Friday, January 21, 2011

இரவுக்காக காத்திருப்பவன்


நம் இருவருக்குமான

இந்த இரவு

ஆவியாகிவிடக்கூடதென

பிரார்த்திக்கிறேன்.



தயவு செய்து

உணவு மேஜையில்

உருகிக்கொண்டிருக்கும் -இந்த

மெழுகுக்கரைசலை

அணைத்து விடு

அது இந்த இரவை

கரைத்து கொண்டிருக்கிறது.



கடிகாரங்களை

உயிரிழக்கச் செய்

காலம் அப்படியே

உறைந்து போகட்டும்.



உள்ளாடைகள் ,ஆடைகள்

படுக்கை விரிப்பு ,மருந்துக்குப்பிகள்,

தலையணைகள்,புத்தகங்கள்,

கலைந்தே கிடக்கட்டும்,

இந்த இரவின் மீது

வேறெதையும்

அடுக்க வேண்டாம்.



முன்னெப்போதையும்

விட இக்கணம்

பாதுகாப்பாய் இருக்கிறது.



முன்னாள் காதலியின் அவமதிப்பு,

உயிர் நண்பனின் துரோகம்,

பணி நீக்க நாட்களின் துயரம்,

கடந்த வாரத்தின்

இவையனைத்தும்

நினைவுகளில் இருந்து

வெகு தூரம்

சென்றுவிட்டுருக்கிறது.



உனது அருகாமை,

உனது கரம் பற்றல்,

உனது எனது கண்ணீர்,

தேற்றல் ,ஆற்றுபடுத்துதல்,

இத்தியாதி,இத்தியாதி..



எனது கையிருப்பில்

இருக்கும் இந்நாளை

ஒருபோதும் செலவழிக்காமல்

குழந்தையை போல

ஓடி ஓடி

ஒளித்துவைக்க முயல்கிறேன்.



துயரம்.

மெல்லிய மஸ்லின் திரைச்சீலையின்

பின்னிருந்து வருமிந்த

பெருவெளிச்சம்.



எங்கிருந்தோ ஒரு காலைவேளை,

என் வீட்டை நெருங்கிக்கொண்டு

இருக்கிறது.

வேகமாக எதிர்வரும் ரயிலில்

நொறுங்க காத்திருப்பவனை

போல உணர்கிறேன்

இக்கணம்.



பகல்...பகல்...பகல்..

எங்கும் பகல்..

கடக்க இயலாத

முற்பகல்.







-விஜய் மகேந்திரன்.

--

4 comments:

  1. தயவு செய்து

    உணவு மேஜையில்

    உருகிக்கொண்டிருக்கும் -இந்த

    //மெழுகுக்கரைசலை

    அணைத்து விடு

    அது இந்த இரவை

    கரைத்து கொண்டிருக்கிறது.//

    அருமை நண்பரே ஒரு இரவின் காத்திருப்பும் நகர்தலும் எவ்வளவு ஆனந்தமாக பயணப்படுகிறது .

    ReplyDelete
  2. மனுஷ்ய புத்திரனின் வாசனை அடிக்கிறது உங்கள் கவிதையில்...

    ReplyDelete
  3. எங்கிருந்தோ ஒரு காலைவேளை,

    என் வீட்டை நெருங்கிக்கொண்டு

    இருக்கிறது.
    //
    வேகமாக எதிர்வரும் ரயிலில்

    நொறுங்க காத்திருப்பவனை

    போல உணர்கிறேன்

    இக்கணம்.//

    இந்த பத்தியோடு முடித்து இருந்தால் பிரமாதம் ..

    ReplyDelete
  4. அருமை. அருமை.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete