Monday, December 19, 2016

அதிக உண்மையும் கொஞ்சம் புனைவும் கலந்த கதைகள்

நகரத்திற்கு வெளியே புத்தகம் முதல் பதிப்பு வந்த சூழலை நினைத்துப் பார்க்கிறேன். பெரும் லட்சியங்கள் என்னை சூழ்ந்து இருந்த தருணமது. வெளிவந்த நாளன்று இந்த புத்தகத்திற்கு நண்பன் நிலாரசிகன் அவரது வலைத்தளத்தில் விமர்சனம் எழுத பல இணைய , வலைப்பதிவு நண்பர்கள் அந்த புத்தக கண்காட்சியில் புத்தகத்தை வாங்கியதோடு மட்டுமில்லாமல் அவர்களது கருத்துக்களை இணையத்தில் எழுதினார்கள். அதன் மூலம் பல நண்பர்களை பெற்றேன். புத்தகமும் கவனம் பெற தொடங்கியது.

இலக்கிய உலகிலும் நண்பர் வா.மு.கோமு தொடங்கி பல நண்பர்கள் இணையத்திலும், முக நூலிலும் தங்களது மதிப்புரைகளை எழுதினார்கள். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 'நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்' என்ற கட்டுரை சாகித்ய அகாடமியின் இரு கூட்டங்களில் வாசிக்கப்பட்டு இரண்டு சிற்றிதழ்களில் வெளிவந்தது. சாகித்ய அகாடமி கதை வாசிப்பிலும் கலந்து கொண்டு 'ராமநேசன் எனது நண்பன் கதையை வாசித்தது மறக்க முடியாத அனுபவம். பத்து கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்புக்கு இத்தனை சக்தியா? என்று எண்ணி வியந்த நாட்கள் அவை. 2011 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது இத்தொகுப்புக்கு கிடைத்தது. அதன் மூலம் மறைந்த எழுத்தாளர் ஜெயந்தனின் புதல்வர் சீராளன் எனக்கு நண்பராக கிடைத்தார். இன்றுவரை அவரது நட்பும், அன்பும் தொடர்வதை அன்புடன் எண்ணிக்கொள்கிறேன்.

