Saturday, December 5, 2009

என் எழுத்தாள நண்பர்கள் - ஷோபா சக்தி



பகுதி 1
:

தடிதடியான
நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். "காண்டாமிருகம்","அபாயம்"(க்ரியா வெளியிட்டவை) போன்ற சிறு நூல்கள் செய்த இலக்கிய மாற்றங்களைக் கூட இப்பெரிய நூல்கள் செய்வதில்லை என்று எழுதியிருக்கிறார்.பெரிய நாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர் ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடுகிறது. இவ்வாறு பெரிய நூல்களில் நான் மலைத்து வாசிப்பதையே நிறுத்தியிருந்த சமயம் அது. அப்போது வாசிக்க கிடைத்த புத்தகம்தான் ஷோபாசக்தியின் "ம்". அவர் ஆணா,பெண்ணா என்பது கூட அப்போது தெரியாது. வாசிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துவிட்டது இவரது எழுத்து சர்வதேச தரம் வாய்ந்தது என்று. ஒரே மூச்சில் ஒரே இரவில் படித்து முடிக்கப்பட்ட 150 பக்க புத்தகம் "ம்". அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்நாவல் பற்றிய காட்சிப்படிமங்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் "வெலிகட சிறை உடைப்பு" பற்றி அவர் எழுதியுள்ள இடங்கள் எந்தப் பேரிலக்கியத்துக்கும் ஒப்பானது. அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விசாரித்தேன்.

அவர்
ப்ரான்சில் வசித்துவருகிறார் எப்போதாவதுதான் இந்தியா வருவார் என்றும் கூறினார்கள். அவருக்கு ஒரு கடிதம் மின்னஞ்சல் செய்தேன். எப்பதிலும் இல்லை. பிறகு அவரின் நூல்களான "கொரில்லா","தேசத்துரோகி" போன்றவற்றைப் படித்தேன். "தேசத்துரோகி" சிறுகதைத் தொகுப்பில் "சூச்சுமம்" என்றொரு கதை உள்ளது. அவரது அபூர்வமான பகடிக்கு அக்கதையை சான்றாக கூறலாம். அவரைச் சந்தித்து ஒருநாள் பேச வேண்டும் என்று ஆவல் கூடிக்கொண்டே போனது.

அவருடைய
நேர்காணல்களை அவ்வப்போது சிற்றிதழ்களில் படிப்பதுண்டு. போனமாதம் அம்ருதாவில் வந்த நேர்காணல் வரைக்கும் படித்துவிட்டேன். அவரது மேற்சொன்ன மூன்று நூல்களும் தீவிர இலக்கிய வாசகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவை.

அதன்பிறகு
"வேலைக்காரிகளின் புத்தகம்" என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது,அதுவும் 150 பக்கம்தான். அதில் பல செறிவுள்ள கட்டுரைகள் இருந்தபோதும் "மதுக்குரல் மன்னன்" என்ற இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவை பற்றிய கட்டுரை,சிறந்த சிறுகதைக்கு ஒப்பானது. இலங்கையில் எண்பதுகளில் இருந்த இளைஞர்களின் மனநிலையின் சாட்சியாக இருந்து இக்கட்டுரையை எழுதியுள்ளார் ஷோபா சக்தி.

அதேபோல
இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன விதானகே பற்றிய கட்டுரையும் முக்கியமானது. பிரச்சன விதானேகவுக்கு "செவ்வகம்" சிற்றிதழ் மூலம் சிறப்பிதழ் தயாரித்த எனது நண்பர் விஸ்வாமித்திரன் பெயரையும் கட்டுரையின் அடியில் குறிப்பிட்டிருந்தார்.

சமகால
இலக்கியங்களையும்,திரைப்படங்களையும் பிரான்ஸில் இருந்தபடியே நுட்பமாக கவனித்து வருபவர் ஷோபாசக்தி என்ற எண்ணம் எனக்கு வலுப்பட்டது. நானும்,விஸ்வாமித்திரனும் சந்திக்கும் போது அவரைப் பற்றி விவாதிப்போம். ஆனால் திடீரென ஒரு நாள் எதிர்பாராதவாறு சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதை சொல்கிறேன்..

(
தொடரும்)

2 comments:

  1. அடுத்த பகுதிக்காக காத்திருப்பவர்களில் ஒருவன் :)

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு ஜி :-)

    ReplyDelete