Thursday, March 31, 2011

டாய்லெட் கிடைக்குமா ப்ளீஸ்?-பிரியா தம்பி


என் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வெளியில் இருக்கும் பலமணி நேரங்கள் சிறுநீரை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் ‘பியா பாத்ரூம்’ எனக் கேட்பாள். அவள் பாத்ரூமுக்கு ஓடும் வேகம் அவளது பலமணி நேர அவஸ்தையை எனக்கு உணர்த்தும்.

பொது இடங்களில் உள்ள கழிவறைகளின் சுத்தம் பற்றி நமக்குத் தெரியும். அது அவளுக்கு புதிதாக ஏதாவது நோயை வரவழைத்து விடக்கூடாதே என அங்கு அழைத்து செல்வதே இல்லை. திறந்த இடங்களில் சிறுநீர் கழிக்க அவள் ஒத்துக் கொள்வதே இல்லை. குழந்தையே ஆனாலும் பொது இடங்களில் பெண்கள் சிறுநீர் கழிக்கக் கூடாது, சிறுநீரை அடக்கித்தான் ஆக வேண்டும் போன்ற விஷயங்கள் அவளது ஜீனில் வந்தவையாக இருக்கக் கூடும்.

நண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றாலோ, ரயிலில் பயணம் செய்யும்போதோ ‘’இங்கே பாத்ரூம் இருக்கா’’ என்று கேட்பாள். இருக்கு என்று சொன்னால் அவளது முகம் அப்படியே மலர்ந்து விடும். அந்த நேரங்களில் மிக வேதனையாகவும், கோபமாகவும் இருக்கும்.

பொதுக்கூட்டங்களில் பெண்கள் வரவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் நம் தோழர்களிடம் இந்த கழிவறை பிரச்னையை காரணம் காட்டியே பலமுறை கோபமாக சண்டை இட்டிருக்கிறேன். இரவு முழுக்க நடக்கும் கலை இரவுகளில், நேரம் பன்னிரண்டை தாண்டும்போதே அங்கிருக்கும் தோழிகளும், நானும் அவஸ்தைப்பட ஆரம்பிப்போம். பல நேரங்களில் அதற்காகவே நிகழ்ச்சியில் இருந்து பாதியில் கிளம்பும்படியும் ஆகியிருக்கிறது.

பயணங்களில் இந்த அவஸ்தையை பற்றி சொல்லவே வேண்டாம். 15 மணி நேர பயணத்தில் ஏதாவது ஒரு மோட்டலில் தான் பேருந்து நிற்கும். அந்த இடத்தின் சுகாதாரம் பற்றியெல்லாம் நாம் யோசிக்கவே முடியாது. சர்க்கரை நோயாளிகள், வயதான பெண்கள் எனில் அவஸ்தை அதிகம். எனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் சாலைப் பயணத்தில் தண்ணீர் குடிப்பதேயில்லை. சுகாதாரமற்ற இடங்கள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது இரண்டும் ஏற்படுத்தும் மருத்துவப் பிரச்னைகளும் நாம் அறியாததல்ல.

பேருந்து ஓட்டும் பெண்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் காவலர்கள் இவர்கள் இந்தப் பிரச்னையை தினம் தினம் சமாளித்தாக வேண்டும். சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தில் 70 சதவீதம் அரசுப் பள்ளிகளில் கழிப்பிடமே இல்லையாம். கிராமங்களில் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதற்கு சரியான கழிப்பிட வசதி இல்லாதது முக்கியக் காரணம். மாதவிலக்கு போன்ற நாட்களில் அந்தக் குழந்தைகளின் அவஸ்தையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிரச்னை இப்படியிருக்க...

அடிப்படைத் தேவையான கழிவறை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள் தான் இலவசங்களை இன்று அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆண், பெண் யார் ஆட்சி செய்தாலும் பெண்களின் பிரச்னைகள் யாருக்கும் உறைப்பதில்லை.

அரசுகளை எல்லாம் திட்டிக் கொண்டு எழுத்தில் புரட்சி பேசும் நாம் ... ஆண், திருமணம், காதல், காமம், படுக்கையில் எப்படி நடந்து கொள்வது... இதெல்லாம் தாம் பெண்களின் பிரச்னையென பேசிக் கொண்டிருக்கிறோம்.

தோழர், இங்கே எங்கியாவது டாய்லெட் இருக்குமா? உங்க வீட்டு டாய்லெட்டை கொஞ்சம் யூஸ் பண்ணிக்க முடியுமா? என பதட்டங்கள் இல்லாமல் பொது இடங்களுக்கு பெண்கள் வரமுடிந்தாலே பாதி விடுதலையை எட்டிவிட முடியும் என நினைக்கிறேன்..

Friday, March 25, 2011

குற்றமும் தண்டனையும்


அருணா ஷண்பக். 20 வயது. மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஒரு டாக்டருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்தது. இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதில் அருணாவுக்குக் கூடுதல் சந்தோஷம். திருமண வாழ்க்கை, கணவன், குழந்தைகள் என்று கற்பனையில் திளைத்துக்கொண்டிருந்தார்.

1973-ம் ஆண்டு நவம்பர் 27. உடை மாற்றுவதற்காக மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்குச் சென்றார் அருணா. அதே மருத்துவமனையில் வார்ட் பாயாகப் பணியாற்றிய சோஹன்லால் பார்தா வால்மீகி என்பவன், பின்னால் வந்து தாக்கினான். நாயைக் கட்டி வைக்கும் சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். அருணாவுக்கு நடக்கும் கொடூரம் புரிவதற்குள் சுயநினைவு இல்லாமல் போய்விட்டது. சோஹன்லால் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நகை, பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாததால், அருணாவின் கண்கள் திறந்திருந்தும், பார்க்க முடியவில்லை. அவரால் பேச முடியவில்லை. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த 38 ஆண்டுகளாக அவர் வேலை செய்த கெம் மருத்துவமனை படுக்கையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார் அருணா.

உறவினர்கள் அதிர்ந்தார்கள். திருமணம் நின்றுபோனது. வழக்கு நடைபெற்றது. குற்றவாளி சோஹன்லால் கைது செய்யப்பட்டான். அவன் மீது திருட்டு, கொலை முயற்சி என்று இரண்டு வழக்குகள் போடப்பட்டன. அவன் இயற்கையான முறையில் உடல் உறவு வைத்துக்கொள்ளாததால், பாலியல் பலாத்காரம் வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. (என்ன கேவலமான சட்டம்! பெண்ணின் விருப்பம் இன்றி தொட்டாலே அது குற்றம்தானே?) ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

தண்டனை முடிந்த பிறகு சோஹன்லால் டெல்லி சென்று விட்டான். இந்த முப்பது வருடங்களில் அவனுக்குத் திருமணமாகி இருக்கலாம். அவனுடைய குழந்தைகளுக்கும் திருமணம் நடந்திருக்கலாம். பேரன், பேத்தி பிறந்திருக்கலாம். அவனுடைய வாழ்க்கையில் அந்த ஏழு ஆண்டுகள் மட்டுமே இயல்பு வாழ்க்கை சற்று மாறியிருந்திருக்கும். அதன் பிறகு அவனும் மற்றவர்களைப் போல இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்திருப்பான்.

ஆனால் அருணா? உயிர் மட்டுமே இருக்கிறது உடலில். வேறு எந்த அசைவுகளோ, சிந்தனைகளோ இன்றி இருக்கிறார். அவருக்கு நேர்ந்த கொடுமை தெரியாது. பெற்றோர் இறந்து போன விஷயம் தெரியாது. திருமணம் நின்றுபோன விஷயம் தெரியாது. ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருந்தும் தன்னை வந்து யாரும் பார்ப்பதில்லை என்பது தெரியாது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்குத் தண்டனை கிடைத்த விவரமும் தெரியாது. அவன் சந்தோஷமாக எங்கோ வாழ்ந்து

கொண்டிருப்பதும் தெரியாது. தனக்கு வயது 58 என்றும் தெரியாது. தன்னுடய உருவம் எப்படி உருமாறியிருக்கிறது என்பதும் தெரியாது. வெளி உலகில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன, இப்போது பகலா, இரவா எதுவும் தெரியாது.

குற்றம் செய்தவன் குறைந்த தண்டனை அனுபவித்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டான். ஆனால் திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அருணாவுக்கு வாழ்நாள் முழுவதும் எத்தனை கொடூரமான தண்டனை?

அருணா அனுபவித்தது போதும், அவரைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கருணைக்கொலைக்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்பதால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனால் மருத்துவர்கள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் அவர் உயிர் பிரிவதற்கு உதவி செய்யலாம் என்று புதிய தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

ருச்சிகா கிர்ஹோத்ரா

பத்து வயதிலேயே தாயை இழந்தவர் ருச்சிகா. அப்பா, பாட்டி, தம்பியுடன் சண்டிகரில் வாழ்ந்து வந்தார். ருச்சிகாவும் அவர் தோழி ஆராதனாவும் டென்னிஸ் வீராங்கனைகள். தினமும் பயிற்சிக்காக டென்னிஸ் அசோசியேஷன் செல்வார்கள். அந்த அசோசியேஷனின் தலைவர் ரத்தோர் என்ற ஐபிஎஸ் அதிகாரி. அவருடைய மகளும் ருச்சிகாவுடன் படித்து வந்தார்.

ஒருநாள் பயிற்சிக்குச் சென்றபோது, தோழி ஆராதனாவை விரட்டிவிட்டு, ருச்சிகாவைப் பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார் ரத்தோர். ருச்சிகா போராடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆராதனா அதிர்ந்துபோனார். இருவரும் தப்பித்து வீடு வந்து சேர்ந்தனர். மறுநாளும் ரத்தோரின் கொடுமை தொடர்ந்தது. இருவரும் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். பெரும் போராட்டத்துக்குப் பிறகு ரத்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று ருச்சிகா, ஆராதனா குடும்பங்கள் மிரட்டப்பட்டன. ருச்சிகாவின் தம்பியை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார் ரத்தோர். ருச்சிகாவின் அப்பா மீது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அப்படியும் வழக்கு வாபஸ் பெறாததால், நடத்தை சரியில்லாதவள் என்று சொல்லி ருச்சிகாவை பள்ளியிலிருந்து நீக்க வைத்தார் ரத்தோர். அடுத்தடுத்து இன்னல்களைச் சந்தித்த 14 வயது ருச்சிகா, தன்னால்தானே இத்தனை துன்பங்கள் தன் அப்பாவுக்கும் தம்பிக்கும் என்று நினைத்து, 1991-ம் ஆண்டு விஷம் சாப்பிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

விஷயம் கேள்விப்பட்ட ரத்தோர் அன்று இரவு பார்ட்டி வைத்து, கொண்டாடியிருக்கிறார். வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ரூபி என்ற பெயரில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அளிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் வழக்கு மூடப்பட்டது. சில மாதங்களில் ரத்தோரின் சேவையைப் பாராட்டி, அரசாங்கம் கூடுதல் டிஜிபி பொறுப்பு அளித்தது.

அநியாயமாகத் தன் மகள் சாகடிக்கப்பட்ட விஷயம் கிர்ஹோத்ராவை நிம்மதி இழக்கச் செய்தது. தவறு செய்தவர் எந்தக் குற்றவுணர்வும் இன்றி வாழ்ந்துகொண்டிருக்க, தன் மகளின் இறப்பு மன உளைச்சலைத் தந்தது. மீண்டும் வழக்கு போடப்பட்டது. ஏராளமான தொல்லைகள். போராட்டங்கள். அவமானங்கள். 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தோர் செய்த குற்றத்துக்காக 6 மாத தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனை அளிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் சிரித்துக்கொண்டே பெயிலில் வெளியே வந்துவிட்டார் ரத்தோர்.

ஆருஷி தல்வார்

ஆருஷியின் பெற்றோர் பிரபலமான பல் மருத்துவர்கள். வசதியானவர்கள். பங்களாவில் வாசம். ஒரே பெண். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஆருஷி, ஒருநாள் இரவு அவருடைய அறையில் கொல்லப்பட்டார். மறுநாள் அந்த வீட்டின் வேலைக்காரர் ஹேமந்த் உடல் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலையில் இதுவரை சரியான துப்புக் கிடைக்கவில்லை. மிகவும் புத்திசாலித்தனத்துடன், மருத்துவம் தெரிந்த ஒருவரால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். கொலைக்கான காரணமும் தெரியவில்லை. எந்தவிதத் தடயமும் கிடைக்கவில்லை. வெளியில் இருந்து யாரும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, ஆருஷியின் பெற்றோர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்கிறது சிபிஐ. புரியாத புதிராக இருக்கிறது ஆருஷியின் வழக்கு.

