Sunday, January 24, 2010

நகரத்திற்கு வெளியே-முன்னுரை

முன்னுரை

கதை சொல்லும் ஆர்வம் பள்ளிப்பருவம் முதலே எனக்கிருந்தது. கண்ட கதைகள், கேட்ட கதைகள், பார்த்த சினிமாப் படங்களின் கதைகள் என எதையும் சுவாரசியமாக சொல்லும் பழக்கம் இருந்தாலும், அதில் புதிதாக இரண்டு, மூன்று சம்பவங்கள் சேர்த்து சொல்வதில் மயங்கி பெரிய நண்பர்கள் கூட்டம் என்னுடன் இருந்தது. இது கல்லூரி வரை தொடர்ந்தது. பின்னால் எழுதவும் ஆரம்பித்தேன்.

எனது வாசிப்பு பழக்கம் விரிவடைய எனது அப்பா D.சிவஞானம் பொன்ராஜ் அவர்கள்தான் காரணம். அஞ்சல்துறை அதிகாரியாக இருந்த அவரை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஊர் மாற்றுவார்கள். இப்படியாக இந்தியா முழுவதும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. எந்த ஊர் சென்றாலும் நூலகத்தில் சேர்ந்து நல்ல புத்தகங்களை எடுத்து வந்து விடுவார்.

ஆனால் சென்னையில்தான் ஒருவித மாநகரத்தனிமையை உணர்ந்தேன். தீவிரமாக கதைகள் எழுதத் துவங்கியதும் இங்கு வந்த பிறகுதான். சென்னைக்கு வந்த புதிதில் இலக்கிய நண்பர்கள் நிறைய இருந்தனர். இப்போது அவர்களில் ஒன்றிரண்டு பேர்களைத் தவிர மற்றவர்கள் லௌகீக வாழ்க்கையில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். பலருக்கு வாசிப்பு பழக்கம் கூட நின்று போய் இருக்கிறது.

இயக்குநர் மீரா கதிரவன் சிறந்த புத்தகங்களைக் கொடுத்தும் நல்ல சினிமாக்களைப் பற்றி பேசியும் என் மனநிலையை வெகுவாக மாற்றியவர். இன்று எனக்கிருக்கும் நண்பர்களில் பலரும் அவர் அறிமுகப்படுத்தியவர்களே. இந்த தொகுப்பு வரும் நேரத்தில் அவருக்கு என்னுடைய நன்றி.

மேலும் இக்கதைகள் இதழ்களில் வெளிவந்த போது விஸ்வாமித்திரன், புதுகை சஞ்சீவி, சுரேஷ் மான்யா, ஆங்கரை பைரவி, தி.ஜா.பாண்டியராஜ், வீரமணி, கணேசகுமாரன், ச.முத்துவேல், செல்வ.புவியரசன், நரன், என்.ஸ்ரீராம் போன்ற நண்பர்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.

என்னுடைய கதைகளை எங்காவது படிக்க நேர்ந்தால் கேட்காமலேயே நேர்மையான அபிப்ராயம் சொல்லுபவர் மதிப்பிற்குரிய நாஞ்சில்நாடன் அவர்கள்.

சுப்ரபாரதிமணியன் அவர்களை காலம் தாழ்த்தி சந்தித்தாலும், அவர் என் மீது கொண்டிருக்கும் அக்கறையும், அன்பும் சொல்லில் முடியாதது.
சுப்ரபாரதிமணியன் அவர்களை காலம் தாழ்த்தி சந்தித்தாலும், அவர் என் மீது கொண்டிருக்கும் அக்கறையும், அன்பும் சொல்லில் முடியாதது.

என் அப்பாவின் நண்பராக அறிமுகம் ஆனாலும், எனக்கும் நண்பராக இருந்து அனுபவ வெளிகளை பகிர்ந்து கொள்பவர் நா.விச்வநாதன்.

நண்பர் அன்பு, சென்னைக்கு வந்த புதிதில் இருந்து, பெரிய புத்தகங்கள் பலவற்றைக் கொடுத்து உதவியிருக்கிறார். பல விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இத்தொகுப்பு வெளிவருவதற்கு சந்தோஷப்படும் முதல் நபரும் அவர்தான்.

நண்பர் பொன்.வாசுதேவன் இந்த கதைகளை ஒருங்கிணைத்து கணிணி தட்டச்சு பிரதி எடுத்துக் கொடுத்து உதவியிருக்கிறார். இறுதி நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. அவருக்கு நன்றி.

இக்கதைகளை வெளியிட்ட இதழ்களான உயிர் எழுத்து, அம்ருதா, கனவு, நவீன விருட்சம், உயிரோசை.காம், யுகமாயினி, அகநாழிகை, கணையாழி, உன்னதம் ஆகியவற்றுக்கும் எனது நன்றி.

நண்பர் மனுஷ்யபுத்திரன் இல்லாம் இந்தத் தொகுப்பு சாத்தியமில்லை. சிறுகதைகளை பல பதிப்பகங்கள் வெளியிடுவதை நிறுத்தி வரும் சூழலில் அவரின் ஆர்வம் அளப்பரியது. வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் எனது நன்றிகள்.

விஜய் மகேந்திரன்
செல் : 9444658131
E-mail : vijaymahindran@yahoo.com

No comments: