Friday, June 18, 2010

விஜய் மகேந்திரனின் சில கதைகள் சில பார்வைகள் - குமாரநந்தன்

இருத்தலின் விதிகள்

நகரத்து எழுத்தாளர்களின் புரிந்து கொள்ளாத மனைவியரைப் பற்றிய கதை. இந்த வகைக் கதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து இது தனித்து அனுபவம் என்பது மாதிரி எதுவும் இல்லை. ஒரு சிறுகதையை நாம் படிக்கும்போது அதில் எதிர் பார்க்கும் ஏதோ ஒரு விசயம் இதில் கிடைக்காமல் போய்விட்டதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ராமநேசன் எனது நண்பன்

ராமநேசனின் கேரக்டர் அசடு நாவலின் கணேசன் கேரக்டரை நினைவுபடுத்துகிறது. கதையாளரின் கேரக்டரும் ராமநேசனின் கேரக்டரும் ஒத்து வராமல் அவனை வெறுக்கிறார். பிரிதொரு காலத்தில் அவனைப் புரிந்து கொண்டு அவனுடைய திருமணத்துக்குச் சென்று வர முடிவு செய்கிறார். ஒரு செயலையோ அல்லது ஒரு நபரையோ புரிந்து கொள்ள மற்றவருக்கு குறிப்பிட்ட காலமும் அனுபவங்களும் அவசியமாயிருக்கிறது (என்ன காலத்திலும் என்ன அனுபவத்திலும் ஒரு சிலர் எதையும் புரிந்து கொள்ளாமல் போய்விடுவது வேறு விசயம்) என்பது இந்தக் கதையில் ஓரளவிற்கு வந்திருக்கிறது. ராமநேசன் ஒரு சாமியாரிடம் சீடராக சேருகிறான். ஆனால் அவர் போலி என்பதைத் தெரிந்து கொண்டு அங்கிருந்து திருச்சி வரை ஒரு வெங்காய லாரியில் வந்து அங்கிருந்து மதுரைக்கு நடந்தே வருகிறான். ஆனால் இது அந்த கேரக்டருக்கு ஒத்து வராத செயல். ராமநேசன் யாருடனும் எளிதாக ஒட்டிக் கொள்பவன். யாரையும் எளிதாக தன்வசப்படுத்தி தனக்குப் பிரச்சனை இல்லாமல் செய்து கொள்பவன். நிச்சயமாய் அவன் திருச்சியிலிருந்து மதுரை வரை நடந்து சென்றிருக்க மாட்டான்.



மழை புயல் சின்னம்

கதையின் ஆரம்பமும் அடுத்தடுத்த பத்திகளும் ஆழ்ந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருக்கிறது. ஜெனாலீனாவை முதன் முதலாகக் கோயிலில் சந்திக்கும் போது அவளுடைய உடைக¨ள் இவர் புகழ்கிறார். அவள் இவரைக் காதலிப்பதற்கு பிப்டி பிப்டி வாய்ப்பு இருப்பதாக சொல்லிச் செல்கிறாள். நகரத்துப் பெண்களைப் பற்றியும் நகரத்தாரின் காதல் பற்றிய புரிதல்களையும் இந்த வரிகள் சிறப்பாக உணர்த்தி விடுகின்றன. ஜெனாலீனாவை வாழ்நாள் முழுவதும் என்வசம் இருக்கச் செய்யும் எந்தச் சக்தியும் இப்போது யாரிடமும் இல்லை என்ற வரிகள் நகரத்துப் பெண்களின் மிதக்கும் மனநிலை அல்லது அவர்களின் கட்டற்ற சுதந்திர உணர்வை உணர்த்துகிறது.
அருகாமை ஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்ற வெறித்தனமான எண்ணத்தில் சுழலும் பரதேசிகள் என்ற வரிகளைக் கதாசிரியர் பயன்படுத்துகிறார். சக மனிதர்களைப் பற்றி இப்படி ஒரு பட்டவர்த்தனமான அபிப்ராயம் தேவையா என்று நெருடுகிறது. ஜெனாலீனா என்னிடம் தன்து காதலைத் துண்டித்துக் கொள்வதாகச் சொன்னாள். ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வதுபோல அவளது பேச்சு இருந்தது. காதலை இழக்கும் இடத்திலும் அதைப் பகடியாக்குவது கூட ஒரு நகரத்தின் மனநிலைதான் என்று நினைக்கிறேன். மேல் அதிகாரி போனில் கம் குவிக் என்று மிரட்டுவது கூட வாழ்க்கையின் அழுத்தத்தைத் தெரிவிக்கிறது.


கதையின் கடைசியில் சர்மிளாவின் கேரக்டர் அவசர அவசரமாக உள்ளே வந்தாலும் அவர் வந்துதான் இந்த நிகழ்வை ஒரு கதையாக மாற்றுகிறார். சர்மிளாவும் சாரதியும் காதலர்கள். சாரதியின் முன்னிலையிலேயே இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி பேசுவது சர்மிளாவின் குணமாக இருக்கிறது. இவர் ஜெனாலீனாவைக் காதலிப்பதையும் அவளின் நிராகரிப்பையும் அவளிடம்தான் சொல்கிறார். நட்பு காதல் என்று பிரித்துவைத்துக்கொண்டிருக்கும் எல்லைகளின் அடி ஆழத்தில் இருக்கும் பொய்மைகளை இந்த இடம் மிகப் பூடகமாகப் பேசுகிறது. ஒரு காதல் ஒன்றுமில்லாமல் போவதற்கும் ஒரு நட்பு காமத்தின் அழைப்பிற்கான அடையாளமாக மாறுவதற்கும் பெரிதாக ஒன்றும் நடக்கத் தேவையில்லை. ஒரு மழை பெய்தால் போதும் எல்லாமும் கரைந்து எல்லாமும் மாறிவிடுகிறது. ஒரு நகரத்தின் காதலை இந்தக் கதையின் இன்னொரு தளம் மிக அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்திவிடுகிறது. அந்த வகையில் இது விஜய மகேந்திரனின் சிறப்பான கதைகளில் ஒன்றாகச் சொல்லலாம்.
புயல் வெள்ளத்தினால் சென்னையில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளின் அவலத்தை நேரடி ஒளிபரப்பாக காட்டிக் கொண்டிருந்தனர் விளம்பரங்களுக்கிடையே என்ற வரி மீடியாக்களின் முதலைக் கண்ணீர் அபத்தத்தை எள்ளி நகையாடுகிறது. அதே சமயம் இந்த வரி கோபிகிருஷ்ணனின் கதை வரிகளை மிகக் கூர்மையாக நினைவுபடுத்துகிறது.


காலையில் குளிர் காற்று வீசுகிறது. சித்தாள்கள் வேலைக்குப் போக பஸ்ஸ¤க்குக் காத்திருக்கிறார்கள். நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல்தான் புயல் காற்றும் மழையும் ஆரம்பமாகிறது. ஏழு மணி செய்தியில் வெள்ளம் சூழந்த பகுதிகளைக் காட்டுகிறார்கள். பிறகு இவருடைய ஏரியாவிலும் வெள்ளம் வந்து விடுகிறது. அதையும் உடனடியாக டிவியில் காட்டுகிறார்கள் இதையெல்லாம் சற்று நிதானமாக கால அளவை கொஞ்சம் லாஜிக்காக அவதானித்து எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.