எனது வாழ்க்கை பாதை மெல்ல மாறத்துவங்கியது. பிசியோதெரபி மருத்துவத்தை விட்டு ஊடகங்களில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு உதவியவர் அன்பு நண்பர் சுந்தரபுத்தன். நண்பர் பேரழகன் பாலாவையும் இந்நேரத்தில் மறக்க இயலாது. எத்தனையோ நெருக்கடியான காலங்களில் என்னுடன் இருந்திருக்கிறார்.
சினிமாத்துறையில் இந்த கதைகளை வாசித்த நண்பர்கள் அடிக்கடி என்னுடன் போனில் பேசி நண்பர்கள் ஆனார்கள். நகரத்திற்கு வெளியே கதையை ஒரு ஆர்ட் சினிமாவாக அப்போது ஐம்பது லட்சம் பட்ஜெட்டில் எடுத்துக்கொடுக்க தயாரிப்பாளர் ஒருவர் கேட்டார். விரிவான திரைக்கதையும் அமைத்து விட்டேன். வெறுமனே திரைப்பட விழாக்களில் மட்டும் பங்கு கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதை வியாபாரரீதியாகவும் எடுத்துவிடலாம் என முயன்றேன். சினிமா தொழில் நுட்பத்தை ஆறு மாதங்களில் பயின்றேன். எனக்கு திரைக்கதை எழுத தெரிந்ததாலும் , சினிமா குறித்து நிறைய விஷயங்களை கேள்வி ஞானத்தில் தெரிந்து கொண்டதாலும் சினிமா தொழில்நுட்பம் பயில்வது கடினமாக இல்லை. இரண்டு சிறிய படங்கள். சில விளம்பர படங்கள் என்று பணியாற்றினேன். படம் எடுக்கும் தைரியம் வந்தவுடன் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்து இதற்கான நடிக, நடிகர்களை தேர்வு செய்ய சொன்னார். இதில் உள்ள பிரியா கதாபாத்திரத்தில் நடிக்க அன்று முன்னணியில் இருந்த நடிகை ஒருவர் ஒத்துக்கொண்டார். அவர் எனக்கு நல்ல தோழியாக இருந்ததால் சில உதவிகளையும் படத்துக்காக செய்தார். நல்ல இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் வேண்டும் என இருவரும் முடிவெடுத்தோம். அவரே மற்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க அவரது தோழிகளை சிபாரிசு செய்தார். அவர்களும் அப்போது ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்து இருந்தார்கள். பாக்கியம் கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்த நடிகை இன்றும் நல்ல படங்களை நடித்து கொண்டிருக்கிறார். இவர்கள் மூவரும் கதை சொன்ன கொஞ்ச நேரத்தில் அந்த கதாபாத்திரங்களாக மாறி பேச ஆரம்பித்தார்கள், இதற்கு என்ன மாதிரியான உடைகளை பயன்படுத்தலாம். எப்படி மூவருக்கும் வித்தியாசம் காட்டலாம் என்று அருமையான விவாதம் நடத்த ஆரம்பிக்க பல திறமையான நடிகைகளை நடிக்க விடாமல் பெரும்பாலும் டூயட் மட்டும் ஆட விடுகிறார்கள் என்ற எண்ணம் மேலோங்கியது. எல்லாம் இறுதியான பின் தயாரிப்பாளர் படத்தை கன்னடத்தில் எடுக்கலாம். அங்கே என்றால் இலவச லொகேஷன்களை வாங்க முடியும் என்றார். நானும் சரி என்றேன். அவருக்கு எதிர்பாராத விதமாக வியாபாரத்தில் லாபமாக பெரிய தொகை கிடைத்து விட்டது. அவருக்கு படம் எடுக்கும் ஆர்வமும் குறைந்துவிட்டது. அதனால் திரையுலகை விட்டு வெளியேறி சென்றுவிட்டார். நானோ சினிமாவுக்குள் நுழைந்து திரும்ப முடியாத தூரம் வந்துவிட்டு இருந்தேன். இந்த காலகட்டங்களில் எழுத்து, வாசிப்பு எல்லாம் முழுக்க எனக்கு குறைந்து போய் விட்டது. சரி எல்லாம் கமர்சியல் கதை என்று கேட்கிறார்களே என்று வித்தியாசமான பின்னணியில் முழுக்க நகைச்சுவை ததும்பும் படம் ஒன்றுக்கு திரைக்கதை எழுதி விட்டேன். எளிதாகவே அந்த கதைக்கு தயாரிப்பாளர் கிடைத்தார். இரண்டு பாடல்களும் கம்போஸ் செய்தோம். நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை ஒன்று சேர்த்தோம். படப்பிடிப்புக்கு தயாராகும் போது தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் ப்ராஜெக்ட் நின்றது. இதெல்லாம் நடந்து முடிய எனக்கும் இலக்கியத்துக்கும் நான்கு நான்கு வருட இடைவெளி விழுந்தது. அதன் பிறகு ஊடகத்துறையில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். மீண்டும் எழுத ஆரம்பித்தேன். இலக்கிய உலகில் நிறைய புதியவர்கள் உருவாகி இருந்தார்கள், ஒரு இலக்கிய கூட்டத்திற்கு டிஸ்கவரி புத்தக கடைக்கு சென்றிருந்தேன். அங்கே நண்பர்கள் வேல்கண்ணனும், அமிர்தம் சூர்யாவும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அது யாவரும்.காம் நடத்திய கூட்டம். அங்கு தான் ஜீவ கரிகாலனை முதன்முதலில் பார்த்தேன். அப்போது அவருக்கு என்னை யார்? என்று தெரிய வாய்ப்பில்லை. பின்னர் வேல்கண்ணன் வாயிலாக என்னைப்பற்றி அறிந்து கொண்டார் என தெரிந்து கொண்டேன். அவர்கள் யாவரும்.காம் சார்பாக நடத்திய சில விமர்சன கூட்டங்களுக்கு என்னை பேச அழைத்தார்கள். நானும், விநாயக முருகனும் சேர்ந்து 'செவ்வி இலக்கிய அமைப்பு' தொடங்கி கூட்டங்களை நடத்தினோம். அப்போது ஒரு ஜீவ கரிகாலனிடம் கௌதம சித்தார்த்தனுக்கு ஒரு கூட்டம் நடத்துவோம் என்று பேசினேன். அவரும் அவ்வாறு நடத்த விரும்பினார். யாவரும்.காம், செவ்வி இலக்கிய அமைப்பு இருவரும் இணைந்து அந்த கூட்டத்தை சிறப்புற நடத்தினோம். ஆனால் அவர்கள் என்னுடைய இந்த தொகுப்பை மறுபதிப்பு கொண்டுவருவார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. நண்பர்கள் ஜீவகரிகாலன், வேல்கண்ணன், கண்ணதாசன் மூவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். யாவரும் பதிப்பகத்தோடு இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் நண்பர்களே...