பத்மினி

1992-ம் ஆண்டு சிதம்பரத்தில் பத்மினியின் கணவரை, திருட்டுக் குற்றத்தில் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். கணவருக்கு உணவு எடுத்துச் சென்ற பத்மினியை அவருடைய கணவரின் கண் முன்னே பல காவலர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். மறுநாள் பத்மினியின் கணவர் தூக்கில் தொங்கியதாக உடலை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் நடந்த இந்தக் கொடுமையைக் கண்டு நாடே அதிர்ந்து போனது.

**

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையின் சிறுகதைப் போட்டிக்காக ஏராளமான கதைகள் வந்து சேர்ந்தன. அதில் முதல் பரிசு பெற்ற கதையை எழுதியவர், ஆயுள் தண்டனை கைதி. அவர் தொடர்ந்து கதைகள் எழுதி வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை முடிந்து, அலுவலகத்துக்கு வந்தார். ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக அவர் தண்டனை அனுபவித்தார் என்பது மட்டும்தான் அதுவரை எங்களுக்குத் தெரிந்த விஷயம்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. சாந்தமான முகம். நிதானமான நடை. சூழ்நிலையால் குற்றவாளியாக மாறியிருப்பாரோ என்று நினைத்தேன். சற்று நேரம் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் சென்ற பிறகு இந்த விஷயம் தெரிய வந்தது.

’நீங்க எதுக்காக கொலை செய்தீங்க?’

‘ம்… அவ நல்லா தளதளன்னு இருப்பா. ஆசைப்பட்டுத் தொட்டேன். பயங்கரமா போராடி உயிரை விட்டுட்டா…’

‘அதை நினைச்சு இப்ப வருத்தப்படறீங்களா?’

’அவ செத்ததுலயோ, எனக்குத் தண்டனை கிடைத்ததிலேயோ வருத்தமே இல்லை. ஏதோ நடந்து முடிஞ்சிருச்சு…’

ஆறு ஆண்டுகள் தண்டனை முடிந்த சோஹன்லால் சக மனிதர்களைப் போல சுகமாக வாழ்கிறான். தன் மகள் வயதை ஒத்த பெண்ணைப் பாலியல் தொல்லை கொடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலை செய்ய வைத்த ரத்தோர், அரசாங்கத்தால் பதக்கம் பெற்று, பதவி உயர்வுகள் பெற்று, சமூகத்தில் பெரிய மனிதராக வலம் வந்து, ஓய்வும் பெற்றுவிட்டார். குற்றவாளி யார் என்றே சரியாக ஊர்ஜிதம் செய்ய முடியாமல் ஆருஷியின் வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொலையையும் குற்றமாக நினைக்காமல், தண்டனைக்கும் வருத்தப்படாமல் ஒருவரால் வாழ முடிகிறது.

அப்படியென்றால் மனத்தாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு, உயிரை விட்ட பெண்களுக்கு கிடைக்கும் நீதி என்ன? குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனைக்கு அர்த்தம்தான் என்ன?

மனம் திருந்தி வாழ்ந்தால் பரவாயில்லை. ஆனால் சில ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு, அல்லது செல்வாக்கை வைத்து தப்பி விட்டு, நாட்டில் நடமாடும் குற்றவாளிகளைக் கண்டு மேலும் குற்றங்கள் பெருகாதா?

இந்தியாவில்தான் பெண்கள் அதிக அளவில் வன்முறைகளுக்கு இலக்காகிறார்கள். ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறாள். பத்து நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிறாள். பணியிடங்களில் அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். முப்பது வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு நாடு முன்னேற முன்னேற குற்றம் குறைய வேண்டும். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தே வருகின்றன. பெண்களுக்கு நிகழ்த்தப்படும் குற்றங்களில் பெரும்பாலும் புகார் செய்யப்படுவதில்லை. பெற்றோரும் உறவினர்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களை அவமானமாகக் கருதுவதால் வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். ஒன்றிரண்டு குற்றங்களே பெரிய அளவில் வெளியே தெரிந்து, வழக்குகள் தொடரப்படுகின்றன.

அந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படியே பதிவு செய்தாலும் அந்த வழக்கு நியாயமாக நடப்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பணம், செல்வாக்கு, பதவி என்று பல விஷயங்கள் வழக்கின் போக்கை மாற்றிவிடுகின்றன. அப்படியும் சளைக்காமல் வழக்கைத் தொடர்ந்தால், தீர்ப்பு வருவதற்குள் இருபது வருடங்கள் வரை ஆகிவிடுகிறது. இவ்வளவு நீண்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, உடல்நிலை எவ்வளவு தூரம் வைராக்கியத்தோடு போராட வைக்க முடியும்? சில வழக்குகள் நடத்த பணம் இல்லாமல், தெம்பு இல்லாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. எல்லாம் கடந்து நீதி கிடைக்கும்போது, குற்றவாளிகளுக்குத் தண்டனை அற்பமாக அமைந்துவிடுகிறது. இல்லையென்றால் அந்தத் தண்டனைக்கு மேல் முறையீடு, பெயில் என்று வெளியே வந்து, மிகக் குறைந்த கால தண்டனையுடன் தப்பி விடுகிறார்கள்.

இங்கு குற்றம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் நீதி கிடைப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது! அருணா, ருச்சிகா, ஆருஷி… இன்னும் பெயர் தெரியாத பாதிக்கப்பட்ட பெண்கள் நியாயம் கேட்டு நம் முன் நிற்கிறார்கள். அவர்கள் நியாயம் கேட்பது அவர்களுக்காக மட்டுமில்லை, இனி இதுபோன்று எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.
note
இந்த கட்டுரையை என் கவனத்திற்கு கொண்டு வந்த தோழி ரேவதி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி,,
courtesy http://www.tamilpaper.net/

Sunday, March 13, 2011

மெளனத்தின் அர்த்தம் இயக்குனர் மகேந்திரன் - சீனு ராமசாமி




மெளனத்தின் அர்த்தம் இயக்குனர் மகேந்திரன் - சீனு ராமசாமி


1992 ம் வருடம் மதுரை அமெரிக்கன் கல்லூரி திரைப்படக்கழகம் திரையிட்ட முள்ளும் மலரும் என்ற திரைப்படம் என் வாழ்வில் ஒரு புதிய திசையை திறந்தது. அதுவரை இலக்கியம் படிப்பவனாக இருந்த என்னுள் ஒரு முழுநீள திரைப்படம் ,நீக்கமறக் கவிதை நூலாக நிறைந்தது. படம் முடிந்து மதுரையிலிருந்து 7 கி.மீ நடந்தே பனியிரவில் வீடு வந்து சேர்ந்தேன்.

என் இரண்டு தங்கைகள் மீதும் என்னையறியாமல் அவர்களுக்காக உள்ளார்ந்த கண்ணீர் என்னுள் சுரக்கத் தொடங்கியது. மென்மேலும் அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மோலோங்கியது. ஒரு அண்ணனாக முழுமையாக உணர்ந்த தருணமது. பெண்மையின் பேச்சற்ற கணத்தின் பின்னனியில் இருக்கும் மெளனத்தின் அர்த்தம் புரியத்தொடங்கியது. பின்பு அவரின் அத்தனை படங்களும் உதிரிப்பூக்களாக என்னுள் நிறைந்தது.

ஏகலைவத் தவம் தொடங்கியது, ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றும் , அதன் மூலமே அறிமகமாக வேண்டும் என்ற தவிப்பு இருந்தது. ஜானி மாதிரி ஏன் முயலக்கூடாதென கூடல்நகர் திரைப்படத்தை முயன்றேன். ஆயினும், அவரை சந்திக்கும் துணிவு வரவில்லை.

தென்மேற்கு பருவகாற்று அத்திசையின் கதவுகளை திறந்தது. படத்தை அவர் பார்த்துவிட்டார் என்பதை அறியாமலே, என் படத்தை பார்க்குமாறு தொலைபேசியில் அவரை கேட்டுக்கொண்டேன். அவரோ “மிஸ்டர் ராமசாமி, உங்க படம் பார்த்தேன், நல்லாயிருக்கு, எனக்கு புடிச்சிருக்கு” என்றார்.
மலைச்சரிவில் ஓடும் சிறுவனைப் போல பரவசம் தொற்றிக்கொண்டது.

கூடல்நகர் திரைப்படத்துக்கு பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சஞ்சலத்தில் என் உறுதி சரியத் தொடங்கி மசாலா கதைகளை உற்பத்தி செய்யலாமா என்ற எண்ணமும் வந்தது உண்மை. ஒரு வயது பெண்குழந்தையுடன் மாநகரம் அன்றாட வாழ்வுக்கு திசை விரட்டிய கலை வாழ்வில், அமைதியற்ற நேரத்தில், கைகளை கட்டிக்கொண்டு அவரின் முள்ளும் மலரும் `காளி` எனக்கு நம்பிக்கையூட்டினான்.

சென்னை பள்ளிக்கரனை நோக்கி எனது காரில் அவரை சந்திக்க சென்றேன். புறநகர் குடியிருப்பொன்றில் செட்டிநாடு வீடு வகைகளை நினைவுறுத்தும் பேரமைதியான இல்லத்தின் முன் ஜப்பானிய மொழியில் அவரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ”வாங்க, மிஸ்டர் ராமசாமி” என்னை அழைத்தவர் இயக்குனர் மகேந்திரன். வெள்ளுடையில் இருந்தார். புருவம் சுருக்கி பேசினார் . தென்மேற்கு பருவகாற்றில் சில காட்சிகளைக் குறிப்பிட்டார். பட விழா, விருதுகளுக்கு இதை அனுப்ப சொன்னார். சினிமா பற்றிய எனது அபிப்பிராயங்களை கூர்ந்து கவனித்தார். அவரது அபிப்பிராயங்கள் எனக்கு இணக்கமாகவும் , நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது.

இயக்குனர் சீனு ராமசாமி என கையழுத்திட்டு அவரின் புத்தகங்களை தந்தார். அப்பெரிய வீட்டிலிருந்து வெளிவந்து யாருமற்ற அத்தெருவில் வெயிலில் நின்று வழியனுப்பினார். என் தந்தையை அறிந்த மன நெகிழ்வில் நெஞ்சில் கைவைத்து நன்றி சொல்லி விடை பெற்றேன்.

வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன். நதிக்கரையில் ஓடும் உதிரிப்பூக்கள் குழந்தைகளும். ஷோபாவின் பொட்டு வைத்த சிரிப்பும், சுடு தண்ணீரை தூக்கச் சொன்ன தங்கையின் முன் கையிழந்த அண்ணனின் முகமும், பூட்டாத பூட்டுகளாக திறந்த கார்க் கதவின் வழியாக மனக்கண்ணில் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

ஜான் ஆபிரகாம்- கலகக்காரனின் திரைக்கதை (புதிய பதிப்பு)


'ஜான் ஆபிரகாம்- ஒரு கலகக்காரனின் திரைக்கதை' என்ற புத்தகம் வம்சி புக்ஸ் வெளியீடாக வந்திருக்கிறது. இதனை தொகுத்துள்ள ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களின் சிரத்தையும், அர்ப்பணிப்புணர்வும்- இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்திலும், அது செம்மையாக தொகுக்கப்பட்ட விதத்திலும் புலப்படுகிறது. ஜான்'னின் திரைப்படங்களைத் தாண்டி அவரது ஆளுமையை நுட்பமான புரிதலோடு கவனப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு திரைக் கலைஞனுக்கான மிகச் சரியான மரியாதையை கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா சூழலை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு ஆச்சர்யமான, முக்கியமான பணி. சினிமாவில் ஆர்வம்கொண்ட இளையசமூகம் இந்த புத்தகத்தை கட்டாயம் வாசிக்க வேண்டும். ஜானை போல் நாம் வாழ இயலாது..ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் -அவரின் 'மாற்று சினிமா' குறித்த கருத்துக்கள், அதற்காக அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான காரியங்கள் நமக்கு உற்சாகத்தையும் துணிச்சலையும் வழங்கும் என்று நம்புகிறேன்.

-மாமல்லன் கார்த்தி


தொகுப்பாசிரியர்: ஆர்.ஆர்.சீனிவாசன்
வெளியீடு: வம்சி புக்ஸ்
விலை: 200 /-

அசையும் படம் - சி.ஜெ. ராஜ்குமார் (புத்தக அறிமுகம் )


ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் எனக்கு இந்த புத்தகத்தை அன்போடு அளித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதே நிகழ்வு 2003 'றில் நடந்திருந்தால் இரண்டே நாட்களில் புத்தகத்தை படித்து முடித்திருப்பேன், அப்போது தாய் மொழியின் வழியே கேமரா தொழில்நுட்பத்தை கற்க எனக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போது சினிமாவை ஒரு ஆரம்பக்கட்ட மாணவனாக கற்றுகொள்வதைத் தவிர வேறு வேலையும் இல்லாமல் இருந்தது . இன்று ஒரு முழுநீள திரைப்படம் எடுக்க முயன்று வரும் இருத்தல் சார்ந்த அலைகழிப்புகளுக்கு மத்தியில் இருக்கும் என் நிலை வேறு. அதனால் தான் இந்த தாமதம்.