நகரத்துக்கு வெளியே

மழை புயல் சின்னம் நகரத்து இளம் பெண்களின் மனநிலையைப் பேசுகிறதென்றால் நகரத்துக்கு வெளியே இளைஞர்களின் காதல் வஞ்சகத்தைப் பேசுகிறது. சூரியப் பிரகாஷ் பிரியாவின் மனநிலையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவளை நீலநிறச் சுடிதார் அணிந்து வரும்படி வற்புறுத்துகிறான். அவன் கூப்பிட்ட இடத்துக்கு வர அவள் மறுத்து விடுகிறாள். என்ஜாய் பண்ண அலையுறான் என்ற ஸ்டேட்மெண்ட்டில் பெண்கள் விசயம் தெரிந்தேதான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிவிடுகிறார். பிரியா நிராகரித்தவனை அவள் அறையிலேயே தங்கியிருக்கும் பாக்கியலட்சுமி ஏற்றுக் கொள்கிறாள். (அவளுக்கு இந்த விசயம் தெரியாது. அவள் அப்பாவித்தனமாய் ஏமாந்து விடுகிறாள்.) பிரியா பாக்கியலட்சுமியை எச்சரிக்கும் முயற்சியை எடுத்திருக்கலாம். ஆனால் அவள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது.
பிரியா ஏற்கனவே காதலிக்க விருப்பம் தெரிவித்திருந்த விக்னேஷின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். பாக்கியம் கர்ப்பிணி ஆகிவிடுகிறாள். நகரத்துக்கு வெளியே இருக்கும் நர்சிங் கோமில் பாக்கியம் மீண்டும் பழைய பாக்கியமாக ஆக்கப்படுகிறாள். பிரியா அன்று அணிந்து வரவேண்டிய உடை குறித்து விக்னேஷ் போன் செய்து சொல்கிறான். நீல நிறச் சுடிதாரை ஒரு குறியீடாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால் அது முழுமையாக வெளிப்படாமல் இருக்கிறது. இந்தக் கதையும் நகரத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

அடைபடும் காற்று

கடிதங்களின் மூலமாகக் கதை சொல்லும் உத்தியை இந்தக் கதையில் பயன் படுத்துகிறார். முதியவர்கள் நகரில் தனித்திருப்பது. அவர்களின் அசுவாத் தளமான டிரைவ் இன் தியேட்டர் மூடப்பட்டு அங்கே ஒரு ரசாயணத் தொழிற்சாலை வரவிருப்பது. அமெரிக்காவில் வசிக்கும் மகன்கள் நகரத்திலிருக்கும் தங்கள் பெற்றவர்களின் வசிப்பிடங்களை தங்களுடைய வாழ்க்கைக்காக விற்கச் சொல்வது என்று இக்கதை முழுவதும் தற்கால நாகரீக சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிறது. இதை ஒரு கடித உத்தியில் எழுதாமல் வேறுமாதிரியில் எழுதியிருந்தால் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
விஜய் மகேந்திரனின் கதைகளில் நகரத்தின் உறுத்தல் எளிதாக மூச்சுவிட முடியாத இறுக்கம் பற்றித் தீவிரமாகப் பேசுகிறது. தனிப்பட்ட காதல் நட்பு பற்றிய விசயங்களைப் பேசினாலும் அதிலும் நகரம் தவிர்க்க முடியாத பங்காற்றுகிறது. இவரிடம் தென்படும் ஒரு சமூகப் பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது. சிலர் சமூகத்தைப் பாதிக்கிறார்கள். சிலரை சமூகம் பாதிக்கிறது. இவரை சமூகம் எப்படியெல்லாம் பாதித்தது என்பதுதான் கதைகளாக வெளிப்படுகிறது. நிறைய இடங்களில் கோபி கிருஷ்ணனை ஞாபகப்படுத்துகிறார். எடுத்துக் கொள்ளும் கதைகளை முடிந்தவரை மேலோட்டமாகவே சொல்ல முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. எந்தக் கதையிலும் எந்தப் பிரச்சனையும் தீவிரமாகப் பேசப்படுவதில்லை. அலங்காரமான கவித்துவமான வாக்கியங்கள் வெளிப்பாடுகளில் பெரிய நம்பிக்கை இல்லாவராகக் காண்கிறார். இந்த வகையான எழுத்து முறையை இவர் இன்னும் செம்மையாக ஆராய்ந்து
கையாண்டால் அதுவே இவருக்கு மிகப் பெரிய பலமாக அமைய வாய்ப்பிருக்கிறது.



4 comments:

  1. I am reading ur short story collection. I will tell u about that after I finish it.

    ReplyDelete
  2. After reading the review, I want to read the story collection now.. Where do I get it? Landmark?

    ReplyDelete