இந்த தொகுப்பின் மூலம் தான் சக எழுத்தாளர்கள் அபிலாஷ், விநாயகமுருகன் போன்றவர்கள் நண்பர்கள் ஆனார்கள். என்னுடைய பட முயற்சிகளின்

போது உதவி இயக்குநராக என்னுடன் இணைந்த நண்பன் பிரியன் பலமுறை இந்த கதைகள் பற்றி என்னிடம் பேசி மறுபதிப்பு கொண்டுவர வேண்டும் என்று தூண்டியவர். மதிப்பிற்குரிய வண்ணதாசன் அவர்கள் இந்த தொகுப்பு படித்துவிட்டு எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அவருக்கு 'காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன்' 'ஆசியா மேன்சன்' ஆகிய கதைகள் மிகவும் பிடித்திருந்தன என குறிப்பிட்டு இருந்தார். இவர்கள் அனைவருக்கும் நன்றி. நண்பர் பாஸ்கர் ராஜா இந்த தொகுப்பின் மூலம் கிடைத்த முக்கிய நண்பர். நண்பர்கள் கீ.ராவும், கரண் கார்க்கியும் என்னை ஊக்கப்படுத்தி தொடர்ந்து எழுத வைப்பவர்கள். சில வருடங்களுக்கு முன் சென்னை நகரம் குறித்து ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். அதில் இந்த கதைகளை எழுதிய பின்னணியை குறிப்பிட்டு இருந்தேன். அதில் ஒரு பகுதியை இங்கு தருகிறேன். மீண்டும் அவற்றை எழுதுவது இயலாதது.


நகரத்தின் மனிதர்கள் எங்கும் பரபரப்பின் மீது தொற்றிக் கொண்டு இயங்குகிறார்கள். தன் வாழ்வு, தன் குடும்பம், தன் தேவைகள் என்றே அவர்களின் வாழ்க்கை சுருக்கியதால் இருக்கலாம். இவர்களிடம் இருந்து தனிமைப்பட்டவனாய் நான் உணர்ந்தேன். அந்த மாநகரத்தனிமை தான் என்னைக் கதைகள் எழுத வைத்தன. அவசரத்திற்கு உதவி செய்யக்கூட ஆட்கள் வரமாட்டார்கள் என்பதைப் பல முறை கண்டு இருக்கிறேன். சாலை விபத்தின் போது “எனக்கென்ன” என்று ஒதுங்கிப்போகும் ஆட்களுக்கு மத்தியில் ஓரிரண்டு பேர் உதவிக்கு வருவது இன்னும் ஈரம் மிகுந்த மனிதர்கள் இருப்பதையும் காட்டியது. புதிய இடங்களில் வழிகேட்க நான் ஆட்டோ ஓட்டுநர்களையே பயன்படுத்துவேன். பக்கத்தில் இருக்கும் தெருவின் பெயரே தெரியாதவர்களே வீடுகளில் இருக்கிறார்கள். தெரிந்தாலும் தெரியாது என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். என் பக்கத்து வீட்டில் யாருக்கும் நிச்சயம் என் பெயர் தெரியாது என்றே நினைக்கிறேன். தென் மாவட்டங்களில் இருந்து என்னைப் போன்றே நிறைய இளைஞர்கள் வேலை தேடி இங்கு வருகிறார்கள். வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்.

