




வலைபதிவுக்கு வந்த புதிதில் எதேட்சையாக பார்த்த வலைபதிவு ப்ரியாவினது,,பிறகு நான் நிலா ரசிகன்,உழவன் போன்ற நண்பர்களுக்கு அறிமுகபடுத்தினேன்...அவரது நீள் கவிதைகள் எனக்கு பிடிக்கும் .பிறகு கவிதைகளுக்கு அவர் போடும் படங்கள் பொருத்தமாகவும் நவீன அழகியல் தன்மை கொண்டும் இருக்கும்.அவரது கவிதைகளில் எனக்கு பிடித்த ஒன்றையும்...சில படங்களையும் இங்கு பகிர்கிறேன்..கவிதைகளை புத்தகமாக கொண்டு வர பலமுறை நான் சொல்லியும் பிரியா தயக்கம் காட்டி வருகிறார்.அவர் மருத்துவராக லண்டன் அருகே பணிபுரிகிறார்.
.உச்சத்தின் மத்தியில்..
அவனும் அவளும்
சாத்திய கதவின் பின் அறையில்!
நான்கு கண்களில் நூறு கேள்விகள்....
அவன் அகராதியில்
அவள் ஒரு வீழ்ந்த தேவதை....
அவள் அகராதியில்
அவன் ஒரு புதிய சொல்...
இருவருக்கும் புதிர் இருவருமே....
அவள் கண்கள் நெருப்பு பிழம்பாய்...
அகன்ற விழிகள் கொண்டு
பார்க்கும் அவள் பார்வை
அவனுக்கு புதிய விடுகதை...
மருட்சியா.... திமிரா.....
பிடிப்படவே இல்லை!
அவள் திரண்ட தனங்கள்
அவனுக்கு நினைவில் அலையாய்
கொண்டு வரும் பல காட்சிகள்
இடையும் தொடையும் தொடக்கம் முடிவு
இல்லா சாலை!!!
அவள் அங்குலம் அங்குலமும் அவனிடம் பேசும்
கறுத்து பிளந்த அந்த பேசா இதழ்கள்
விட்டு சென்ற வார்த்தைகளை....
அவள் அவனை உற்று பார்த்து
தேடுகிறாள் ஒரு விடை....
இது வரை கண்ட ஆண்களை
கண நொடியில் கணக்கெடுத்தவள்
இவனிடம் புதிதாய் குழப்பத்தில் மருண்டு....
இது ஆசையா... காதலா... கோபமா..
இவன் எந்த ஜாதி...
கண்கள் காட்டி கொடுக்கும் ஆண்களின் மத்தியில்
இவன் கண்ணோ வேறு வகை
இவள் இதுவரை காணா புதிய இனத்தை சேர்ந்தவன்...
தாழிட்ட அறைக்குள் எது கொணர்ந்தது
அவனையும் அவளையும்
தெரியவில்லை...
தரை முழுக்க கேள்விகள்
பதில் தேடியபடி சிதறி கிடக்க!
கட்டிலில் இருவரும் பக்கம் பக்கம்!
வாக்கியங்கள் குரல்வளையை நெருக்கி நிற்க
எது தொடங்கும் இவர்களின் பயணத்தை.?
மூடி திறக்கும் விழிகளில்
பதில்களும் பசியும் ஒன்றாய் பறிமாற
தொடுகிறாள் அவள் அவனை முதன்முதல்.....
தொட்ட நிமிடம் வார்த்தைகள் இறந்தே விட்டது...
கண்களின் வழியே ததும்பும் அன்பு
நிரப்பியது அறையின் இருட்டை...
விரகம் நங்கூரம் இட்டது...
அவன் கண் வழியே வரும்
காமம் கசிந்ததில் நனைந்து
மேலும் அழகானாள்...
ப்ரபஞ்சத்தை தாண்டிய வெற்றிடமாய் மாறி!அன்பே அன்பினால்
அன்புக்காக அன்பிடம்
அன்பாய்...
காலம் தொலைந்த தேசத்தில் கரைந்தனர் இருவரும்...
கழுத்தோரம் மெல்ல கோலமிட்டான்...
காதருகே கண் கிறங்கி மூச்சை உள்வாங்கினாள்...
அவன் தேடலில் அவள் இன்னும் மெலிந்து...
தவிக்கவிட்டான்... வரம் தந்தான்...
தவித்து போனாள்... எடுத்து கொண்டாள்...
மெல்ல தொடங்கிய அனல் தகித்தது
வியர்வை வெள்ளம் கரை புரள
அவள் அவனை உண்டாள்...
அவன் அவளை குடித்தான்...
அவள் வலைகளில் சிக்கியவள்...
சிடுக்குகளுடன் அவளை அள்ளி
ஆனந்தமாய் அணிந்தான்..
குழப்பக்குட்டையில் மிதந்த அவள்
கேட்டாள் அவனிடம்...
ஏன் நான்? என்றாள்
என்ன என்னிடம்? என்றாள்
உன் கண் அழைத்தது என்றான்...
சோகம் வழியும் இமை வழியே
எனக்கான காதலும் வழிந்து அழைத்தது என்றான்....
வளைந்து அவன் மனதில் நுழைந்ததில்
இவள் ஒலியானாள்...
நேராய் இவள் கண்ணில் நுழைந்து
அவன் ஒளியானான்...
இருப்பாயோ நீ எப்போதும் என்றாள்
என்ன நடப்பினும் உனக்கான என் காதல்
எப்போதும் உனக்கு மட்டும் தான் என்றான்...
கண் வழி சிரிப்பும் கண்ணீரும் கலந்து
உச்சத்தின் மத்தியில்...
இருவரும் இறந்து..
No comments:
Post a Comment