ராஜ்குமாரை போல் தொழில் நுட்ப்ப அறிவும், செய்முறை அனுபவமும் ஒரு சேர பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய புத்தகத்தை கொண்டு வர இயலும். நடைமுறைக்கு தேவையான விடயங்கள் என்னவென்று அவர் அனுபவத்தில் கற்ற பாடங்களை மிகவும் அக்கறையோடு எளிமைப்படுத்தி தந்திருக்கிறார். தொழில்நுட்ப வல்லுனர்களின் பிரத்யேக தன்மையில் இல்லாமல், சினிமா மீது ஆர்வம் கொண்டிருக்கும் எல்லோருக்குமான புத்தகமாக இருப்பதன் காரணம் இது தான்.

இந்த புத்தகம் சினிமா என்ற ஊடகத்தின் துவக்கத்தில் இருந்து, இன்று வளர்ந்து வரும் டிஜிட்டல் சினிமா வரை, அதன் தொழில்நுட்பதை மையமாக கொண்டிருக்கிறது. வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொழில்நுட்ப்ப வளர்ச்சியின் பரிமாணத்தை, முக்கியமாக ஒளிப்பதிவு சார்ந்த அடிப்படை கூறுகளை எளிய வரைபடங்களின் மூலமும் எளிய சொல்லாடலின் மூலமும் விளக்குவதில் வெற்றி கண்டுள்ளது. இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களில் தமிழ் படுத்துதல் என்பது கடினமானது, அந்த காரியத்தை எந்த குழப்பமும் தராமல் கடந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திரைப்பட கல்லூரிக்கு சென்று சினிமா கற்க வாய்ப்பில்லாதிருக்கும் பல தமிழ் மாணவர்களுக்கு, தங்களது தாய் மொழியில் இப்படி ஒரு எளிமையான புத்தகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தரக் கூடியது.. தொழில்நுட்பப வார்த்தை ப்ரோயோகங்களை கண்டு அவர்கள் இனி அஞ்சத் தேவையிலை. மேலும் வகுப்பறையில் மாணவர்கள் எடுக்கும் 'notes' போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த புத்தகம் நமக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், நாடக ஒளியமைப்பு, பயிற்சிப்பட்டறைகள் என்று பன்முகத் தன்மை கொண்ட ஒருவராய் இருக்கிறார். இப்படிப்பட்டவர்களை நம் சூழலில் காண்பது அரிது. இவர்களை போன்றவர்கள் தான் சினிமாவை பற்றிய வெறும் கனவுகளை மட்டும் அளிக்காது, நமக்கு அதன் நடைமுறைத் தன்மையை, அது இயங்கக்கூடிய யதார்த்தத்தை தெளிவுடன் அடையாளம் காட்ட முடியும். சினிமாவின் அடிப்படைகளை அறியாது ஒரு விபத்தை போன்று ஒரு நல்ல படத்தை யாரும் எடுத்துவிடலாம் ஆனால் அந்த வெற்றியை தொடர்வது என்பது இயலாது , சாயம் வெளுத்துவிடும். என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக கூறுவார், "தமிழில் தற்போது இரண்டு வகையான இயக்குனர்கள் தான் உள்ளார்கள், ஒரு வகையினர் சினிமா எடுக்கத் தெரியாதவர்கள் , இன்னொரு வகையினர் சினிமா எடுக்க தெரிந்தது போல் நடிப்பவர்கள்". இந்த நிலை ஒருவகையில் உண்மை என்றாலும் இது தொடராமல் இருக்க வேண்டும். ராஜ்குமாரை போன்றவர்கள் மேலும் இது போன்ற ஆரோக்கியமான காரியங்களில் ஈடுபட வேண்டும். இந்த புத்தகத்திற்கு பின்பான உழைப்பு என் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. 'டிஜிட்டல் சினிமா' குறித்து அவரது நடைமுறை அனுபவங்களை இதே எளிமையோடு விரிவாக புத்தகம் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்குமாரிடம் முன்வைக்க விரும்புகிறேன், இன்றைய சூழலில் மிக்க பயனுள்ளதாக இருக்கும். -மாமல்லன் கார்த்தி-

ஆசிரியர்: சி.ஜெ. ராஜ்குமார்
பதிப்பாளர்: தி. திருநாவுக்கரசு
வெளியீடு: கீற்று பதிப்பகம்
விலை: 150 /-

Thursday, March 10, 2011

அதிகமான மதிப்புரைகளை பெற்ற சிறுகதை தொகுப்பு


கடந்த வருடத்தின் அதிகமான மதிப்புரைகளை பெற்ற சிறுகதை தொகுப்பு என்ற பெருமையை '' நகரத்திற்கு வெளியே ''பெறுகிறது.மொத்தம் 15 மதிப்புரைகளை பெற்று இருக்கிறது..முதல் விமர்சனம் எழுதிய நிலாரசிகன் முதல் சமீபமாக எழுதிய ஹவி வரைக்கும் எனது நன்றிகள்.அதிகமாக விற்ற சிறுகதை தொகுப்பும் கூட.ஒரு எழுத்தாளனின் முதல் தொகுப்புக்கு இந்த வெற்றியை அளித்த நண்பர்கள் ,வாசகர்கள்.அனைவருக்கும் நன்றி...விஜய் மகேந்திரனின் புத்தகத்தை கொண்டுவரக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்லியும் எனது புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்த
மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் ,பரவலாக நூலை எடுத்து சென்ற உயிர்மை பதிப்பகத்திற்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

Monday, March 7, 2011

ஒரு மனிதனின் ஒரு நகரம் – சென்னை


சென்னையைப் பல்வேறு ஊர்களில் இருந்தபடி, சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தத் தலைநகரில் வசிக்க நேருமென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் அப்பாவை அரக்கோணத்திற்கு மாற்றியபோது சென்னை மிக அருகாமை ஊராக இருந்தது. தமிழநாட்டில் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் தான் தொண்ணூறுகளில் பார்த்த சென்னையின் மனிதர்களின இயல்பு இப்போது ஏதோ ஒரு விதத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. அசோக்நகரில் சித்தி வீடு இருந்தது. விடுமுறைக்கு அவர்கள் அரக்கோணத்திற்கு வருவது அல்லது நாங்கள் சென்னைக்கு செல்வது வழக்கமாயிருந்தது.

சென்னை என்பது புதிய சினிமாக்கள் பார்க்கும் இடமாகவே அப்போது எனக்கு இருந்தது. ஆல்பர்ட், உதயம் அப்போது அருமையாகப் பராமரிக்கப்பட்ட திரையரங்குகளாகும். உதயம் தியேட்டரில் அதிக திரைப்படங்கள் பார்க்க நேர்ந்திருக்கிறது. அஞ்சலி, சத்ரியன், மைக்கல் மதனகாமராஜன், கோபுர வாசலிலே.. போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடியவை அந்த ஆண்டுகளில்.

அப்பாவிற்கு மத்திய அரசில் வேலை என்பதால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பெட்டிதூக்கி வேறு ஊர் செல்ல வேண்டியிருக்கும். ஒரு வழியாகக் கல்லூரிப் படிப்புக்காக மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்தார், அப்பா. படிப்பு முடிந்ததும் சென்னை சென்று செட்டிலாகி விட வேண்டும் என்ற அப்பார்ட்மெண்ட்வாசிக் கனவுதான் எனக்கும் இருந்தது. அந்த சாதாரண கனவு அவ்வளவு எளிதானதல்ல என்பது சென்னைக்கு வந்த பிறகுதான் புரிந்தது. 2005-ல் அப்பாவிற்கு ஓய்வு பெற மூன்று வருடங்கள் இருக்கும்போதுதான் சென்னைக்கு மாற்றினார்கள். அதுவரை அடிக்கடி வந்து செல்லும் ஊராகவும், ஒரு சுற்றுலா பயணியின் மன நிலையோடுதான் வந்து சென்று கொண்டிருந்தேன். 2000 முதல் 2005 வரை சென்னையில் தங்கிப் பணியாற்ற என் வீட்டினர் ஒத்துக்கொள்ளவேயில்லை.

ஒரு கட்டத்தில் மதுரையில் வேலையில் முன்னேற வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. நான் பணியாற்றும் பிஸியோதெரபி துறையின் வேலைகளும் மிகக்குறைவாக மதுரையில் இருந்தன. நானே சென்னைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த போது தான் இந்த மாற்றல் வந்து தலைநகருக்கு கொண்டு வந்து சேர்த்தது.

குவார்ட்டர்ஸ் கிடைத்த இடம் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை. இங்கு வந்து இறங்கிய போது எனக்கும் இந்தப் பகுதிக்கும் ஏதோ ஒரு தொடர்பு முன்னரே இருப்பது போல உணர்ந்தேன்.

வேலையில்லாமல் ஓரிரு மாதங்கள் இருக்க நேர்ந்தது. சாதாரணமாக ஒருவர் சென்னையில் வேலை தேட ஆரம்பித்தால் நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்பது என் கணிப்பு. நகரம் பிடிபடவே இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.

அந்த காலத்தில் எழுத்தாளர்களை நோக்கிய பயணங்கள் ஆரம்பமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணனை அடிக்கடி சந்திப்பேன். சென்னை குறித்து நிறைய விஷயங்களை அவர் எனக்கு சொல்லித்தருவார். புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடக்கும் இடங்கள், பிலிம் சேம்பர், புக் பாயிண்ட், ருஷ்யன் கலாச்சாரமையம், தேவநேயப்பாவணர் நூலக அரங்கம் என உரையாடலின் வழியே அறிமுகப்படுத்தினார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடும் பழைய புத்தகக் கடைகள் பற்றியும் அறிந்து கொண்டேன். அதில்தான் சம்பத்தின் “இடைவெளி” போன்ற மறுபதிப்புக் காணாத புத்தகங்களை வாங்கினேன். கிடைப்பதற்கரிய, தற்போது பதிப்பில் இல்லாத புத்தகங்களை அங்குதான் காண முடிந்தது. “குட்டி இளவரசன்”, “கரம் சேவ் சகோதரர்கள்”, சார்த்தர் எழுதிய புத்தகங்கள் என்று பல அரிய நூல்கள் மலிவான விலையில் கிடைத்தன.

உயிர்மை நடத்தும் பெரும்பாலான கூட்டங்களுக்கு மனுஷ்யபுத்திரன் அழைப்பு விடுப்பார். இத்தனைக்கும் அப்போது நான் இலக்கிய வாசகன் மட்டுமே, பல நண்பர்களை அறிமுகப்படுத்தினார். நேரம் கிடைக்கும் போது அவர் வீட்டிற்கு செல்வேன். பெரும் வேலைகளுக்கிடையேயும் எனக்காக நேரம் ஒதுக்கி இலக்கியம் குறித்தும், புதியதாய் உயிர்மையில் வரப்போகும் புத்தகங்களை குறித்தும் பேசுவார்.

இப்போதைய சென்னையின் வெறுமைத் தோற்றத்தை நினைத்துப் பார்க்கிறேன். எந்த நண்பரின் வீட்டுக்குள்ளும் நுழையவே முடியவில்லை. அப்படி நுழைந்தாலும் இலக்கியம் குறித்துப் பேச முடியாது. பொது இடங்களில் சந்திப்பதோடு சரி. ஆனால் மனுஷ்யபுத்திரனும், ராமகிருஷ்ணனும், அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது அமரவைத்து மணிக்கணக்கில் பேசியது எங்ஙனம் என யோசிக்கையில் வியப்பே மேலோங்கியது. இன்று வரைக்கும் இலக்கியம் தேடி வரும் இளைஞர்களுக்கு அவர்களின் வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

என் வீட்டின் அருகாமையில் அப்போது அஜயன் பாலா இருந்தார். அவர்தான் என்னைக் கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் நெருங்கிய நண்பராக உணரமுடிந்தது. அவர் போகும் இலக்கியக் கூட்டங்கள், நண்பர்கள் சந்திப்பு, சிறப்புத் திரையிடல்கள் என்று என்னையும் கூட்டிச் செல்வார். ஸ்ரீ நேசன், பழனிவேள், ஜோஸ் அன்றாயின், குமார் அம்பாயிரம், விசுவநாதன் கணேசன் எனப் பரவலான இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தினார். ஹபிபுல்லா சாலையில் அவருக்கு ஒரு அறை இருந்தது. அதுவே இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் களமாகவும் விளங்கியது.

