Tuesday, February 2, 2010

கவிஞர் விக்கிரமாதித்யன்

சந்திரா அவர்கள் எழுதி அவரது ப்ளாக் இல் பிரசுரமான பதிவு.

கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களுக்கு தமிழின் சிறந்த இலக்கிய விருதான விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பாராட்டு விழா 31.01.2010 அன்று நடந்தது. மிகப்பெரிய கூட்டம் இல்லை. ஆனால் அவரை விரும்பியவர்கள் அல்லது அந்த ஆளுமையை புரிந்துகொண்டவர்கள் அங்கே இருந்தார்கள். விக்கிரமாதித்யனைப் பற்றி சொல்லும்போது காடாறு மாதம் நாடாறுமாதம் வாழ்கிறவர் என்பார்கள். அவரை விரும்பியவர்களால் நாடோடி நம்பியண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவருடைய வாழ்க்கை முழுதும் பயணத்தால் நிரம்பியிருக்கிறது. அது தத்துவார்த்தமும் விரக்தியும் வறுமையும் தேடலுமான பயணம். விக்கிரமாதித்யனை ஒரு கவிஞனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அப்படி கவிஞனாக வாழ்வதில் உள்ள பொருளாதார சிக்கலும் மனச்சிக்கலும் மிகப் பெரிது. வலி நிறைந்தது. ஒரு கவிஞனாக வாழ்வதில் அவருக்கு மிகப்பெரிய ஆனந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவரால் ஒரு கவிஞனாக மட்டுமே வாழமுடியும்.

அவருக்கான விளக்கு விருது பாராட்டு விழாவில் மிக அசௌகரியமாகவே உட்கார்ந்திருந்தார். ஆம் அவர் மேடையையும் பாராட்டையும் விரும்பவில்லை என்றே தெரிந்தது. அவர் தன்பின்னால் எந்த ஒளிவட்டத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அதுவே அவரை மிகச் சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது. அவரைப்பற்றி, கவிதையில் அவர் ஆளுமையைப்பற்றி, அவர் வாழ்க்கையைப்பற்றி விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசும் போது அதை மிக ஆர்வமாக எளிமையாக எதிர்கொண்டார். சிலசமயம் வெட்கத்தோடு ஒரு சிறுவனைப் போல் சிரித்துக்கொண்டார். என்னை அவரிடம் பலமுறை பலபேர்(இலக்கிய நண்பர்கள்) அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இவங்களை எனக்கு ‘நல்லாத் தெரியுமே’ என்பார். ஆம் அவரை ஆறாம்திணை இணைய இதழுக்காக நேர்காணல் செய்திருக்கிறேன். அப்பொழுது முதல் இலக்கிய கூட்டங்கள் புத்தகக் கண்காட்சிகளில் சந்திக்கும் போது நினைவு கூர்ந்துகொள்வார். நேர்காணலில் மட்டும் அவரிடம் நிறைய பேசினேன். அதன்பின்னான சந்திப்புகளில் நலம் விசாரிப்புகளோடு பேச்சு முடிந்துவிடும். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக இருந்தார். அவரைப் பற்றிய செய்திகளை அங்கங்கே கேட்டுக்கொண்டே இருப்பேன்.

ஏனேன்று தெரியவில்லை. அவருடைய கவிதையை விட அவருடைய வாழ்க்கை மிகவும் அவதானிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு கவிஞனின் நலிந்த வாழ்க்கை சுவாரஸ்யத்தை கொடுக்கிறதா? இது மிகப்பெரிய கேள்வியாக எனக்குள் இருக்கிறது. சமிபத்தில் அவருக்கு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு வந்தது. அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாளை அவரிடம் தெரியபடுத்த படக்குழுவினர் முற்பட்டபோது வழக்கப்போல் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவரிடம் செல்போனும் கிடையாது. அவர் பாடல் எழுதும் வாய்ப்பை விரும்பியோ விரும்பாமலோ தவறவிட்டார். அதைப்பற்றி விசனத்தோடு இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஆனால் எப்போதும்போல் சிரித்த முகத்தோட இருக்கிறார். இந்த விசயம் கேள்விப்படும் அனைவரும் ‘ஏன் இவர் இன்னும் பொழைக்கத் தெரியாம இருக்கிறார்’ என்பார்கள். அவை எல்லாவற்றிர்க்கும் அவருடைய பதில் ஒரு சிரிப்பாகத்தான் இருக்கும். நான் கடவுள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அது பற்றியும் அவருக்கு பெரிதான அபிப்ராயம் இருப்பதுமாதிரி தெரியவில்லை. அதையும் தன் வாழ்வின் ஒரு சாதாரண நிகழ்வாகவே நினைக்கிறார்.

புதிதாக எழுத வருபவர்களை எந்த தலைமைப்பீடத்தையும் தலையில் வைத்துக்கொள்ளாமல் பாராட்டி வளர்த்துவிடுவார் என்பார்கள். ‘ஆரம்பகாலத்தில் விக்கிரமாத்தியன்தான் என் எழுத்தை பாராட்டி அதை பத்திரிக்கைகளில் வெளிவருவதற்காகவும் முயற்சி செய்தார்’ என்று அஜயன்பாலா விழாவில் பேசினார். விக்கிரமாதித்யனைப்பற்றி பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் விக்கிரமாதித்யனுக்கு நடிகை விஜயசாந்தியை பார்க்க வேண்டும் போல் இருந்திருக்கிறது. அஜயன்பாலாவை அழைத்துக்கொண்டு விஜயசாந்தி வசிக்கும் தி.நகர் ப்குதியில் ராத்திரியெல்லாம் அலைந்துகொண்டிருந்திருக்கிறார். இது ஒரு சாதாரண ரசிகன் ஒரு நடிகையை பார்க்கும் ஆவலைப்போல் இல்லை. அவருக்கும் தெரிந்திருக்கும் ராத்திரியில் ஒரு நடிகையின் வீட்டை கண்டுபிடித்து அவரைச் சந்திப்பது சாத்தியமில்லை என்பது. இருந்தும் அந்த ராத்திரி முழுதும் அந்த நடிகையின் ஞாபகத்தில் இருக்க விரும்பி இருக்கிறார். அந்த கவிதை மனது சரியானதா இல்லையா என்பது விசயம் இல்லை. ஆனால் அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். அதேபோல் ‘பருவராகம்’ என்றொரு இதழ். அது ஒரு பாலியல் விசயங்களை உள்ளடக்கிய இதழ். அந்த இதழில் விக்கிரமாதித்யனின் கவிதை ஒரு காலத்தில் வந்திருக்கிறது. அந்த இதழுக்கெல்லாம் எழுதி அவர் சம்பாதிதார் என்று அர்த்தம் இல்லை. அது எதிர்புரட்சியும் அல்ல. வாழ்க்கை மீது விருப்பு வெறுப்பு என்று பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு சுவை அதில் அடங்கியிருக்கிறது. காலம் இவரை தவறவிட்டுக்கொண்டிருக்கும் அல்லது சிலநேரம் காலத்தை இவர் தவறவிட்டுக்கொண்டிருப்பார். எதுவாக இருந்தாலும் காலம் இவரை ஒரு கவிஞனாக வைத்திருக்கிறது. இது சாபமா? வரமா? என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment