Monday, September 12, 2016

ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையில் தமிழ் சினிமாஉலக திரைப்படங்கள் குறித்தான  பல புத்தகங்கள் வரும் சூழ்நிலையில் தமிழ் சினிமா குறித்தான புத்தகங்கள் வெகு குறைவாகவே பதிப்பிக்கப்படுகின்றன. உலக சினிமா, உலக சினிமா இயக்குநர்கள் பற்றி எழுதப்படும் புத்தகங்களுக்கு தமிழில் இருக்கும் சந்தை மதிப்பு தமிழ் படங்கள் குறித்தான புத்தகங்களுக்கு இல்லை என்பதை பதிப்பாளர்களே ஒத்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அப்படியே விற்றாலும் ஒரு வெற்றி பெற்ற நடிகரின் வாழ்க்கை கதைகளோ, அல்லது வெற்றி பெற்ற படங்களின் திரைக்கதை பிரதிகளே அதிகமாக விற்கின்றன. இதை வாங்குபவர்கள் பெரும்பாலும் உதவி இயக்குனர்கள் , சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள். ஆனால் தமிழ் திரைப்படங்களை அது தமிழர் வாழ்க்கையில் உருவாக்கி இருக்கும் பாதிப்புகளை பின்புலமாக கொண்டு தமிழ்  திரைப்படங்கள் குறித்து வரும் கட்டுரைகளும் குறைவு. அதன் விளைவாக தமிழ் திரைப்படங்களின் உண்மைத் தன்மையை விளக்கும் கட்டுரை தொகுப்புகளும் மிக அருகிவருகின்றன. இந்த சூழலில்   ந. முருகேசபாண்டியனின் '' தமிழர் வாழ்க்கையும்.திரைப்படங்களும் '' என்னும் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் ஆறு கட்டுரைகள் மட்டுமே  கொண்ட 70 பக்கங்கள் உள்ள இந்த புத்தகம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ந. முருகேசபாண்டியன்  இலக்கிய விமர்சகராக  பல வருடங்களாக தொடர்ச்சியாக செயல்பட்டு வருபவர். ''ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்'', கிராமத்து தெருக்களின் வழியே '' என்கிற இரண்டு கட்டுரை தொகுப்புகளின் வழியாக தமிழ் மக்களின் பண்பாட்டு  கூறுகள் அடைந்து வரும் மாற்றத்தை துல்லியமாக பதிவு செய்துள்ளார். கிராமத்து தெருக்களின் வழியே புத்தகத்தில் உடும்பை விற்க வரும் ஒருவன்  இன்றைய கிராமத்தில் அடையும் கஷ்டங்களை  அற்புதமாக விவரித்து இருப்பார் . அந்த காட்சிகள் இன்னும் என் மனதில் கொண்டிருக்கிறது. சினிமா பற்றி என்னிடம் நேரடியாக பலவிஷயங்களை  பேசியுள்ளார். மதுரையின் பழைய திரையரங்குகள் பற்றி, எண்பதுகளில் பத்மராஜன் , பரதன்  போன்றவர்கள் இயக்கிய மலையாள திரைப்படங்களை ஏதோ பிட்டு படங்கள் போல விளம்பரம் செய்து  திரையரங்கங்ளில் கூட்டம் கூடச் செய்ததை  பற்றி ஒருமுறை பேசியது நல்ல நகைச்சுவையுடனும், அந்த கால கட்ட படங்களின்  பாலியல் வெறுமையையும் வெளிப்படுத்தியது. '' சார் இந்த விஷயங்களை நீங்க கட்டுரைகளாக எழுதலாமே, ஒரு கால கட்டத்தின் பதிவாக இருக்கும்'' என்றேன்.  எனக்கு தெரிந்தே  பரதனின் '' ரதி  நிர்வேதம்'', ''தகரா''  போன்றவை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் செக்ஸ் படங்கள் போலவே ''ஏ'' என்ற எழுத்தை பெரிதாக போட்டு விளம்பரம் செய்திருப்பார்கள். தகரா படம் தான் பின்னர் தமிழில் ஆவாரம் பூவாக பரதனே இயக்கினார்.

 இந்த புத்தகத்தில் மதுரையில் அழிந்து போன திரையரங்கங்கள் குறித்த நீண்ட கட்டுரை மிக முக்கியமான பதிவு. ஒரு காலத்தில்  மதுரை திரையரங்கங்களின் சொர்க்கமாகவே விளங்கியது. இரண்டு மைல் தொலைவுக்கு 4 திரையரங்குகள் இருந்த காலம் மதுரையில் உண்டு. அவற்றில் பாதி கூட இன்றில்லை.  ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர்  என்று அழைக்கப்படும் தங்கம் ஆயிரம் இருக்கைகள் கொண்டது. அது மூடப்பட்டு பல வருடங்களாகி இன்று பாழடைந்த நிலையில் உள்ளது. புத்தகத்தின் அட்டைப் படத்தில் தங்கம் தியேட்டரின் இன்றைய நிலையை பார்க்கலாம். எம்ஜிஆர் படங்களே வெறும் 70 நாட்கள் ஓடும் அந்த தியேட்டரில் பாக்யராஜின் '' தூறல் நின்னு போச்சு'' 150 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இன்றெல்லாம் இரு வாரங்கள் ஓடினாலே படம் வெற்றி என்ற அளவில் தமிழ் சினிமா மாறியுள்ளதை, மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை  விமர்சனத்துக்கும் உட்படுத்தி இருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின்   சினிமா வியாபார அரசியலை அம்பலப்படுத்தும் '' விஸ்ரூப பூச்சாண்டி'' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சினிமாவை காட்டி ரசிகர்களை எவ்வாறு  பெரிய  நடிகர்கள்  ஏமாற்றுகிறார்கள் என  அருமையான விளக்கத்துடன்  எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்ச்னையே விஸ்வரூபம் படம் வெளிவராதது என்று  டி.வி.ஊடகங்கள்  அந்த மாதம் முழுவதும் நடந்து கொண்டதையும் இந்த கட்டுரையில் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். கதாநாயகிகளை  கவர்ச்சி பண்டங்களாக , படுக்கையறைக்கும் , முத்தக் காட்சிக்கும் மட்டுமே பயன்படுத்துபவர்களாக காட்டியதில் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் பங்கு அதிகம். இதை அவரது விக்ரம்(லிசி), மகாநதி( சுகன்யா கதாபாத்திரம்), மைக்கேல் மதன காமராஜன் (ரூபிணி) கதாபாத்திரம், ஒரு ஆணுக்காக இரண்டு பெண்கள் அடித்து கொள்ளுதல் ( பஞ்ச தந்திரம், அவ்வை சண்முகி, விஸ்வரூபம்) ஆகிய பெரும்பான்மை படங்களில் காணலாம். தேவர் மகனில்  படம் முழுக்க ஆதிக்க சாதி அரசியலை பேசிவிட்டு, கடைசி காட்சியில் '' பிள்ளைகளை படிக்க வைங்கங்கய்யா  '' என்ற ஒரு  வசனத்தின் மூலம்  சாதிக்கு எதிரான படமாக காட்டி  அந்த வருடத்தின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது வரலாறு. விருமாண்டி படமும்  ஆதிக்க சாதி அரசியலை தூண்டி விடும் படம் தான். இத்தகைய பிற்போக்கான படங்களை எடுத்து விட்டு உலக சினிமாவே தன் கையில் உள்ளது போல பேசும் கமலின் வியாபார அரசியலை இந்த கட்டுரை அக்கு வேர் , ஆணி வேராக ஆராய்ந்துள்ளது.

மற்ற கட்டுரைகளும்  தமிழ் திரைப்படங்களில் உள்ள நுண்ணரசியலை பேசுவதாக உள்ளது. தமிழ் சினிமா உருவாக்கத்தில் நாவல்கள் என்ற கட்டுரை 
சினிமாவுக்கு எழுத முயல்பவர்களுக்கு பல புதிய விஷயங்களை சொல்கின்றன. இந்த கட்டுரைகளில் உள்ள  கருத்துக்களை ஏற்கலாம்.மறுக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் புறந்தள்ள முடியாத அளவுக்கு பல  நுண்ணிய அவதானிப்புகள் இந்த ஆறு கட்டுரைகளிலும் காணக்கிடைக்கிறது. சினிமாவை கருத்தியல் ரீதியாக அணுகுபவர்களுக்கு மட்டுமல்ல, சினிமாவை நுட்பமாக புரிந்து கொண்டு ரசனையை வளர்த்தெடுக்கவும் இந்நூல் பெரிதும் பயன்படும். முருகேசபாண்டியனின் உரைநடை மொழி  ஓரே மூச்சில் வாசிக்க வைக்கும் படி சீராக இருப்பது பாராட்டிற்குரியது.

தமிழர் வாழ்க்கையும், திரைப்படங்களும் ( கட்டுரைகள் ) 
வெளியீடு டிஸ்கவரி புக் பேலஸ் , விலை 60ரூபாய் 

Friday, July 8, 2016

விஜய் மகேந்திரனின் 'நகரத்திற்கு வெளியே..' சிறுகதைத் தொகுப்பு குறித்து! - பாலு மணிமாறன்நான் நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உழன்று உழன்று வாழ்ந்தவன். மாநகர வாழ்க்கையும் பரிட்சயம்தான். சிங்கப்பூரிலும் அதி நவீன மாநகரை ஆசியக் கண்டத்தில் பார்க்க இயலாது. ஒரு தலைமுறையில் கிரமத்திலிருந்து மாநகராக மாறிய அதிசயம் இது. இப்போது இங்குதான் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாசம்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, போன மாதம்தான் நான் பிறந்த கூளையனூருக்குப் போயிருந்தேன். குக்கிராமமாக இருந்த கூளையனூர், சிறுநகர்போல மாறியிருந்தது. உதடு சிவக்க வெத்தலையை மென்றபடி, கன்றுக் குட்டியைப் பிடித்து நின்றபடி, தாவணியை இடுப்பில் இழுத்துச் செருகிக் கொண்டு, 'நாளைக்கு ஜல்லிக்கட்டு, நீ காளையெல்லாம் அடக்க வேணாம், இந்தா, இந்த கண்ணுக்குட்டியை அடக்கு பார்க்கலாம்..' என்று கிண்டலடித்த அத்தை மகள் பவுனம்மாளை 20 வருஷத்துக்கப்புறம் பார்த்தேன். தலையில் நரைகூடி, 'பேரன், பேத்தியெல்லாம் எடுத்தாச்சு தெரியமா...' என்றாள் நாணத்தோடு. பழைய கிண்டல் அப்படியே மீதமிருந்தது. ஆனால், அக்கிராமம் மாறி விட்டது.
சிறு வயதில் இராயப்பன்பட்டி ஹாஸ்டலில் படிப்பு. கால் பரிட்சை, அரைப்பரிட்சை விடுமுறைக்கு, கம்பத்திலிருந்து திருவள்ளுவர் பஸ் பிடித்து வட சென்னையின் எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு வந்து சேருவேன். அப்பா அங்குத்தான் வேலை பார்த்தார். குடும்பமே அங்கிருக்க, எனக்கு ஹாஸ்டல் வாசம். பொழுது விடிந்தும் விடியாத காலையில், பாரிஸ்கார்னரில் இறங்கி, எண்ணூருக்கு பஸ் ஏறிப் பயணிக்க, மெல்ல வெயிலேறி, பஸ் ஜன்னல் வழியே சுல்லெனக் குத்தும். வழி நெடுக மீன் கூடைகள் ஏறி இறங்கியபடி இருக்கும். அந்த மீன் வாசம்தான், நான் குடும்பமடையும் கதையின் பின்னணி இசை. அது 40 வருடத்திற்கு முந்திய சென்னை. அந்த சென்னை மாறி விட்டது.

எப்படிப்பட்ட நகரமும் ஐந்து வருடத்திற்கொருமுறை தன் முகம் மாற்றலைச் செய்கிறது.' இந்த 40 வருடத்தில் சென்னை எட்டு முறையாவது முகம் மாற்றியிருக்கும். ஒவ்வொருமுறையும் வானம் பார்க்கும் விஸ்தாரத்தைக் கட்டிடங்கள் கொண்டு மறைக்கும் விரல் நீட்டி நிற்கிறது நகரம். 'நகரத்திற்குவெளியே...' தொகுப்பில், நகரங்களும் நகரின் வெளிப்புறங்களும் நகரற்ற வெளிகளும் களங்களான கதைகளை எழுதி இருக்கிறார் விஜய் மகேந்திரன்.

சிறுகதைகள் வீட்டுச் சுவரின் சித்திரங்கள் போல. சோபாவில் அமர்ந்து பார்க்கும் வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு சிந்தனைகளை விதைத்தபடி இருக்கும் சித்திரங்கள். இன்னொரு வகையில், ஒரு தாள லயத்தில் சில எளிய அசைவுகளில் சோவுற்றிருக்கும் மனதை துள்ளச் செய்யும் தேவராட்டம் போன்ற கதைகள் இவை என்று சொல்லலாம். ஒரு வீதியில் தேவராட்டம் ஆடிச் செல்லும் கூட்டத்தில் சில கதாபத்திரங்கள் விலக, சில கதாபாத்திரங்கள் சேர்ந்து கொள்ள, இவர் நடத்தும் கதை நடனம் தொடர்ந்து மனதைத் துள்ளச் செய்கிறது.

ஆண்கள், பெண்கள், இளையர், முதியோர், நகரத்தினர், நகரமற்றோர் என எல்லோரையும் கதாபாத்திரமாக்கி, மனம்நோக்கி, வரைபடம்மாக்கி வைத்திருக்கின்ற இத்தொகுப்பின் கதைகள். முதல் கதை 'சனிப் பெயர்ச்சி'யே அதிர்ச்சி அதிர்வுகளை எதிர்பார இறுதியில் கசிய விடுகிறது. 'விசாரனை' திரைப்படத்தில் பார்த்த போலிஸின் விகாரமுகத்தின் அவுட் ஆஃப் போகஸ் போலச் சிதைந்து செல்லும் முகமொன்றைக் காண்கிறோம். 'கல்லூரி ஆசிரியர் குடித்துவிட்டு போலீஸுடன் தகராறு என்று என்னைப் பற்றி செய்தி வந்திருந்தது' என்ற வரியோடு கதை முடிந்துவிடுகிறது. ஆனால், அதற்கு மேலும் எழுதி இருக்கிறார். முதல் தொகுப்பு. அடுத்த தொகுப்பென்றால் அப்படித்தான் முடித்திருப்பார்.

'இருத்தலின் விதிகள்' கதையாக இருக்க வாய்ப்பில்லை. உண்மையைக் கதை என்று கதை சொன்ன கதைதான். தமிழ் இருத்தலின் விதி பற்றிய குறியீடாகவும் இக்கதையைப் பார்க்கலாம். எவரோ சேமித்த அரிய தமிழ்நூல்கள் வீதிக்கு வருகின்றன. பழைய கடைக்காரன் கேட்கிறான், 'இவ்வளவு படிச்ச அந்தாளு, பிள்ளைகளுக்கு அதன் அருமை தெரியாமலா வளர்த்திருப்பான்!' அப்படித்தான் வளர்த்திருக்கிறான். நாமும் அப்படியே தமிழ் வளர்கிறோம். நம் எழுத்தைத் தமிழில் படிக்க இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தலைமுறை இருக்குமா என்ற தீவிரமான கேள்வியை அழுத்தமாக, பிரச்சார நெடியே இன்றி நம்முன் வைக்கிறது 'இருத்தலின் விதிகள்'
'சிரிப்பு' வேலையற்றவனின் மாய யதார்தவாதம், நப்பாசை, நம்பிக்கை என எப்படியும் கொள்ளலாம். 'ராமநேசன் எனது நண்பன்' விரும்பியதை வெறுக்கும், வெறுத்ததை விரும்பும் மனதின் மாய ஆட்டம்.
'மழை புயல் சின்னம்' காதல் பறவையின் வண்ணமயமான சிறகுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓர் இறகு போலிருக்கிறது. காதலுக்குத்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள். ஒரு கணினி, நம் எழுத்துக்குத் தேர்ந்தெடுக்கச் சொல்லிக் காட்டும் வண்ணங்கலவை போல், நாமே தேர்ந்தெடுத்து பூசிக் கொள்ளத் தக்க வண்ணங்களைக் காட்டி நிற்கும் வழக்கம் காதலுக்கு உண்டு. சர்மிளா, சாரதிக்கு எடுத்து வைத்த ஆடைகளை முத்துக்குமாருக்குத் தரும் தருணத்தில் தன் காதலுக்குக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். அதை ஊகித்தறிந்தாலும், அவள் தேர்ந்தெடுக்கும்போது, தன் எழுத்தின் வழி, நம் மனதுக்குள் மெல்லிய மழை பொழிய வைக்கும் திறன் விஜய் மகேந்திரனுக்கு வாய்த்திருக்கிறது.
பிரியா, கேத்ரீன், பாக்கியலட்சுமியை வைத்து பின்னப்பட்ட நாகரிக வலை 'நகரத்திற்கு வெளியே'. 'கற்பு என்பது, பெண்களை ஏமாற்ற ஆண்கள் செய்த கற்பனை' என்று கமலஹாசன் 80களில் சொன்னதை ஞாபகப்படுத்திய கதை. காதலுக்கும் காமத்திற்குமான மெல்லிய கோட்டிற்கு அப்புறமும் இப்புறமும் தாண்டித் தாண்டி விளையாடும் நவீன விளையாட்டை, இத்தலைமுறை எந்த மனச்சிக்கலுமற்று கையாள்வதை காண்கையில் பழைய தலைமுறைக்கு கொஞம்ம் அதிர்ச்சியும் அதீத பொறாமையும் எழலாம். 'மலங்க மலங்க விழித்தாள் பாக்கியலட்சுமி' என்ற ஒற்றை வரியில் அந்தக் கதாபாத்திரத்தைச் சொல்லிவிட்ட திறனுக்கு, விஜய்க்கு திருஷ்டி சுற்றலாம். அதற்கு மேல் என்ன சொன்னாலும் அதற்கு மேல் ஒன்றும் சொல்லி விட முடியாது.
'அடைபடும் காற்று' முதிய தலைமுறையின் துயர்களை அதிகத் துயர் தெரியாமல் கொஞ்சம் கவித்துவத்தோடு சொல்ல முயல்கிறது. பிள்ளைகளின் புலம்பெயர்தலும் பெற்றோரின் தனிமையும் அதிகமாகப் போகும் ஒரு தலைமுறையின் பிரதிநிதித்துவக் கதை. வாழ்வின் இயல்பினை இயல்பாகச் சொல்ல முயன்றாலும் எல்லாம் மீறி, கொஞ்சம் கூடிதல் பிரச்சார நெடி. எனினும் பிரச்சாரங்களால் நிறைந்ததுதானே பழைய தலைமுறையின் கடந்த கால வாழ்க்கை?

