Monday, December 20, 2010

தென்மேற்கு பருவக்காற்று = சீனு + செழியன்


நானிருந்த இருக்கைகளின் முன்னால் தெற்கத்தி மக்கள் ரத்தமும் சதையுமாக திரிந்துகொண்டிருந்தனர். சீனு ராமசாமி தேனியின் பல்வேறு மனிதர்களாய் பல்வேறு வடிவங்களில் உலவிக்கொண்டிருந்தான். கடும் வெயில் அம்மக்களின் வெக்கையாய் சிறு திரைக்கூடத்தினுள் வியாபித்துக்கொண்டிருக்கிறது. நான் கோடையின் கடும் தாக்கத்திற்குள் நுழைந்திருக்கிறேன்.


ஒரு கதை தொடங்கியிருக்கிறது. ஆடுகள் அவ்வப்போது மிரளுகின்றன கோடை இரவுகளில். இருட்டினுள் சணல் சாக்குப்பையினுள் மறைந்த உருவங்கள். திருடர்கள் என்னை பயமுறுத்துகின்றனர். நான் செழியனின் காமிராவை மறந்துவிட்டேன். ரஹ்நந்தனின் வாத்தியங்களில் பீதி கிளம்புகிறது. ஆட்டுமந்தையினை காவல் காப்பவனுக்கும் திருடர்களுக்குமிடையே பயங்கர மோதல். தப்பிவிடுகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு அமைதியான இரவுக்காக அதை ரசித்துக்கொண்டு ஆடுகளைத் திருடும் சாக்கில் அவ்விரவை அனுபவிக்கவேண்டும் போலிருக்கிறது.


கதையினூடே ஒரு கிராமம் வருகிறது. நான் அங்கு போயிருக்கவில்லை. ஆனால் இச்சமயம் அங்கு போயிருக்கிறேன் இல்லை அழைத்துப்போகபட்டிருக்கிறேன் கதைமாந்தர்களின் பின்னால் அச்சிறு ஊருக்குள் சீனுவும் செழியனும் அழைத்துபோகின்றனர். அச்சு அசலான கிராமம். சிதைந்த மனிதர்கள். சிதிலமடைந்த வீடுகள். உலர்ந்த காற்று வீசும் தெருக்கள். கொதித்துக்கொண்டிருக்கும் பெரும் பாறைகள். நீருக்காக காத்திருக்கும் நிலங்கள். பயிரை நம்பி வாழும் கூட்டத்தினிடையே

ஒரு தாயைக் காண்கிறேன். அவள்தான் தமிழ்பெண்ணின் வீரத்துடன் தன் ஒரு மகனைக் காத்துக்கொண்டு வாழ்கிறாள்.


கண்கள் அவனை மையலில் கட்டிப்போடுகிறது. அரும்பும் காதலில் மனமெல்லாம் என் காதல் ஞாபகங்கள் பூக்கின்றன. என் முன்னால் நித்யா வந்துபோகிறாள். அப்புறம் என் எதிர்வீட்டு பெண் கண்ணம்மா வந்துபோகிறாள். இப்படியே கதைக்குள் என் கதையை சீனு ஞாபகமூட்டிவிடுகிறான்.

காதலை விரியும் இமைகளின் வழியாய் காண்கிறேன். சின்ன சிரிப்பின் வழியாய் கரைகிறேன். செழியனின் ஆழ்ந்த கனவின் வழி மையல்கொள்ளும் விழிகள் என் முன் கொத்துகொத்தாய் அலைகின்றன. நான் தென்மேற்கு பருவக்காற்றினுள் ஆடு மென்ற குழையாய் மறைந்துபோகிறேன். அந்த அம்மாவின் பிள்ளையாய் என்னை மாற்றிவிட்டார்கள். நான் அந்த வசீகரக் கண்களின் பின்னால் என்னைத் தொலைத்து அலைகிறேன். ஆஹா... மாபெரும் வாழ்வின் சுகத்தை அடைகின்றேன். சொட்டுசொட்டாய் என் தேகம் அந்த வயற்காட்டுப்பூமியில் கரைந்துதான் போகின்றது.