சென்னையின் லாப நோக்கற்ற சந்திக்கும் இடங்கள், ஒவ்வொன்றும், ஷாப்பிங் மால்களாக மாறிவருகின்றன. தனித்த வீடுகள் பெரும்பாலானவை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறியிருகின்றது. செங்கல்பட்டின் எல்லைவரை சென்னை விரிந்திருக்கிறது. வாகனங்களின் நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி சாலையை அடைத்துக் கொண்டு மூச்சுவிட முடியாமல் மேம்பாலங்களில் ஏறிக் கொண்டு இருக்கின்றது. ஒரு காப்பி வாங்கிக் குடித்துக் கொண்டு மணிக்கணக்கில் நண்பர்களோடு கதை பேசிய உட்லண்ட்ஸ் டிரைவ் இன் இன்று அடைக்கப்பட்டு விட்டது. இதன் பாதிப்பால் எழுதியதே “அடைபடும் காற்று” என்றொரு கதை. தந்தையாரின் வீட்டை மட்டும் வைத்துக் கொண்டு அவரின் புத்தக சேகரிப்புகளை பழைய பேப்பர்கடைக்கு போட்ட புத்திரன்களின் மனநிலையைப் பார்த்து எழுதியதே “இருத்தலின் விதிகள்” மகப்பேறு மருத்துவரிடம் செக்கப் செய்ய வரும் திருமணமாகாத இளம் பெண்கள் சிலரின் கதையே “நகரத்திற்கு வெளியே” இப்படிநான் சிலவற்றுக்கு சாட்சியாக இருந்து எழுதியிருக்கிறேன். மாநகரின் சில காட்சிகளை பதிவு செய்திருக்கிறேன். பதிவு செய்யாமல் போனவையே அதிகம், இவ்வளவு நாட்களாக இங்கிருந்தும் என்னால் நகரத்தின் சூழ்ச்சிகளில் ஒன்றைக் கூடக் கற்றுக் கொள்ளவோ பயன்படுத்தவோ முடிந்ததே இல்லை. சாட்சியாக எல்லாவற்றுக்கும் இருந்து கடந்து சென்றதன் விளைவே எனது கதைகள்.


என் வீட்டின் அருகாமையில் அப்போது அஜயன் பாலா இருந்தார். அவர்தான் என்னைக் கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் நெருங்கிய நண்பராக உணரமுடிந்தது. அவர் போகும் இலக்கியக் கூட்டங்கள், நண்பர்கள் சந்திப்பு, சிறப்புத் திரையிடல்கள் என்று என்னையும் கூட்டிச் செல்வார். ஸ்ரீ நேசன், பழனிவேள், ஜோஸ் அன்றாயின், குமார் அம்பாயிரம், விசுவநாதன் கணேசன் எனப் பரவலான இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தினார். ஹபிபுல்லா சாலையில் அவருக்கு ஒரு அறை இருந்தது. அதுவே இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் களமாகவும் விளங்கியது. மாநகரின் சில காட்சிகளை பதிவு செய்திருக்கிறேன். பதிவு செய்யாமல் போனவையே அதிகம், இன்று அய்யப்பமாதவனின் அறை ஹபிபுல்லா சாலையில் இல்லை. அவர் ராயப்பேட்டை சென்றுவிட்டார். விசுவநாதன் கணேசன் வடபழனி போய்விட்டார். இன்று இந்த தி.நகரில் நான் மட்டும் இருக்கிறேன். தேநீர் கடையில் பேசிய பேச்சுக்கள், சந்திப்புகள், நண்பர்களின் இலக்கிய உரையாடல்கள் எதுவும் ஹபிபுல்லா ரோட்டில் இல்லை. வெற்றுத் தனிமை என்னைச் சூழ்ந்து இருக்கிறது. வேறுவழியில்லை இந்த வலிகளை எழுதித்தான் ஆக வேண்டும்.

அய்யப்பன் குடியிருந்த அறையின் சமையலறை மேடையில் கூடப் புத்தகங்கள் இருக்கும், அக்காட்சி இன்றும் என் நினைவில் இருக்கிறது. அய்யப்பன் தான் தொடர்ந்து நான் இயங்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவ்வப்போது பேச்சினூடே சொல்வார். இப்போதெல்லாம் அவர் தனது கேமிராவின் வழியாக கவிதை எழுத ஆரம்பித்து இருக்கிறார். இந்த பதிப்புக்காக தனது புகைப்படங்களை தந்து உதவி இருக்கிறார். முன்னட்டை புகைப்படமும், பின்னட்டை புகைப்படமும் அவரது கைவண்ணத்தில் எடுக்கப்பட்டவை.அவருக்கு எனது நன்றி.


எழுத்தாளர் சு.வேணுகோபால் அருமையான முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். அவரது படைப்புகளின் ரசிகன் நான். அவர் இந்த தொகுப்பிலுள்ள கதைகளை படித்துவிட்டு போனில் அரைமணி நேரம் பல்வேறு நுட்பங்களை பேசியது மறக்க இயலாத விஷயம். அவருக்கு எனது நன்றி. வாசகர்களின் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன். நன்றி நண்பர்களே ... சந்திப்போம் ...

என்றும் அன்புடன்

விஜய் மகேந்திரன்

vijaymahindran@gmail.com

No comments:

Post a Comment