Thursday, December 2, 2010

நந்தலாலா ஒரு விவாதம்


“It’s not where you take things from — it’s where you take them to.”

-Jean Luc Godard-

இரண்டு நாள் தூக்கம் பிடிக்காமல் தமிழ் படமொன்றை கட்டிக்கொண்டு அழுதிட எனக்கும் ஆசை தான்.. (ஆனால்..)
நான் போற்றும் உன்னத படைப்புகளோடு சேர்த்துக்கொண்டு உச்சி முகர்ந்து கொண்டாடிட எனக்கும் ஆவல் தான்..(ஆனால்..)..இந்த 'ஆனால்' என்பதை என்ன செய்வது!!...?

நல்ல முயற்சி தான் ஆனால்...compromise இல்லை தான் ஆனால்.. இந்த 'ஆனால்' இல்லாமல் சமீபத்தில் வந்த ஏதேனும் தமிழ் படத்தை முழுமனதோடு பாராட்ட முடியுமா என்ன? அப்படியே 'போய் தொலையட்டும்!' என்று பாராட்டினாலும்..அதை 'கலை படம்', பல திரை மேதைகளின் சிரிஷ்டிகளுக்கு ஒப்பானது என்று பலர் உளறிகொண்டிருக்கும் போது சும்மா இருக்க முடியுமா? மனசாட்சிக்கு உண்மையாய் இருப்பதற்கும், தொழில் என்று கருதி பிழைப்பதற்கும் வித்யாசம் இல்லையா?
காப்பி அடிப்பது புதிதல்ல..இதற்கு ஏன் இத்தனை குமைச்சல் உங்களுக்கு? என்று கேட்கலாம்.. சமீபத்தில் வந்த 'கஜினி' , 'எந்திரன்' போன்ற படங்கள் ஒட்டுமொத்தமான வணிக சரக்குகள்.. அது போன்ற சரக்குகளை நாம் தவிர்க்க இயலாது.. அது வேறு..வணிகசினிமாவில் காப்பி அடிபவர்களுகென்று ஒரு பாரம்பரியமே உள்ளது.. பாலசந்தர் தொடங்கி.. கமல்ஹாசன், மணிரத்தினம் என்று நீளும் லிஸ்டில் இப்போது மிஷ்க்கின்..மிஷ்க்கின் ஒரு படி மேலே போய், கமர்ஷியல் கூறுகள் ஏதுமில்லாமல் "கலை சேவை" செய்திருக்கிறார்..முன்னவர்களாவது தங்கள் குருநாதர்களுக்கு சமர்பணங்கள் இடவில்லை.. மிஷ்க்கின் அதையும் தைரியமாக செய்துள்ளார்.. ஒரு முறை Memento'வின் இயக்குனரான christopher nolan'னிடம் அணில் கபூர் 'கஜினி' பற்றி சொல்லியிருக்கிறார்.. Nolan அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்.. நன்றாக வாய்விட்டு சிரித்திருக்கிறார்.. அவ்வளவு தான் மரியாதை..

மக்களை "மேல்நிலைக்கு" கொண்டுசெல்ல வந்திருப்பதாக சொல்லப்படும் ஒரு படத்தை பற்றியும் அதன் படைப்பாளியை பற்றியும், படைப்பிற்கும் படைப்பாளிக்கும் இடையே உள்ள யோக்கியதையை (legitimacy) பற்றியும் உரையாடித் தானே ஆக வேண்டும்..?...' இது ஒரு 'கலைப்படைப்பு', வியாபார நோக்கத்தில் இருந்து விலகி நிற்கிறது என்று கூச்சலிடும் போது, கேள்விகளை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்..கலையின் அடிப்படை யோகியதைகளில் இருந்து விலகி நிற்கும் படத்தை பற்றி அறிவுஜீவிகள் என்று சொல்லப்படும் ஆளுமைகள் பெருவாரியானோர், உணர்ச்சிவசப்பட்டு கண்மூடித்தனமாக பாராட்டிக் கொண்டிருப்பதை கண்டு சகிக்க முடியவில்லை..ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு திரைப்படம் பயிலும் மாணவன், ஒரு மாஸ்டரின் உத்திகளை imitate செய்வதை ஆதரிக்கலாம்.. அதை கலை என்று சொல்லப்போவதில்லை, அவனுடைய வேலையிலும் தந்திரங்கள் இருக்கப்போவதில்லை, அது வெளிப்படையானது..இந்த அடிப்படை அம்சம் கூட மிஷ்க்கினிடம் இல்லை.. craft, style, content எதுவுமே அவருடையதல்ல.. இந்த மூன்றையும் தனது மேதாவித்தனத்தின் தலைவீங்கிய தன்மையுடன் காட்சிக்கு காட்சி இணைக்கும் சாமர்த்தியம் அவருடையது..இது போன்ற பண்புடைய படங்கள் தமிழின் கிளிஷேக்களை உடைகிறேன் பேர்விழி என்று ஆபத்தான முன்மாதிரிகளை உருவாக்கும் வாய்ப்புண்டு..மிஷ்க்கின் காப்பி அடித்துவிட்டார் நானும் செய்கிறேன் என்று கைக்காட்டிவிட்டு மொன்னையான போலிகளை உருவாக்க கிளம்புவார்கள்..அல்லது படம் ஓடவில்லை என்று மீண்டும் அதே கிளிஷேக்களை தான் செய்வார்கள்..

ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு முதலில் 'மிஷ்க்கின்' என்ற பெயரை கேட்டதும் அவர் ஒரு ரஷியர் என்று நினைத்தேன், பின்பு அவரது படங்களை பார்க்கும் போது அவர் ஒரு கொரியரோ அல்லது சீனரோ என்ற ஐயத்தில் இருந்தேன்.. நந்தலாலா பார்த்தபின்பு தான் அவர் ஒரு ஜப்பானியர் என்று உணர்ந்தேன்.. எப்போதுமே அவர் படங்களில் எனக்கு ஒரு 'UTOPIAN' தன்மை தெரியும்.. இந்த கதை மாந்தர்கள் சென்னையில் தான் வசிக்கிறார்களா? இந்த கதை எங்கே நடக்கிறது? உண்மையில் இப்படி எல்லாம் ஆட்கள் உள்ளார்களா? என்று. உங்கள் படம் செவ்வாய் கிரகத்தில் கூட நடக்கலாம் ஆனால் ஒரு நல்ல படைப்பில் இது போன்ற அடிப்படை கேள்விகள் எழாது. அவர் தமிழ் இலக்கியங்களையோ, தமிழ் திரைப்படங்களையோ, தமிழ் வாழ்க்கையையோ பொருட்படுத்துவதில்லை என்று தோன்றும்...எனக்கு ஆறுதல் செய்யும் வண்ணம் மிஷ்க்கின் 'item' songs (வாலமீனுக்கும், கத்தாழக் கண்ணால) செய்யும் போது மட்டும் local'லாக இறங்குவார்.. கற்பனை திறனும் தனித்துவங்களும் அந்த பாடல்களின் நேர்த்தியில் தெரிந்தது.. 'நந்தலாலா'வில் அதுவும் இல்லை.. ஏனென்றால் அவர் கலைப் படம் எடுக்கிறார்..

'நந்தலாலா'வின் மூலமான 'கிகுஜிரோ'வில் தகேஷி கிட்டநோவின் craft அவர் கதைக்கும், அதன் அடிப்படை சாரம்சதிற்க்கும் துணை நிற்கும்.. அதற்கு வலு சேர்க்கும்..அந்த craft ஜப்பானியர்களின் கலை, வரலாறு, போன்ற வாழ்வியல் கூறுகளில் இருந்து தன்னுணர்வுடன் முதிர்ந்து எழுந்ததாக இருக்கும்..நந்தலாலா'வில் மிஷ்க்கின் பல இடங்களில் இருந்து உருவிய craft'டை வைத்துக்கொண்டு நம்மை எளிமை என்கிற பெயரில் பிரமிப்புக்குள் தள்ளுவதிலேயே இருப்பார்.. படத்தின் அடிப்படை அம்சமான Innocence என்பதை காலி செய்திருப்பார்...படத்தில் வரும் சிறுவனில் இருந்து எல்லா கதாபாத்திரங்களும் மிஷ்க்கி'னின் கைப்பாவைகளை போல் தான் உள்ளார்கள்.. அவருக்கு இருப்பது ஒரு cinematic obsession.. ஒரு மாஸ்டராக மாறிவிட வேண்டும் என்ற obsession..மனித வாழ்வில் அவலங்களை சொல்வதெல்லாம் படத்திற்குள் வைக்கும் சமாச்சாரம்.. அவ்வளவு தான்.. அது வாழ்வாக இல்லை..இந்த மாதிரி ஒரு படம் எடுப்பது அவரது கனவு.. கனவை நிறைவேற்றிவிட்டார்.. தயாரிப்பாளரையும், பார்வையாளர்களையும் 'நல்ல படம்' என்கிற பெயரில் ஏமாற்றிவிட்டார்.. அதை விட கொடுமை அவர் மூல படைப்பிற்கு செய்திருக்கும் துரோகம்.. ஒரு முறை இயக்குனர் வெற்றிமாறனிடம் கேள்வி கேட்கப்பட்டது " 'பொல்லாதவன்', 'பைசைகில் தீவ்ஸின்' இன்ஸ்பிரேஷனா?' .. அதற்கு அவர் அளித்த பதில் "பைசைகில் தீவ்ஸ் படம் பார்த்திருக்கிறேன்..தயவு செய்து அந்த படத்தோடு என் படத்தை ஒப்பிட வேண்டாம்.. அது ஒரு கலை படைப்பு.. எனக்கு அதை என் படத்தோடு ஒப்பிட்டு உரையாட சங்கடமாக இருக்கிறது. அதற்கு எனக்கு தகுதி இல்லை" இது போன்ற தெளிவுள்ள இயக்குனர்களே பார்வையாளர்கள் பொருட்படுத்த வேண்டியவர்கள்...

