங்களுக்கும், மணப்பத்திரிகைகளில் அச்சிடுவது போல், ‘நான்கு நாட்கள் முன்னதாகவே போயிருந்து, தம்பதிகளை ஆசீர்வதித்து, அவரையும் கெளரவித்துவிட்டு’ வந்திருக்கிறேன்! இப்போது இவருக்கு மிக நெருக்கமான தோழி இவர் பேத்தி தான்!

உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட என் புத்தகத்தில், என்னைப்பற்றி இப்படி எழுதியிருந்தார்: ‘ஒருவகையில் பாரதி மணி எனக்கு ’பைய்யா’ (Bhaiyaa) . ஹிந்தியில் பைய்யா என்றால் சகோதரர் என்று பொருள். ஆனால் பையன்களைப்போல் தான் சிரிப்பார், அழுவார், சந்தோஷப்படுவார். அவர் கண்களில் எப்போதும் மகிழ்ச்சியிருக்கும். முறையாக சங்கீதம் பயிலாத இந்த மனிதருக்கு இத்தனை சங்கீத ஞானம் எங்கிருந்து வந்ததோ? தில்லியில் எவ்வளவு பெரிய உத்யோகங்களில் எல்லாம் இருந்தவர், இங்கே இந்த தமிழ் சினிமாவிலா வந்து மாட்டிக்கொள்வார்? யார் கூப்பிட்டாலும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளைப்போல, ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம், ஷார்ட் பிலிம், டாகுமெண்டரி, டி.வி. சீரியல்கள், விளம்பரப்படம், F.M. ரேடியோ என்று தன் தலையைத் தானே நுழைத்துக்கொள்வார். கூப்பிடுபவர்களும், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல இவருக்கு கடுக்காய் கொடுத்து விடுவார்கள். கடுக்காயைச் சாப்பிட்டாலும், கசப்பு என்பது இவரது முகத்தில் தெரியாத அளவுக்கு குழந்தையைப்போல் ஒரு கள்ளம் கபடமற்ற சிரிப்பையே உதிர்ப்பார்.’………… இவர் வீட்டுக்குப்போனால், அப்போது காபிக்கொட்டை அரைத்துபோட்ட வாய் மணக்கும் டிகிரி பில்டர் காப்பி கிடைக்கும்! ……… ‘ரெளத்ரம் பழகு’ என்று சொன்ன பாரதியின் கோபத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் பாரதி மணி கோபத்திலும் ஒரு குழந்தையைப்போல் தான் இருப்பார்……..Bharati Mani is a Warrior, who will fight till the end …. For me he is …..A Friend, Philosopher and Guide. Sir, I salute you!......இப்படி தன் கட்டுரையை முடித்திருந்தார் என் நண்பர்!

இவையெல்லாம் பொய் கலந்த புகழாரங்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவருக்கும் தெரியும். யோசித்துப்பார்க்கும்போது, இந்தப்புகழெல்லாம் ஓரளவுக்கு அவருக்குத்தான் பொருந்தும். நிரந்தர வருவாய் வரும் எடிட்டிங் வேலையை உதறித்தள்ளிவிட்டு, தமிழகத்தில் கைப்பணத்தைச்செலவழித்து ஊரூராகச்சென்று, குறும்படங்களைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இளைஞர்கள் தயாரித்துக் கொண்டுவரும் குறும்படங்களுக்கு இலவசமாக எடிட்டிங் செய்து கொடுக்கிறார். யாராவது தனக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்தால், அதை வேண்டுமென்றே தவிர்க்கிறார். பாராட்டுகளுக்கு விழைந்து நிற்கும் எனக்கு, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியம் தான் மேலிடுகிறது!

இந்த நல்ல மானுடனை நண்பனாகப்பெற்ற நான் சொல்கிறேன்: …..Mr. Lenin is my Best Friend, Philosopher and Guide. ………..Sir, I salute you!

******* **** **** **** *******

1 comment:

  1. இவரால் தான் நான் ‘One Take Actor’ என்ற பட்டத்தை உதவி இயக்குநர்களிடமிருந்து பெற்றேன்//

    பாராட்டுக்கள் !!நீங்கள் நடித்த படங்கள் இனி சின்னத் திரையில் வந்தா கவனித்து பார்க்கிறேன்.
    சில நல்ல படங்களில் ஒரு முறை தோன்றியவர்கள்
    கூட மனதில் அழுந்த பதிவதுண்டு.

    ReplyDelete