அந்த அறையின் சமையலறை மேடையில் கூடப் புத்தகங்கள் இருக்கும், அக்காட்சி இன்றும் என் நினைவில் இருக்கிறது. இதற்கு நடுவேதான் தனியார் மருத்துவமனை ஒன்றில் எனக்கு வேலை கிடைத்தது. மருத்துவமனை வாரத்தின் பகல்களையெல்லாம் எடுத்துக் கொண்டது. விடுமுறைகளில் மட்டுமே நண்பர்களைச் சந்திக்கிற, இலக்கியம் பேசுகின்ற ஆளாய் மாறிப்போனேன். எழுதுவதும் கணிசமாக குறைந்துவிட்டது. அய்யப்பன் தான் தொடர்ந்து நான் இயங்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவ்வப்போது பேச்சினூடே சொல்வார்.

நகரத்தின் மனிதர்கள் எங்கும் பரபரப்பின் மீது தொற்றிக் கொண்டு இயங்குகிறார்கள். தன் வாழ்வு, தன் குடும்பம், தன் தேவைகள் என்றே அவர்களின் வாழ்க்கை சுருக்கியதால் இருக்கலாம். இவர்களிடம் இருந்து தனிமைப்பட்டவனாய் நான் உணர்ந்தேன். அந்த மாநகரத்தனிமை தான் என்னைக் கதைகள் எழுத வைத்தன. அவசரத்திற்கு உதவி செய்யக்கூட ஆட்கள் வரமாட்டார்கள் என்பதைப் பல முறை கண்டு இருக்கிறேன். சாலை விபத்தின் போது “எனக்கென்ன” என்று ஒதுங்கிப்போகும் ஆட்களுக்கு மத்தியில் ஓரிரண்டு பேர் உதவிக்கு வருவது இன்னும் ஈரம் மிகுந்த மனிதர்கள் இருப்பதையும் காட்டியது. புதிய இடங்களில் வழிகேட்க நான் ஆட்டோ ஓட்டுநர்களையே பயன்படுத்துவேன். பக்கத்தில் இருக்கும் தெருவின் பெயரே தெரியாதவர்களே வீடுகளில் இருக்கிறார்கள். தெரிந்தாலும் தெரியாது என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். என் பக்கத்து வீட்டில் யாருக்கும் நிச்சயம் என் பெயர் தெரியாது என்றே நினைக்கிறேன். தென் மாவட்டங்களில் இருந்து என்னைப் போன்றே நிறைய இளைஞர்கள் வேலை தேடி இங்கு வருகிறார்கள். வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்.

நானும், அய்யப்ப மாதவனும், ஒரு கோடைகால மதியப் பொழுதில் திட்டம் ஒன்றைத் தீட்டினோம். அவருக்கும் எனக்கும் நெத்திலி மீன் சாப்பிடும் ஆசை வந்தது. நெத்திலி வறுவல் தி.நகரில் ஜி.என். செட்டி சாலையில் உள்ள ஹோட்டல் விருதுநகரில் பிரபலமான உணவுகளின் ஒன்று. அவரும் நானும் சென்று நெத்திலி மீன் வறுவல் ஆளுக்கு ஒன்றாகப் பார்சல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். அறையில் வறுவலைக் கொண்டு வந்து ஆளுக்கு ஒரு பீருடன் சாப்பிடுவது திட்டம். கோடைக்கால மதியத்தில் ரம்மியமாக இருக்கும் என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். கொஞ்ச நேரத்தில் அரசியல்வாதி ஒருவரின் வாரிசுகள் ஹோட்டலினுள் நுழைந்தனர். அவர்கள் ஏஸி அறைக்குள் சென்றனர். நாங்கள் வேடிக்கை பார்த்தோம். சுறாப்புட்டு, இறாவறுவல், நெத்திலி வறுவல் என அவர்கள் அறைக்குள் சென்று கொண்டே இருந்தது. இருமுறை பில் போடும் இடத்தில் கேட்டேன். காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்தது. பொறுமையிழந்து இருவரும் சென்று கேட்டபோது நெத்திலி வறுவல் தீர்ந்துவிட்டதாகவும், வேண்டுமானால் சிக்கன் 65 போட்டுத் தருவதாகக் கூறினார்கள். எங்களுக்கு எடுத்து வைத்ததை அரசியல்வாதி குடும்பத்தினருக்கு தாரை வார்த்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

"முன்பே சொல்ல வேண்டியதுதானே, இவ்வளவு நேரம் காக்க வைத்தா அநியாயமாக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்வீர்கள்?" எனக்கேட்டேன்.

“அதான் 65 போட்டுத்தரம்னு சொன்னமே சார்” என்றார்கள்

“அட வெண்ணைகளா, அதுக்கு எதுக்குடா உங்க ஹோட்டல் தேடி வர்றோம்?” என படக்கென்று கேட்டார் அய்யப்பன்.

“பாருங்க வி.எம். சென்னையில் ஒரு சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல் அரசியல் உள்ளே நுழைஞ்சிடுது!” ஆற்றாமையுடன் அய்யப்பன் கூறினார்.

இங்கு வேலை, பதவி, சம்பளம், கவனிப்பு, மரியாதை, உடை எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அதாவது கண்ணுக்குத் தெரியாத நுண் அரசியல். ஏதாவது ஷாப்பிங் மால்களிலோ, வரவேற்பு கூடங்களிலோ குறிப்பிட்ட இனத்தை அதாவது வட இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்களை மட்டும்தான் பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்துகின்றனர். இவற்றில் ஒரு கருப்பான பெண்ணைக்கூடக் காண்பது கடினம். அதேபோல ஐ.டி. கம்பெனிகளுக்கும் வேலைக்கு அமர்த்தும் பெண்களுக்கும் நிறம், உடை கோட் (Code) உண்டு என்று ஒரு நண்பர் கூறினார்.

இவ்வளவு நாட்களாக இங்கிருந்தும் என்னால் நகரத்தின் சூழ்ச்சிகளில் ஒன்றைக் கூடக் கற்றுக் கொள்ளவோ பயன்படுத்தவோ முடிந்ததே இல்லை. சாட்சியாக எல்லாவற்றுக்கும் இருந்து கடந்து சென்றதன் விளைவே எனது கதைகள்.