'பதேர் பாஞ்சாலி' செய்வதற்கு 'பைசைகில் தீவ்ஸ்' பெரும் உந்துதலாக (Inspiration) இருந்தது என்று சத்யஜித் ரே சொன்னதை அறிந்திருப்பீர்கள்.. ஆனால் இரண்டு படங்களுக்கும் நேரடியான சம்பந்தம் ஏதுமில்லை..ரே'வின் தனிப்பட்ட வாழ்வு சார்ந்த பார்வையும் (personal vision) ஊடகம் சார்ந்த தொலைநோக்கும் (cinematic vision) பெரும் அலையை ஏற்படுத்தும் அளவிற்கு எழுச்சியோடு இணைந்திருக்கும்..அது கலை..அது சிருஷ்டி..
தார்கோவ்ஸ்கி mirror படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஒரு காட்சி அப்படியே பெர்க்மெனின் 'persona' படத்தை நினைவுபடுத்துவதை உணர்ந்திருக்கிறார்.. இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்..mirror படத்தில் அந்த காட்சியை பார்தீர்களேன்றால் தார்கோவ்ஸ்கி எவ்வளவு ஆன்மரீதியாக இணைந்திருக்கிறார் என்பதை உணரலாம்..அந்த காட்சி பெர்கம்னுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்.. அதுவல்லவோ சமர்ப்பணம் என்பது!
காலப்போக்கில் 'நந்தலாலா' பற்றிய பிரமிப்பு என்னும் கானல் நீர் விலகிய பிறகு, அதன் 'மைல் கல்' தோற்றமும் விலகிவிடும்..

(பேஸ் புக்கில் நந்தலாலா பற்றிய விவாதங்களில் நான் எழுதியவைகள் இங்கே தொகுக்க்கப்பட்டிருக்கிறது.. இது விமர்சனம் அல்ல..)

-மாமல்லன் கார்த்தி-

1 comment:

  1. தமிழ் நாட்டிலல்ல உலகின் அனைத்து பாகங்களிலும் உன்னத படைப்பாளிகளாக திகழுகின்ற திகழ்கிற திகழ்ந்த அனைவருமே காப்பி அடித்ததாக பெரும் புகார் உண்டு.மனித வாழ்க்கை பெரும்பாலவனவருக்கு ஒரு போலவும் சிறுபாலோனோருக்கு வித்தியாசமாகவும் இருந்து தான் வருகிறது இதை காப்பி அடித்தல் என்று சொல்ல முடியாது.அப்படி நிகழ்வது தான் இயற்கை.எதுவுமே எதுவுமின்றி ஆகியிருக்காது என்பதே வெளிப்படை.ஆக தொனியுடன் விமர்சனமாக இஷ்டமாக சொல்லுவது கூட காப்பி அடித்தல் தான்.ஆக வாழ்க்கை அறிய முயலும் போது இதொன்றும் காப்பி ஆக தெரிய வில்லை என்பதே எனது எண்ணம்.ரிகர்சனிசம் தவிர்க்க இயலாதது.
    அன்புடன்
    முஜீப்

    ReplyDelete