Wednesday, November 10, 2010

தமிழில் ஏன் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன?


ஆர்.அபிலாஷ்

விசிட்டிங் கார்டுகளுக்கு அடுத்தபடியாய் தமிழில் அவசரமாய் பிரசுரம் ஆவது கவிதைத் தொகுப்புகள் என்று நமக்குத் தெரியும். தமிழ்க்கவிதையின் நோய்மை இது என்று தீர்ப்பளித்து பேனாமுனை உடைப்பதும் எளிது. கவிதைக்கான் ஆதார நுட்பமோ சொல்வதற்கு ஏதாவது சங்கதியோ இல்லாதவர்கள் இப்படி மானாவரியாய் எழுதி அழகான அட்டை வடிவமைப்புடன் வழவழ தாள்களில் முன்னணி பதிப்பக முத்திரையுடன் புத்தகமாக்குவதன் உத்தேசம் என்னவாக இருக்கும்? இன்று ஒரு பதிப்பகம் சென்று 2010இல் அவர்கள் வெளியிட்ட எட்டு தொகுப்புகளை புரட்டி படித்தபின் ஒரு குமட்டல் போல் இந்த கேள்வி மீளமீள தோன்றிக் கொண்டிருந்தது. ஏன் கட்டுரைகள் அல்லது கதைத் தொகுப்புகளை விட கவிதைகள் அதிகம் தொகுப்புகளாகின்றன? வெளிப்படையான காரணங்கள்: தமிழனுக்கு கவிதை எழுதுவது அவன் ரெண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியாக இருக்கலாம். சில ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் மந்தையை ஒழுங்கி படுத்தின முன்னோடி நினைவில் மனிதர்களின் உள்ளங்காலைக் கடித்து வழிப்படுத்துவது போல். அல்லது வீட்டுப் பூனை பல்லி பிடிப்பது போல். குருதியில் ரெண்டறக் கலந்த ஒன்றாக கவிதை நமக்கு இருக்கிறது. அதைப் போன்றே வாசகர் மற்றும் பொதுமக்கள் இடத்து இன்றும் எழுத்தாளன் என்றால் கவிஞன் தான். கவிதைக்கு அடுத்தபடியாய் இங்கு மதிப்புள்ளது மேடைப் பேச்சுக்கு. உரை அறிவுஜீவுகளின் பரப்பாகவே இன்றும் உள்ளது.
கவிதை எழுதி பழகித் தான் பலரும் உரைக்கு வருகிறோம். இது உலகம் முற்றும் காணப்படுகிற பழக்கம் தான். நீட்சேவும் மார்க்வெஸும் சுராவும் ஜெயகாந்தனும் இந்த நீண்ட பட்டியலில் வருகிறவர்கள் தாம். மொழி விளையாட்டின், அதன் சங்கீதத்தின் மயக்கத்தில் இருந்து தான் வாசிப்பின் பின்னர் எழுத்தின் ஆரம்பம். ஓசையின் கிளர்ச்சி தான் மொழியின் முதல் படி. இப்படி கவிதை எழுதி தனக்கான அசல் திறமையை கண்டறிந்து கிளைபிரிந்து செல்பவர்கள் சமர்த்துகள். சிலர் கவிதைதான் தனது காண்டிப வில் என்று நம்பி ஊக்கத்துடன் நாணைப் பூட்டுகின்றனர். மிகப்பலர் ஹ்ட்லைட் வெளிச்சத்தில் உறைந்து நின்ற முயலைப் போல் ஒரு குழப்பத்தில் கவிதையிலேயே தங்கி விடுகின்றனர். அவர்களுக்கு மொழியுடனும் பண்பாட்டுடனுன் தங்கி நிற்பதற்கு கவிதையை எழுத வேண்டும். ஒருவித காலைக்கடன்.அடுத்து வளவளவெனும் உணர்ச்சிகர கவிதை எழுதுவது ஆற்றல் சிக்கனமுள்ள செயல். ஒரு உந்துதலில் கொட்டித் தள்ளி இறுதியாய் புள்ளிகளை இணைத்து சீராக்கினால் கவிதை வடிவில் ஒன்று உருவாகி விடும். ஒரு கட்டுரைக்கு அல்லது நாவலுக்கு போல் மணிக்கணக்காய் உழைக்க வேண்டாம். அதிகமான பத்திரிகையில் பரவலாய் பிரசுரிக்கவும் கவிதைகள் எழுதுவது தான் உசிதம்.
கவிதை எழுதுவது நீத்தார் சடங்கு போல் ஒரு புனிதச் செயலாகவும் உள்ளது. மோசமான கட்டுரைகள் மற்றும் அசட்டுத்தனமான கதைகளுக்கு நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும். கவிதையின் வடிவத்துக்குள் அபத்தமாக என்ன உளறி பிரசுரித்தாலும் அது அதிக கண்டனத்துக்கு உள்ளாகாது. தமிழ் சமூகம் கவிஞனை மரித்தவர்கள், முதியோர்கள், குழந்தைகள் என்ற வரிசையில் கடைசியாய் வைத்திருக்கிறது. மிகுந்த அனுசரணை மற்றும் காருண்யத்துடன் கவிஞர்கள் நடத்தப்படுகிறார்கள்.
கடைசியாகவும் முக்கியமாகவும் ஒன்று சொல்லலாம். கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது காதலை சொல்வது போல், பட்டாசு கொளுத்துவது போல், தற்கொலை முயற்சி போல் தள்ளிப் போடக் கூடாதது. என் முதல் கவிதைத் தொகுப்பை பிரசுரிக்க நான் தயங்கிய போது நண்பரும் இதழாசிரியருமான ஹமீம் முஸ்தபா
இப்படி சொன்னார்: “நீ இப்போது இக்கவிதைகளை வெளியிடுவது போல் பின்னெப்போதுமே சாத்தியப்படாது. தொகுப்பின் தரம், எதிர்வினை என்பதை விட வாழ்வின் இந்த ஒரு பருவத்தில் நீ விட்டு போகிற ஒரு அடையாளமாக இது இருக்கும். நாம் வேடிக்கையாய் அசட்டுத்தனமாய் எத்தனையோ செய்கிறோம் இல்லையா அது போல்”. ஆக கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது ஒரு கொண்டாட்டம். பிறந்த நாள், பூப்படைதல், சாந்திமுகூர்த்தம் போல். எண்ணற்று வெளியாகும் கவிதைத் தொகுப்புகளுக்கு பதில் சொல்லாமல் நாம் வாசகர்களும் விமர்சகர்களும் மௌனம் காப்பதன் கண்ணியம் புரிகிறதில்லையா?

1 comment:

  1. நல்ல ஒரு அலசல் மகேந்திரன். நம் தமிழ்திருநாட்டில் கவிதைகளுக்கு மட்டுமன்றி, நல்ல பல கட்டுரைகளுக்கும் ஒரு வரவேற்பு எவ்வளவு அவசியமென்பதையும், கவிதைப்தொகுப்புகளின் யதார்த்தத்தையும் உங்களின் இக்கட்டுரையின்மூலம் உணரமுடிகிறது! நன்றி
    பத்மஹரி,
    http://padmahari.wordpress.com

    ReplyDelete