சென்னையின் லாப நோக்கற்ற சந்திக்கும் இடங்கள், ஒவ்வொன்றும், ஷாப்பிங் மால்களாக மாறிவருகின்றன. தனித்த வீடுகள் பெரும்பாலானவை அடுக்குமாடி குடியிருப்புகாளக மாறியிருகின்றது. செங்கல்பட்டின் எல்லைவரை சென்னை விரிந்திருக்கிறது. வாகனங்களின் நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி சாலையை அடைத்துக் கொண்டு மூச்சுவிட முடியாமல் மேம்பாலங்களில் ஏறிக் கொண்டு இருக்கின்றது. ஒரு காப்பி வாங்கிக் குடித்துக் கொண்டு மணிக்கணக்கில் நண்பர்களோடு கதை பேசிய உட்லண்ட்ஸ் டிரைவ் இன் இன்று அடைக்கப்பட்டு விட்டது. இதன் பாதிப்பால் எழுதியதே “அடைபடும் காற்று” என்றொரு கதை. தந்தையாரின் வீட்டை மட்டும் வைத்துக் கொண்டு அவரின் புத்தக சேகரிப்புகளை பழைய பேப்பர்கடைக்கு போட்ட புத்திரன்களின் மனநிலையைப் பார்த்து எழுதியதே “இருத்தலின் விதிகள்” மகப்பேறு மருத்துவரிடம் செக்கப் செய்ய வரும் திருமணமாகாத இளம் பெண்கள் சிலரின் கதையே “நகரத்திற்கு வெளியே” இப்படிநான் சிலவற்றுக்கு சாட்சியாக இருந்து எழுதியிருக்கிறேன். மாநகரின் சில காட்சிகளை பதிவு செய்திருக்கிறேன். பதிவு செய்யாமல் போனவையே அதிகம், இன்று அய்யப்பமாதவனின் அறை ஹபிபுல்லாரோட்டில் இல்லை. அவர் ராயப்பேட்டை சென்றுவிட்டார். விசுவநாதன் கணேசன் வளசரவாக்கம் போய்விட்டார். இன்று இந்த தி.நகரில் நான் மட்டும் இருக்கிறேன். தேநீர் கடையில் பேசிய பேச்சுக்கள், சந்திப்புகள், நண்பர்களின் இலக்கிய உரையாடல்கள் எதுவும் ஹபிபுல்லா ரோட்டில் இல்லை. வெற்றுத் தனிமை என்னைச் சூழ்ந்து இருக்கிறது.


இதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட உணர்வுகள் தானே தவிர, சென்னை நகரத்தின் ரங்கநாதன் தெருவில், சரவணா ஸ்டோர்ஸில் துணி எடுக்கும் கூட்டம் 365 நாட்களும் அலை மோதுகிறது. ஜாய் ஆலுக்காஸ், ஜி.ஆர்.டி என தீபாவளி, அக் ஷயா திதி ஸ்பெஷல் என்று நகைகள் வாங்க வரும் கூட்டமும் குறைவதேயில்லை. பாண்டிபஜார் கடைகள் சனி, ஞாயிறுகளில் நிரம்பியே வழிகின்றன. சரவணபவனில் க்யூ கட்டி நிற்கிறது. முருகன் இட்லி கடையில் நாள் முழுவதும் காத்திருந்து டோக்கன் வாங்கி சாப்பிடுகிறார்கள், வட இந்தியர்கள். கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பாக் வியாபாரம் கோலாகலமாகவே நடக்கிறது. யாருக்கும் எந்தக் குறையுமில்லை, வெளியே இருந்து சென்னையைப் பார்த்தால், கொண்டாட்ட நகரமாகவே தெரியும். கண்ணாடித் தொட்டியில் வண்ணமயமான மீன்களை வெளியே இருந்து பார்த்தபடி கடந்து செல்லும் ஒரு பார்வையாளரைப் போல சென்னையை ஒரு சிறுவனாகவே வேடிக்கைப் பார்க்க கற்றுக் கொண்டுள்ளேன்.

6 comments:
Chakkaravarthi said...
வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்....எத்தனை உண்மையான வரிகள் .. இல்லை இது வாழ்கையின் நிதர்சனம் .. கண்ணனுக்கு தெரியாத கயிறு மாநகரம் எல்லோரும் அதன் பிடியில் சிக்கி .. சிக்கலை அவிழ்க்க முயன்று தோற்று .. ஜெயிக்கும் .. விளையாட்டை அழகாய் பதிவு செய்திருக்கிறார் .. விஜய் மகேந்திரன் ..
Uma Varatharajan said...
//வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது.//மிகவும் யதார்த்தமான வரிகள்.எந்த ஒரு மனிதனும் சற்று பக்குவமடைய,சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள மன முதிர்ச்சியடைய ' நகர் வாசம்' என்பது இன்றியமையாதது. விஜய் மகேந்திரனின் எழுத்தில் தெரியும் அந்த 'விலகி நின்று வேடிக்கை பார்க்கும்' தன்மை புலப் படுவதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம்.
vijay mahendran said...
சக்ரவர்த்தி,உமா வரதராஜன் சார்..உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,,,
Aravind said...
Where i can find your stories/can you please mention the book and the publisher name
vijay mahendran said...
நன்றி அரவிந்த் ,''நகரத்திற்கு வெளியே'' தொகுப்பின் பெயர்,உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.
Lavanya Rajalakshmi said...
" கண்ணாடித் தொட்டியில் வண்ணமயமான மீன்களை வெளியே இருந்து பார்த்தபடி கடந்து செல்லும் ஒரு பார்வையாளரைப் போல சென்னையை ஒரு சிறுவனாகவே வேடிக்கைப் பார்க்க கற்றுக் கொண்டுள்ளேன். " - மிகவும் நிதர்சனமான வரிகள். நம்மைப்போல் வேற்று ஊர்வாசிகளுக்கு சென்னை போன்ற பரபரப்பான, சுலபத்தில் ஒட்டிக்கொள்ள முடியாத lifestyle உள்ள ஒரு நகரம் எப்பொழுதுமே கண்ணாடித் தொட்டியின் வண்ண மீன்தான்.. மிகவும் நல்ல பதிவு.. நன்றி விஜய்..
thanks to...
http://www.thangameen.com/Archieves/contentdetails.aspx?tid=196&iid=33