Thursday, December 17, 2009

ஷோபாசக்தி



தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். "காண்டாமிருகம்","அபாயம்"(க்ரியா வெளியிட்டவை) போன்ற சிறு நூல்கள் செய்த இலக்கிய மாற்றங்களைக் கூட இப்பெரிய நூல்கள் செய்வதில்லை என்று எழுதியிருக்கிறார்.பெரிய நாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர் ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடுகிறது. இவ்வாறு பெரிய நூல்களில் நான் மலைத்து வாசிப்பதையே நிறுத்தியிருந்த சமயம் அது. அப்போது வாசிக்க கிடைத்த புத்தகம்தான் ஷோபாசக்தியின் "ம்". அவர் ஆணா,பெண்ணா என்பது கூட அப்போது தெரியாது. வாசிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துவிட்டது இவரது எழுத்து சர்வதேச தரம் வாய்ந்தது என்று. ஒரே மூச்சில் ஒரே இரவில் படித்து முடிக்கப்பட்ட 150 பக்க புத்தகம் "ம்". அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்நாவல் பற்றிய காட்சிப்படிமங்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் "வெலிகட சிறை உடைப்பு" பற்றி அவர் எழுதியுள்ள இடங்கள் எந்தப் பேரிலக்கியத்துக்கும் ஒப்பானது. அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விசாரித்தேன்.

அவர் ப்ரான்சில் வசித்துவருகிறார் எப்போதாவதுதான் இந்தியா வருவார் என்றும் கூறினார்கள். அவருக்கு ஒரு கடிதம் மின்னஞ்சல் செய்தேன். எப்பதிலும் இல்லை. பிறகு அவரின் நூல்களான "கொரில்லா","தேசத்துரோகி" போன்றவற்றைப் படித்தேன். "தேசத்துரோகி" சிறுகதைத் தொகுப்பில் "சூச்சுமம்" என்றொரு கதை உள்ளது. அவரது அபூர்வமான பகடிக்கு அக்கதையை சான்றாக கூறலாம். அவரைச் சந்தித்து ஒருநாள் பேச வேண்டும் என்று ஆவல் கூடிக்கொண்டே போனது.

அவருடைய நேர்காணல்களை அவ்வப்போது சிற்றிதழ்களில் படிப்பதுண்டு. போனமாதம் அம்ருதாவில் வந்த நேர்காணல் வரைக்கும் படித்துவிட்டேன். அவரது மேற்சொன்ன மூன்று நூல்களும் தீவிர இலக்கிய வாசகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவை.

அதன்பிறகு "வேலைக்காரிகளின் புத்தகம்" என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது,அதுவும் 150 பக்கம்தான். அதில் பல செறிவுள்ள கட்டுரைகள் இருந்தபோதும் "மதுக்குரல் மன்னன்" என்ற இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவை பற்றிய கட்டுரை,சிறந்த சிறுகதைக்கு ஒப்பானது. இலங்கையில் எண்பதுகளில் இருந்த இளைஞர்களின் மனநிலையின் சாட்சியாக இருந்து இக்கட்டுரையை எழுதியுள்ளார் ஷோபா சக்தி.

அதேபோல இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன விதானகே பற்றிய கட்டுரையும் முக்கியமானது. பிரச்சன விதானேகவுக்கு "செவ்வகம்" சிற்றிதழ் மூலம் சிறப்பிதழ் தயாரித்த எனது நண்பர் விஸ்வாமித்திரன் பெயரையும் கட்டுரையின் அடியில் குறிப்பிட்டிருந்தார்.

சமகால இலக்கியங்களையும்,திரைப்படங்களையும் பிரான்ஸில் இருந்தபடியே நுட்பமாக கவனித்து வருபவர் ஷோபாசக்தி என்ற எண்ணம் எனக்கு வலுப்பட்டது. நானும்,விஸ்வாமித்திரனும் சந்திக்கும் போது அவரைப் பற்றி விவாதிப்போம். ஆனால் திடீரென ஒரு நாள் எதிர்பாராதவாறு சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதை சொல்கிறேன்..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு சென்னையில் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதில்தான் ஷோபா சக்தியின் நூல்களை பதிப்பித்து வருபவரான நீலகண்டனை சந்தித்தேன். அவர் கடை போட்டிருந்தார். “அநிச்சி” மற்றும் “இன்மை” போன்ற சிற்றிதழ்களை வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட சில புத்தகங்கள் இப்போது இல்லை உங்களுக்கு விரைவில் தருகிறேன் என்று கூறினார். பிறகு அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைத்தேன்.அப்புறம் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “கருப்புப்பிரதிகள்” நீலகண்டன் குறித்து இவ்விடத்தில் சொல்ல வேண்டும். கடும் பொருளாதார நெரிக்கடிகளின் நடுவேயும்,தேர்ந்தெடுத்த புத்தகங்களை உரிய நேர்த்தியுடனும் தரத்துடனும் பதிப்பிப்பவர். அதோடு நின்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் அவரே சுமந்து கொண்டு போய் விற்று வருவார். கடுமையான உழைப்பாளி. இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுப்பான “எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு” கருப்புப் பிரதிகள் வெளியீடாக வருவதை அறிந்து நீலகண்டனை தொடர்பு கொண்டேன். புத்தகம் தயாரானவுடன் பிரதி தருவதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பிறகு மதியம் 12 மணியளவில் எனக்கு போன் செய்து தி.நகர் வருகிறேன் என்றார். பிறகு என் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். “எம்.ஜி.ஆர் கொலைவழக்கு” சிறுகதைத் தொகுப்பையும்,அழகிய பெரியவனின் கட்டுரைத்தொகுப்பான “மீள்கோணம்” புத்தகத்தையும் கொடுத்தார்.

ஷோபாசக்தி பற்றி அவரிடம் விசாரித்தேஎன். அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறார் என்றும் வரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு நீலகண்டனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இது அவரின் இயல்பு. இந்த இடைவெளியில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து இரண்டு நாட்களில் முடித்தும் விட்டேன். ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமை” என்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.

அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறது.

அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஆக்குமம்” என்ற கதை.பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.

அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.

“கொரில்லா” நாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.

வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நியூபுக் லேண்டிற்கு வாரம் ஒருமுறை போவது எனது வழக்கம். அவ்வாறு ஒருநாள் மதியம் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு அங்கு சென்றேன். கருப்புப் பிரதிகள் நீலகண்டன் புத்தககடையின் முகப்பில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தேன். ஷோபாசக்தியைப் பற்றி வழக்கம்போல பேச ஆரம்பிக்க,”அதோ இருக்கிறார் ஷோபா சக்தி” என்று அவர் கையை எதிர்புறமாக காண்பிக்க “எங்கே” என்று ஆவலுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாங்கள் நின்றிருந்த ரேக்கிற்கு எதிர்ப்புறம் கீழே அமர்ந்து புத்தகம் தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், சத்தம்கேட்டு என்னை நோக்கி ஓடி வர நான் அவரை நோக்கிப்போக எனது கையை இறுகப்பற்றிக் கொண்டார். நான் மதிக்கும் எழுத்தாளரான நண்பர் ஷோபாசக்தி.

வாழ்வில் நானோ அவரோ மறக்கமுடியாத தருணம் அது. ஏதோ பல ஆண்டுகள் பழக்கப்பட்டவர்கள் போல நாங்கள் பேச ஆரம்பித்தோம்.

எழுதுகிறீர்களா? Blog ஒண்ணு ஆரம்பிங்க” என்று சொன்னார். அதற்குப்பிறகுதான் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணமே எனக்கு ஏற்பட்டது. “பேஸ்புக்” என்ற நண்பர்கள் இணையதளத்துக்கும் அழைப்புக் கொடுத்து கூட்டிப் போனவரும் அவர்தான். புத்தககடைக்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றோம்.அங்கு கிட்டதட்ட அரைமணிநேரம் பேசினோம்.பிறகு அவருடன் நீலகண்டனும் சேர்ந்து கிளம்பிச் சென்றார்.

“உங்களை சந்திச்சதுல சந்தோஷம்,என் நம்பர் தேவைப்பட்டா நீலகண்டன்கிட்ட வாங்கிக்கங்க,நாம வாய்ப்பு இருந்தா பிரான்ஸ் போறதுக்குள்ள மறுபடியும் சந்திப்போம்” என்றபடியே விடைபெற்றார்.

பெரிய கலைஞர்கள் சிலரிடம் மட்டும் இந்த அன்பையும்,அரவணைப்பையும் கண்டிருக்கிறேன்.இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன்ன விதானேகயை ஒருமுறை விஸ்வாமித்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவருடைய திரைப்படங்கள் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. அதன்பின் “இரமத்தியமா” “புரவந்த களுவரே” போன்ற படங்களை பார்த்துவிட்டேன். சரியாக ஒருவருடம் கழித்து பிரச்சன விதானகேயை ஒரு திரைப்படவிழாவில் பார்த்தபோது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அவ்வளவு பெரிய கலைஞரா இவ்வளவு எளிமையுடன் இருக்கிறார் என்று. ஆனால் அவரோ என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டவராக தோளில் கைபோட்டபடி பேச ஆரம்பித்தார். வாழ்வியல் அறமும் முடிவற்ற நேசமும் தோழமையும் உண்மை கலைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது. அத்தகையவர்கள் இருவரை என் வாழ்க்கையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சியே.

ஷோபாசக்தியின் நூல்கள

1.கொரில்லா – நாவல் – அடையாளம் வெளியீடு

2.”ம்” – நாவல் – கருப்புப்பிரதிகள் வெளியீடு

3.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு – சிறுகதைகள் – கறுப்புப்பிரதிகள்

4.வேலைக்காரிகளின் புத்தகம் – கட்டுரைகள் – கறுப்புப்பிரதிகள்

5.தேசத்துரோகி – சிறுகதைகள் – அடையாளம்

5.Gorilla – Randam House Edition – Novel

6. இன்றெமக்கு வேண்டுவது சமாதானமே – பயணி வெளியீடு

7.ஷோபாசக்தி –தோழர் தியாகுவுடன் கலந்துரையாடல் – வடலி வெளியீடு(வெளிவரப்போகிற நூல்)

No comments:

Post a Comment