'ஊர் நலன்' செல்வேந்திரன், கிராமத்துப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் பேசிப் பழகி இருக்கக்கூடிய கதாபாத்திரம்தான். இராயப்பன்பட்டி ஹாஸ்டலில் என்கூடப் படித்த நண்பன் ஒருவனை இப்படித்தான் அவனுடைய பதின்ம வயதில் ஊர் பெரிய மனுஷனாக சந்தித்தேன். தாத்தா இறந்ததால், வாரிசு அடிப்படையில் அவனுக்கு வந்த வாய்ப்பு. அந்த சந்திப்பில் அவனை 'டேய்' என்று கூப்பிடுவதா, '..ங்க' என்று கூப்பிடுவதா என்ற குழப்பம் நெடுநேரம் நீடித்தது. வீரபாண்டி கோயில் திருவிழாவின் தொடக்கத்தைச் சொல்லும் சடங்குகளில் அவன் காட்டிய பெரிய மனிதத் தனம் ஆச்சரியமாக இருந்தது. அவனா இவன்? செல்வேந்திரனின் ஆட்டம் ஒரு செய்தியாக மட்டுமே நம்முள் தங்கி விடுவது இக்கதையின் வெற்றியா அல்லது தோல்வியா என சொல்லத் தெரியவில்லை.

'காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன்' கருப்பசாமி பெரியவரைப் போலவே தள்ளாடித் தள்ளாடி நடந்து, கதைக்குத் தீனி போட இயலாது, அவரைப் போலவே பசியோடு காத்திருப்பதுபோலத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா? ஒரு கம்பீரத்தின் வீழ்ச்சி என்பது ஓர் ஆவேசத் துயரின் பேரொலி என்பதாகி நிற்கும் கந்தசாமி, எளிதில் கடந்துவிட முடியாத முக்கியமான கேள்வியே.

நல்லவர்கள் இருப்பதால், நல்லவர்கள் இன்னும் இருப்பதாக நாம் நம்புவதால்தான் இந்த வாழ்க்கை இன்னும் இனிக்கிறது. ஆசியா மேன்ஷன் அந்த நம்பிக்கையின் சுடரொலி. ஒரு கதைக்குள்தான் எத்தனை கிளைக்கதைகள். ஆசியா மேன்ஷனுக்கே ஒரு கதை இருக்கிறது. கதை சொல்லியாகத் துடிக்கும் கதாநாயகனுக்குக் கிடைத்த 'பாய்' மாதிரி, நமக்கும் ஒரு பாய் கிடைத்தால், நாள்தோறும் வாழ்வில் பிரியாணிதான் என்ற பசியாறலைத் தரும் கதை. கதையின் முடிவு முடிவாகப் படவில்லை. கதையின் நாயகன் அனுதினமும் சந்திக்கும் சம்பவங்களின் சிறு முடிவாக மட்டுமே பார்க்க முடிகிறது. அவனைச் சந்திக்கக் காத்திருக்கும் ஏமாற்றங்களை அவன் சந்திக்கவிட்டால், அவை ஏமாற்றமடைந்து விடாதா?
கிராமம் நகரம் மாநகரம் என்பதெல்லாம் மனம் சார்ந்த சொல்லாடல்கள் என்று சொல்லாமல் சொல்லும் கதைகளின் குவியலே 'நகரத்திற்கு வெளியே..' ஒரு கிராமத்துப் பஞ்சாயத்தில் பட்டென்று தாலியறுத்து, திருமணத்தைத் தீர்க்கும் வாழ்க்கை முறையை சென்னை போன்ற மாநகர வாழ்க்கையே அதிர்ந்துபோய் பார்க்கும் சாத்தியங்கள் உள்ளதை இக்கதைகளின் வழியே சிந்திக்கிறேன். காமம் என்பதும் தீர்விலா சிக்கலாகவே நாகரிக வாழ்வைப் பிடித்தாட்டுகிறது. அதை வாழ்வின் சாதாரண விஷயமாக்கும் சாத்தியங்கள் இருந்தால், வாழ்க்கை இன்னும் எளிதாகும் வாய்ப்புள்ளதென்றும் மனம் கிளர்கின்றன மகேந்திரனின் வரிகள். முதுமை குறித்து பயம் கொள்ளாது அதை வீரியத்தோடு எதிர்கொள்ளும் வழிகளை ஆராயும் அறிவார்ந்த முதியவர்களின் களமாகவும் இந்தக் கதைகள் இருக்கின்றன.
ஒரு பேருந்து பயணத்தில் பக்கத்தில் அமர்ந்து கதை சொல்லியபடி பயணித்து தன் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்ட புது நண்பனைப் போன்ற விஜய் மகேந்திரன், மறுபடியும் எப்போது பார்ப்பது என்று ஏங்க வைக்கிறார். ஆமாம், எப்போது நண்பரே?

Wednesday, June 29, 2016

இருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டிய கிளாசிக் எழுத்தாளன்!

நண்பர் கிராபியன் ப்ளாக்கின் வெளிவந்திருக்கும் சிறுகதை தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை


தமிழ் இலக்கிய உலகில் சிறுகதையாளனாக நுழைவது எளிதானது. ஆனால் வெற்றிப்பெற்று தனக்கான இடத்தை தக்கவைப்பது மிக கடினமான காரியம். வலுவான முன்னோடிகள் சிலம்பம் வீசிச்சென்ற இடம் இது. நாவல், கவிதை ,சுயபுராணப் பத்திகள் இவற்றையெல்லாம் வெளியிட எளிதாக பதிப்பாளர்கள் கிடைக்கலாம். சிறுகதை தொகுப்பு வீச்சுடன் வரவில்லையெனில் படைப்பாளி சொந்தச்செலவில் தான் வெளியிடவேண்டும். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளை பெரும்பாலான பதிப்பகங்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. அதே நேரத்தில் மறைந்த எழுத்தாளர்களின் கதைகளை கிளாசிக் என மொத்தத் தொகுப்பாக்கி கெட்டி அட்டைப்பதிப்பில் 800, 1000 என விலை வைத்து நம் மீது வீசுகிறார்கள்.

சமீபத்தில் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் ஒருவரின் மொத்த தொகுப்பைப் பார்த்தேன். இப்போது அவர் உயிருடன் இருந்தால் இந்த விலை கொடுத்து அவரே வாங்க மாட்டார். காலமெல்லாம் வறுமையில் கழித்து, புறக்கணிப்பில் வாழ்ந்தவர் அவர். தன்னுடைய கதைகள் முழுத்தொகுப்பாகி ஆங்கில புத்தகங்களின் தரத்தில் வந்துள்ளதை அவரால் பார்க்க இயலவில்லையே என வருத்தப்பட்டேன். ஒரு படைப்பாளி உயிருடன் இருக்கும் போது புறக்கணிக்கப்பட்டு இறந்த பின் எழுதப்படும் அஞ்சலிக்குறிப்புகள் மூலம் மட்டுமே குவியும் கவனம் கவலைக்குரியது.
மறைந்த பின் ஒருவரின் படைப்புக்களை திறனாய்வு செய்து கட்டுரைகள் எழுதுகிறவர்கள் அவர் உயிருடன் இருக்கும் போது ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போதே கவனப்படுத்தி கொண்டாடியிருந்தால் இன்னும் கொஞ்சநாட்கள் கூட அவர் உயிரோடு இருந்திருப்பாரோ எனக்கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

கிராபியன் ப்ளாக் தனது பூமியின் மரணம்...! இன்னும் 5 நிமிடங்களில்... தொகுப்போடு சிறுகதை உலகில் களமிறங்கியிருக்கிறார். இலக்கியம்,சினிமா தொடர்பான கூட்டங்களில் ப்ளாக் எனக்கு பரிச்சயம். சமூகம், இலக்கியம், சினிமா, ஊடகம் என பன்முகத்தளத்தில் இயங்கிவருபவர். நண்பர்களிடம் உண்மையாக அன்பு பாராட்டுபவர். நடிக்கத்தெரியாதவர். அவருடைய கதைகளில் முதல் கதையாக வாசித்தது 'கள்ள மௌனம்'. புஷ்கின் என்ற இயக்குனரின் சமரசமற்ற வாழ்க்கையை கூறுவதாக அமைத்துள்ளது. வணிக சமரசம் எதுவுமின்றி படம் எடுக்கும் புஷ்கின் சமூகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார் என்பதை துல்லியமாக கூறுகிறது.குறைவான பக்கங்கள் உடைய இக்கதை பலமுறை என்னை படிக்கத்தூண்டியது. 'போஸ்டர்' என்ற கதை உதவி இயக்குநராகவே இருந்து எந்த அடையாளமும் கிடைக்காமல் இறக்கும் நபரின் கதை.சினிமா உலகம் பற்றிய வர்ணனைகள் மிகுந்த அர்த்த செறிவுடன் ப்ளாக்கிற்கு எழுத வருகிறது.அவர் விளையாடிய மைதானமல்லவா அது!

'கன்னியாட்டம் கதை' நகரத்தில் காதல் என்ற சொல் எவ்வாறு தீட்டுக்கழிந்து போயிருக்கிறது என்பதை அப்பட்டமாக சொல்கிறது. நகர ஓட்டத்தில் நல்ல வேலை, பதவி உயர்வு, குறைவில்லாத வருமானம் என எல்லாவற்றிலும் உயரும் சிபி சக்கன்,காதலில் மிக அற்பமாக தோற்றுப்போகிறான். தோற்கடிக்கும் அங்கயர்கன்னி பாத்திரத்தை நுட்பமாக படைத்துள்ளார் ப்ளாக். சம்பவங்களை கோர்த்துள்ள விதமும் பாராட்டுக்குரியது.
'மெய்யாலுமா' கதை செய்தித்தாளில் வேலைசெய்யும் எழுத்தாளனின் வாழ்க்கை சாகசங்களை விவரிக்கிறது. ஒரு எழுத்தாளனாக பெரும் வரவேற்பை அவன் சார்ந்து இருக்கும் செய்தித்தாளின் ஆசிரியரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரவுநேரம் இருந்தால் தானே எழுதுவாய் என்று இரவுப்பணியாக கொடுத்து வறுக்கிறார். வேறுவழியின்றி பதவி விலகல் கொடுத்து விலகுகிறான். ஒரு எழுத்தாளன் பத்திரிக்கையில் வேலை செய்யும் போது வரும் பிரச்னைகளை மெல்லிய அங்கதத்துடன் எடுத்துரைக்கிறார் ப்ளாக்.

ப்ளாக்கின் கதைகளில் என்னை கவர்ந்த முக்கிய அம்சம் மெல்லிய நகைச்சுவை. அதுவும் பிளாக் காமெடி எனப்படும் அவல நகைச்சுவை கதைகளை ப்ளாக்கால் நன்கு எழுதமுடிகிறது.முதல் தொகுப்பில் இத்தனை கதைகள் நன்றாக வந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். சொற்களிலும், உரையாடல்களிலும் இன்னும் கூர்மை வரப்பெற்றால் ப்ளாக் நல்ல சிறுகதையாளர்கள் வரிசையில் உரிய இடத்தைப்பிடிப்பார்.சிறுகதைத தொகுப்புக்கள் குறைந்து வரும் வேளையில் கிராபியன் ப்ளாக்கின் வருகை வரவேற்கத்தக்கது.
என்று அன்புடன்
விஜய் மகேந்திரன்

Saturday, June 18, 2016

''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”

''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்பர் குமரகுருபரனுக்கு வழங்கப்படுகிறது.


அவரது கவிதைகள் மிக அந்தரங்கமான வாசிப்பு அனுபவத்தை கொடுப்பவை. தனக்கே உரிய பிரத்யேக மொழியையும் , தனிமையின் நிழல்களை கொண்டாட்டமாக மாற்றும் தன்மையும் கொண்டவை. இருண்மையான காட்சிபடிமங்களை இவ்வளவு எளிதாக கவிதையாக மாற்றும் தன்மை குமரகுருபரனுக்கே உரித்தானது .இவரது ஆதர்ச கவிஞர்கள் ஆத்மாநாமும், பிரமிளும் என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். நவீன தமிழ் கவிதைகளுக்கு தனது"ஞானம் நுரைக்கும் போத்தல்" '' மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' என்ற இரு தொகுப்புகளின் மூலம் புதிய திசையை காட்டியவர் என்ற முறையில் இந்த விருதுக்கு முழுமையான தகுதி உடையவர் . அவருக்கு என் வாழ்த்துக்கள்!

தனிப்பட்ட முறையில் பெரும் கொண்டாட்ட குணத்தை உடையவர் குமரகுருபரன் . அவருடன் நானும், நண்பன் விநாயக முருகனும் சென்னையில் இருந்து காரில் விமர்சகர் ந.முருகேசபாண்டியன் அவர்களின் மகள் திருமணத்திற்காக மதுரை சென்றோம், கிடத்தட்ட ''தில் சாத்தா கே'' படத்தில் மூன்று நண்பர்கள் கோவா போவார்களே அதுக்கு இணையான உற்சாகமான அனுபவமாக இருந்தது. அந்த படத்தில் வரும் அமீர்கானின் ஆளுமைக்கு இணையான உற்சாகம் கொண்டவர் குமார்! விருதுக்குரிய கொண்டாட்டத்தை விரைவில் தொடங்கட்டும் ! வாழ்த்துக்கள்!
விருது பெற்ற தொகுப்பில் எனக்கு பிடித்த குமரகுருபரனின் கவிதை

குற்றம் தவிர்

தண்டனைகள்
நியாயமொன்றை நிறைவேற்றுகின்றன.
சில சமயங்களில் நினைவுறுத்துகின்றன.
அச்சுறுத்துகிற நியாயத் தீர்ப்பொன்றில்
கடைசிக்கணம் அறிந்தவர் யாருமில்லை
இறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.
நெஞ்சமுடைந்து இறப்போர் குறித்து
ஒரு உரை நிகழ்த்துகையில்
நிகழ்த்துபவரின் இதயத்திலிருந்து
சில துளிகள் வாயோரம் கசிகின்றன.
மெல்லத் துடைத்து விட்டு
புகைப்படம் ஒன்றிற்கு முகமளித்து
மேலும் பேச ஆரம்பிக்கையில்
நம்பிக்கையின் கடைசி தீர்ப்பைத்
தவறாக எழுதுகிறார்கள் அறியாமலேயே
இதயமிருக்கிறவர்கள் அத்துடன்
பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.

திறமையுடைய ஒரு எழுத்தாளரை விமர்சன நோக்கின்றி மேலோட்டமாகக் கிண்டல் செய்வது சரியா?

விஜய் மகேந்திரன்


vijay mahein
விஜய் மகேந்திரன்

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் இன்றைய எழுத்து எழுச்சி சாதாரணமான ஒன்றல்ல. அவர் அளவுக்கு இலக்கிய உலகின் புறக்கணிப்பின் அரசியலை ஒருவர் சந்தித்து இருந்ததால் என்றோ இலக்கியமும் வேண்டாம் ! எழுத்தும் வேண்டாம் ! என்று ஓடியிருப்பார்கள். பன்முக அரசியல் தொடங்கி ஊடக அரசியல் வரை விரிவாக விவரிப்பது அவரது எழுத்து. அவருடைய புனைவு திறமைக்கு சமீபத்தில் வெளிவந்துள்ள ” நீல ஊமத்தம்பூ ” தொகுப்பை படித்து பாருங்கள்! குறைந்தது மூன்று கதைகள் உலகத் தரத்தில் உள்ளன. இத்தனை திறமையுடைய எழுத்தாளரை மேலோட்டமாக கிண்டல் செய்யும் போக்கு கவலைக்குரியது. அவரது ”ஆயுத வியாபாரத்தின் அரசியல் ” போன வருடம் வந்த மிகச் சிறந்த அ – புனைவு புத்தகம். நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

ஒரு காலகட்டத்தில் அவரது புத்தகங்களை பதிப்பிக்க சரியான பதிப்பாளர் கிடைக்காமல் அவரே பதிப்பித்து விநியோகம் செய்ய மிகவும் திணறினார். இவரது திறமையை அறிந்த எதிர் வெளியீடு அனுஷ் அந்த குறையை அற்புதமாக போக்கினார். நீங்கள் எழுத மட்டும் செய்யுங்கள்! மற்ற கவலைகள் உங்களுக்கு வேண்டாம் என்றார் . அதன் பிறகு அவரது புத்தகங்கள் அழகான வடிவமைப்பில் வர ஆரம்பித்தன. பரவலாக அனைவருக்கும் கிடைத்தன. சித்தார்த்தனின் எழுத்துக்களை கொண்டாடும் அன்பர்கள் உருவாக ஆரம்பித்தனர். .