ஒவ்வொரு ஜீவனுக்கும் பகையென்பது விளைந்துதான் கிடக்கிறது இந்த உலகமெங்கும். நான் நேசிக்கின்ற அவளுக்கும் ஒரு பகை தானாய் முளைத்து விருட்சமாய் வேர்விடுகிறது. ஆடுகள் மாடுகள் அலையும் பூமி. ஆடுகளுக்குள் கதை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. புவியியல் உண்மையும் இத் திரைப்படத்தின் மூல ஆதாரம். இயக்குநர் சீனு ராமசாமி நான்கு வருட உழைப்பில் உருவாக்கிய தாய் மகனின் பாசக்கதை. விரசத்தை ஒரு துளியுளவும் அனுமதிக்காமல் அவர் விரும்பிய கதையை மட்டுமே நம்பி ஒரு அற்புதமான படத்தை தமிழுலகிற்கு வழங்கவிருக்கிறார். வருகின்ற டிசம்பர் 24 படம் உலகமெங்கும் திரையிடப்படவிருக்கிறது.

படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியின் இரண்டாவது படம். முதல் படத்தைவிடவும் இப்படத்தை திறமையுடன் குறுகிய நாள்களில் எடுத்து முடித்து தமிழில் நீண்ட நாள்களுக்கு பின் ஒரு நல்ல திரைப்படத்தை தரவிருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன். தன் உழைப்பை காமிராக்கலையை மிக அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். புதுவிதமான காமிராக்கோணங்களில் அந்தக் கிராமத்தையே கண் முன் நிறுத்தியிருக்கிறார். தமிழில் பிரமிப்பூட்டும் கலைஞன் செழியன் என்பதில் எந்த சந்தேகங்களுமில்லை. இன்னும் அவரிடம் இருக்கும் திறமைகளை இக்காலம் விரைவில் கொண்டுவரும் என்று சொன்னால் அது மிகையில்லை.


ரஹ்நந்தன் புதிய உத்திகளுடனான இசையில் கேட்பவரின் செவிகளை எளிதில் கவர்ந்துவிடுகிறார். தென்மேற்கு பருவக்காற்றின் கீதங்களை தீட்டி தீட்டித் தந்திருக்கிறார்.

வைரமுத்துவின் கள்ளிக்காட்டுக்கான கள்ளிக்காட்டு வரிகள் காதலை அன்பின் ஆழத்தை அள்ளி வந்திருக்கின்றன.

இன்னும் இன்னும் இத் திரைக்காவியத்தை செதுக்கியவர்கள் ஏராளம். புதுமுக நடிகர்கள் நடிகைகள் ஒரு கிராமத்து வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அம்மாவாய் வரும்

சரண்யா உண்மையில் படத்தின் மற்றுமொரு தூண் என்றால் மிகையில்லை. உணர்ச்சிகளை இயல்பில் வெளிக்காட்டுயிருக்கிறார். இன்னும் அவருக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றுகிறது.


தமிழில் ஒரு பாரதிராஜா உருவாகிவிட்டார் என்று சொன்னார்கள். இல்லை ஒரு சீனு ராமசாமி உருவாகிவிட்டார்.

நண்பர்களுக்காக இப்படத்தை பிரிவியூவில் பார்த்துவிட்டு எழுதியிருக்கிறேன். வருகிற டிசம்பர் 24 படம் உலகமெங்கும் வெளியாகிறது. பார்த்துவிட்டு படம் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.

வாழ்த்துகள்

நன்றி

அய்யப்ப மாதவன்

1 comment:

  1. வாவ்! படத்தை விட இந்த விமர்சனத்தைப் படித்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. இவ்வளவு புத்துணர்வு பொங்கும் விமர்சனத்தை இதுவரை யாரும் தந்ததில்லையென்று நினைக்கிறேன். உங்களுக்குப் பிடித்த படங்களுக்கு இப்படியான ஒரு விமர்சனத்தை அடிக்கடி தாருங்கள் அய்யப்ப மாதவன்.

    ReplyDelete