அவரது புத்தகங்களை யாரை வைத்தும் அவர் வெளியிட்டுக் கொள்ளட்டடும். அது அவரது உரிமை. அதற்கு ஏன் இத்தனை நபர்கள் பதட்டமடைகிறார்கள் தெரியவில்லை. கிண்டல் செய்து போஸ்ட் போடுகிறார்கள் என தெரியவில்லை.

நான் பேசிய முதல் இலக்கிய கூட்டம் தேவேந்திர பூபதி நடத்திய கடவு அமைப்பின் கூட்டம். கௌதம சித்தார்த்தனின் மூன்று சிறுகதை தொகுப்புகளை மையமாக கொண்டு பேசினேன். அந்த உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சித்தார்த்தன் உங்களுக்கு நன்றாக விமர்சன கட்டுரைகள் எழுத வருகிறது . தொடர்ந்து விமர்சன பகுப்பாய்விலும் ஈடுபடுங்கள் என்றார். அதன் பிறகுதான் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்தேன்.

இப்படி என்னை மட்டுமல்ல சிற்றிதழ் சூழலில் பல இளைஞர்களை வளர்த்துவிட்ட பெருமை அவரையே சாரும். நான் சொல்கிறேன். அவர்கள் சொல்ல மாட்டார்கள். கௌதம சித்தார்த்தன் என்னும் எழுத்தாளர் ஆல மரத்தின் விழுது மாதிரி எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பார். அவரை விட்டு விட்டு தமிழ் தீவிர இலக்கியத்தின் வரலாறை வருங்காலத்தில் பேச முடியாது.

விஜய் மகேந்திரன், பத்திரிகையாளர்; இலக்கிய விமர்சகர்.
முகப்புப்படம்: புதூர் சரவணன்.

Wednesday, May 25, 2016

படி அமைப்பின் ''சிறந்த விமர்சகர் விருது''

எதிர்பாராத விருது !
காலையில் போன் செய்து வேடியப்பன் அவர்கள் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக அளிக்கப்படும் படி விருது 'சிறந்த விமர்சகருக்காக' உங்களுக்கு அளிக்கப்படுகிறது என்றார். நான் சற்றும் எதிர்ப்பார்க்காத விருது இது. அவருக்கு நன்றி சொல்லி போனை வைத்து விட்டேன்.பொதுவாகவே  புத்தக விமர்சனம் செய்பவர்களுக்கு தமிழ் சூழலில் பெரிய அங்கீகாரம் கிடையாது. அதை எதிர்பார்த்தும் அவர்கள் செயல்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 முதல் 25 புத்தகங்கள் வரை பேச , எழுத செய்கிறேன். அதை ஒரு கடமையாக தான் நினைக்கிறேன். புத்தகங்கள் படிக்க ஒரு போதும் சோர்வு அடைந்தது கிடையாது.

புத்தகங்களை படிப்பதும் அது குறித்து நண்பர்களிடம் விவாதிப்பதும் ஆரம்பம் முதல் என்னிடம் இருந்து வரும் பழக்கம். இந்த கருத்துக்களை எழுதினால் அந்த குறிப்பிட்ட புத்தகத்துக்கு கவனம் கிடைக்குமே என நண்பர்கள் சொன்ன போது மதிப்புரைகளாக சிற்றிதழ்களில் , இணைய இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். பின் புத்தக வெளியீட்டு  கூட்டங்களில்  விமர்சன உரை நிகழ்த்த சில நண்பர்கள் என்னை கூப்பிட  ஆரம்பித்தனர். கவனம் கிடைக்காத புத்தகங்களுக்கு சின்ன கவனமாவது கிடைக்க வேண்டும் என்று தான் புத்தகங்களை குறித்து முக நூலில் தொடர்ந்து எழுதி வருவதன் காரணம். பல புதிய எழுத்தாளர்கள், அறியப்படாத எழுத்தாளர்கள் என்று கவனப்படுத்தி வநதுள்ளேன். மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கும் மதிப்புரைகள் எழுதி இருக்கிறேன்.
நடுவில் இரண்டு ஆண்டுகள் எழுதாமல் இருந்தவனை , தீராநதியில் புத்தக விமர்சனங்கள் எழுத வைத்து மீட்ட  பெருமை கௌதம சித்தார்த்தன் அவர்களையே சாரும். படி விருது கிடைத்துள்ள நேரத்தில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் எப்போதும் ஆதரவாக இருந்து புத்தகங்கள் படிக்கும் ஆசையை தூண்டிக் கொண்டே இருக்கும் நண்பர் விநாயக முருகனுக்கும் எனது நன்றிகள்.
சில புத்தகங்களை அணுகும் போது ஏற்படும் பிரச்னைகளை களைய உதவுபவர் நண்பர் ஆர்.அபிலாஷ் . அவருடனான உரையாடல்கள் பல புத்தகங்கள் படிக்க காரணமாக இருந்துள்ளது. அவருக்கும் நன்றி.
உங்களது தொடர்ந்த செயல்பாடுகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது என வேடியப்பன் குறிப்பிட்டார். தேர்வு குழுவுக்கும் எனது நன்றிகள். இதை எனக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். தொடர்ந்து புத்தகங்கள் குறித்து பேசுவேன். எழுதுவேன். நன்றி நண்பர்களே ...சிறந்த வாசகர்கள் விருது பெற்ற நண்பர்கள் மணிவண்ணன் பார்த்தசாரதி, நாச்சியாள் சுகந்தி இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,

Tuesday, January 5, 2016

நட்சத்திர தாரகைகளின் துயர்மிகு பக்கங்கள்யுவகிருஷ்ணா  எழுதிய 'நடிகைகளின் கதை'  புத்தகம் படித்து முடித்தேன். பலவிதமான உணர்வுகளை புத்தகம் .எழுப்பியது. ஒரு புத்தக முன்னுரையில் பாலு மகேந்திரா எழுதிய வாசகம் நினைவுக்கு வந்தது. '' கலைஞர்கள் எரி நட்சத்திரம் போன்றவர்கள். மிக பிரகாசமாக எரிந்து  வந்த தடத்தை விட்டுவிட்டு கீழே விழுந்துவிடுவார்கள்’’ என்பது அந்த வாசகம் . இதில் இடம் பெற்றிருக்கும் பல நடிகைகளின் வாழ்க்கையை பார்க்கும் போது அவரது வாசகம் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.
முதல்  பகுதியாக   நடிகை ஷகிலாவின் நேர்காணல்  உள்ளது. அவர் இந்த புகழை பெறுவதற்காக வாழ்க்கையில் இழந்த விஷயங்களை கவலையுடன் பட்டியலிடுகிறார். புத்தகத்தின் இறுதியான கட்டுரையாக சில்க்கின் பழைய பேட்டி ஒன்றை மீள்பிரசுரம் செய்து இருக்கிறார்கள். சில்க் தான் வாழும் காலத்தில் எவ்வளவு கெத்தாக வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு இந்த பேட்டியே சிறந்த உதாரணம் . அவரது மரணமும் இன்றளவும் மர்மமாக தான் நீடிக்கிறது. பல நடிகைகளின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களுக்கு அருகே கொண்டு இந்த புத்தகம் நிறுத்துகிறது. எடுத்துக்காட்டாக எழுபதுகளின் இந்தி சினிமாவின் கனவுக்கன்னி பர்வீன் பாபி மெதுமெதுவாக மரணத்தை நோக்கி சென்றது துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 20 வயதுக்குள்ளே டோலிவுட்டையும், பாலிவுட்டையும் கலக்கிய திவ்யபாரதியின் மரணம் நடிகைகளின் துயர்மிகு வாழ்க்கைக்கு இன்னொரு உதாரணம்.
தொண்ணூறுகளில் கனவுக்கன்னியாக இருந்த மம்தா குல்கர்னி , மாபிஃயாக்களின் கையில் மாட்டுவதையும் அவரை பற்றிய கட்டுரை அப்பட்டமாக விவரிக்கிறது.
இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை  கவர்ச்சிபுயல்   அனு அகர்வால் பற்றியது. அவர் திருடா திருடா படத்தில் நடித்ததையும் நாம் அறிவோம். அவர் அறிமுகமான காலகட்டத்தில் இந்தியாவின் செக்ஸ் சிம்பலாக கொண்டாடினார்கள். சில ஹாலிவுட் பட வாய்ப்புகள் கூட அவருக்கு வந்தன. அப்படி நடித்த ஒரு படத்தில் அவர் காட்டிய கிளாமரே பின்பு அவருக்கு அது மாதிரியான படங்கள் அதுவும் பி கிரேட் படங்கள் மட்டும் வர காரணமாக அமைந்தன. சில காலங்கள் கழித்து அனு அகர்வால் எங்கு போனார்? எனத் தெரியவில்லை. நான் கல்லூரி படிக்கும் காலங்களில் அவர் இறந்துவிட்டதாக கூட வதந்திகள் உண்டு. ஆனால் அவர் உயிருக்கு ஆபத்தான ஒரு விபத்தில் மாட்டி மீண்டு இருக்கிறார். இப்போது யோகா ஆசிரியராக பீஹாரில் பணிபுரிகிறார் என்ற தகவலை அவரை பற்றிய கட்டுரை மூலமாக தெரிந்துகொண்டேன். நடிகையாகவும், மாடலாகவும் இருந்து பிற்காலத்தில் சோபிக்காமல் போன லிசா ரே, பூஜா பத்ரா இருவரை பற்றிய கட்டுரையை இந்த புத்தகத்தில் எதிர்பார்த்தேன்.  அது இல்லாதது சற்று ஏமாற்றம் தான். பூஜா பத்ரா எல்லா திறமைகளும் இருந்து பாலிவுட்டால் கண்டுகொள்ளாமல் போய் கடைசியாக பி கிரேட் படங்களில் நடித்து ஓய்ந்தவர். லிசா ரே மாடலாக இருந்து பின்பு ஹாலிவுட் படங்கள் வரை செய்தவர். கேன்சரை போராடி வென்றவர். மற்றபடி இந்த புத்தகம் பல நடிகைகளின் வாழ்க்கையின் துயர் தரும் பக்கங்களையும், அவர்களின் வெற்றிகள், தோல்விகள், சறுக்கல்கள் அனைத்தையும் எந்த பாவனைகளுமின்றி பதிவு செய்திருக்கிறது. யுவகிருஷ்ணா இதில் எழுதியிருக்கும் மொழி பாராட்டுக்குரியது. தங்கு தடைகள் எதுவுமின்றி ஒரே மூச்சில் வாசிக்கும் படி உள்ளது. கட்டுரைகளுக்கு உரித்தான நடையும், புனைகதைகளுக்கு உரித்தான சம்பவங்களையும் சமமாக கலந்து கட்டுரைகள் அமைந்திருப்பது வாசிப்பு சுவரஸ்யத்தை கூட்டுகிறது.
நடிகைகளின் கதை
கட்டுரைகள்
யுவகிருஷ்ணா
சூரியன் பதிப்பகம்
 விலை 150ருபாய்